ஜனவரி 26 ஆம் தேதி, புதனன்று தனது மறைக்கல்வி உரைக்குப் பின்பு இறைமக்களிடம், இந்த நாள் முழுவதும் உக்ரைனின் அமைதிக்காக இறைவேண்டல் செய்யுங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக் கொண்டார். உக்ரைனுடனான தனது எல்லையில் இரஷ்யா துருப்புக்களை குவித்துள்ள நிலையில், ஜனவரி 26 ஆம் தேதி, ஞாயிறன்று அமைதிக்காக அனைத்துலக இறைவேண்டல் தினத்தை நடத்த வேண்டும் என்று திருத்தந்தை ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார்.
"நாடு சகோதரத்துவ உணர்வில் வளரவும், அனைத்து காயங்கள், அச்சங்கள் மற்றும் பிளவுகள் நீங்கும்படியாகவும் இறைவேண்டல் செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய இறைவேண்டல்களும் வேண்டுதல்களும் மேலெழும்பிச்சென்று உலகத் தலைவர்களின் மனதையும் இதயங்களையும் தொடவேண்டும் என்றும், இதனால் உரையாடல் மேலோங்கி, மக்களுக்கான பொதுநலன்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உக்ரைனில் இன்னும் இரத்தம் சிந்தும் அச்சம் உள்ள நிலையில், அங்கு அரசுப் படைகளுக்கும், நாட்டின் கிழக்கில் இரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான மோதல்களால் ஏற்கனவே 14,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும், உக்ரைன் எல்லையில் இரஷ்யா சுமார் 100,000 துருப்புகளைக் குவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கன.