இளைய தலைமுறைகள், குடும்பங்கள், ஒன்றிணைந்த மனிதாபிமானம், உடன் பிறந்த நிலையுடன் வாழும் உலகு ஆகியவற்றிற்காக கல்வி பணியாற்றிவரும் ’புனித அகுஸ்தினாரின் விதிமுறைகளுக்குட்பட்ட நமதன்னை துறவுசபை’ என்ற சபையின் அங்கத்தினர்களுக்குத் தன் பாராட்டுக்களை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டார்.
தங்கள் பொதுஅவைக்கூட்டத்தை நடத்தியபின் தன்னை சந்திக்க திருப்பீடத்திற்கு வந்திருந்த, ’புனித அகுஸ்தினாரின் நியதிகளைப் பின்பற்றும் நமதன்னை துறவுசபை’ பிரதிநிதிகளுக்கு உரை வழங்கிய திருத்தந்தை, பொதுக்கல்விப் பணியிலும், நீதிக்கானக் கல்வியிலும் தங்களை ஈடுபடுத்துவதுடன், ஏழைகளுக்கு மிக நெருக்கமாக இருப்பதும் குறித்து அவர்களைப் பாராட்டினார்.
பணிபுரியும் இடங்களில் எல்லாம் நம்பிக்கை, மற்றும் மகிழ்வின் சமூகங்களாகச் செயல்பட்டு, ஏழைகளை வரவேற்பதற்குக் கற்றுக்கொடுப்பவர்களாகவும், இளையோரின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கு உதவுபவர்களாகவும், மகிழ்வு மற்றும் ஒருமைப்பாட்டின் பாதையில் கல்விப்பணியைத் தொடர்ந்திட, அவர்களுக்கு தன் வாழ்த்துக்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.
கோவிட் பெருந்தொற்றால் பல்வேறு பாதிப்புக்கள், குறிப்பாக கல்வியில் பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ள இன்றைய நிலையில், இளையோரோடு, குறிப்பாக, தனிமையிலும், கவலையிலும், மனத்தளர்வாலும் வாடுவோருக்கு மிக நெருக்கமாக இருந்து அவர்களில் நம்பிக்கையை வளர்க்க உதவ வேண்டியதன் அவசியத்தை திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார்.