Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் மறைக்கல்வி ஆசிரியர் திருப்பணிப் பொறுப்பை வழங்கினார் திருத்தந்தை
Tuesday, 25 Jan 2022 06:29 am
Namvazhvu

Namvazhvu

உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 5 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு மறைக்கல்வி ஆசிரியர் திருப்பணிப் பொறுப்பை ஜனவரி 2 ஆம் தேதி, இறைவார்த்தை ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் ஒப்படைத்தார். கடந்த ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "Antiquum ministerium" அதாவது, “தொன்றுதொட்டு விளங்கும் திருப்பணிஎன்ற தலைப்பில், வெளியிட்ட திருத்தூது மடல் வழியாக உருவாக்கிய மறைக்கல்வி ஆசிரியர் திருப்பணியை, உலகின் 8 பேரிடம் ஒப்படைத்தார்.

இறைவார்த்தை ஞாயிறன்று இதனை வழங்கி மறையுரையாற்றிய திருத்தந்தை, "கடவுள் நம்மோடு பேசிய வார்த்தையிலிருந்து  அனைத்தும் துவங்கியது என்பதால், இயேசுவில் நம் பார்வையைப் பதித்து, அவரின் வார்த்தைகளை அரவணைத்துக் கொள்வோம்" என அழைப்பு விடுத்தார். இறைவார்த்தை கடவுளை நமக்கு வெளிப்படுத்துவதுடன், மனிதனை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்கிறது என்ற மையக் கருத்தை தன் மறையுரையில் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் வார்த்தைகள் நமக்கு மகிழ்வையும் நம்பிக்கையையும் தருபவைகளாக உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

திருஅவையின் வாழ்வு மற்றும் அதன் மேய்ப்புப்பணி நடவடிக்கைகளின் மையமாக இறைவார்த்தை இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனை வழிபடுவதையும் மனிதகுலம் மீதான அக்கறையையும்  இணைத்து செயல்படுவோம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.