Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் புனித பவுலடியார் மனமாற்ற விழா குறித்த திருத்தந்தையின் மறையுரை
Thursday, 27 Jan 2022 10:18 am
Namvazhvu

Namvazhvu

ஜனவரி 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை திருஅவையில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்வ ஒன்றிப்பு செப வாரத்தின் இறுதி நாளான ஜனவரி 25 ஆம் தேதி, செவ்வாயன்று, அதாவது, புனித பவுலின் மனமாற்ற விழாவன்று மாலை உரோம் நேரம் 5.30 மணிக்கு, இந்திய நேரம் இரவு 10 மணிக்கு ஏனைய கிறிஸ்தவ சபை பிரநிதிநிதிகளுடன் இணைந்து செபவழிபாடு ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் நடத்தினார்.

தனது மறையுரைக்கான மையக்கருத்தாக மூன்று ஞானிகளின் பயணத்தை எடுத்துக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1. கிழக்கில் அவர்களின் தொடக்கம் 2.  ஜெருசலேம் வழியாக அவர்களின் பாதை 3. பெத்லகேமுக்கு அவர்களின் இறுதி வருகை, ஆகிய தலைப்புகளில் தன் சிந்தனையை வழங்கினார்.

முதலாவதாக, சூரியன் உதிக்கும் கிழக்கில் விண்மீனைக் கண்ட ஞானிகள் தங்கள் சொந்த அறிவு மற்றும் மரபுகளில் திருப்தி அடையாமல், அதைவிட மேலான ஒன்றை அடைய விரும்பினர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சோர்வுறச் செய்யும் நீண்ட பாதையைக் குறித்து கவலைப்படாமல்  விண்மீனான இயேசுவையும், ஒற்றுமைக்கான அவரது அழைப்பையும் பின்பற்றுமாறு அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

இரண்டாவதாக, ஏரோதும் அவருடன் எருசலேம் மக்களும்  கலக்கம் அடைந்திருந்த வேளையில், ஞானிகள் மூவரும் எருசலேம் திருநகருக்குக் கொண்டுவரப்பட்டார்கள் என்றும், புனித நகரத்தில், ஞானிகள் விண்மீனின் ஒளியை காணவில்லை, ஆனால் இந்த உலகின் இருண்ட சக்திகளின் எதிர்ப்பை அனுபவித்தனர் என்றும் தெரிவித்தார்

முழு கிறிஸ்தவ ஒற்றுமையை நோக்கிய நமது பயணத்தில், அந்த மக்களை முடக்கிய அதே காரணத்திற்காக நாமும் குழப்பம் மற்றும் பயத்தால் பயணத்தின் இடையே நிறுத்தப்படலாம் என்று கூறிய திருத்தந்தை, நமது பாரம்பரியங்களையும் பழக்கவழக்கங்களையும் சீர்குலைக்கும் நவீனமயங்களுக்குப் பயப்படாமல், ஒருவரையொருவர் நம்பி ஒன்றாகப் பயணிக்க கிறித்தவ மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மூன்றாவதாக, ஞானிகள் மூவரும் பெத்லேகம் சென்று இயேசுவைக் கண்டு வணங்கினார்கள் என்பது  நற்செய்திகளின் இறுதியில் கலிலேயா மலையில் உயிர்த்த ஆண்டவர் முன்பு, சீடர்கள் அனைவரும் அவரை வணங்கினார்கள் என்பதை முன்னுரைக்கிறது என்றும் திருத்தந்தை எடுத்துக்காட்டினார்.

மேலும், இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒற்றுமையின் முழுமைக்காக ஏங்கும் சமகால கிறிஸ்தவர்களுக்கு இறைவாக்கு நிறைவேறும் அடையாளங்களாக மாறுகின்றன என்றும், இந்த ஒற்றுமையை, இறைவனை வணங்குவதன் வழியாக மட்டுமே அடைய முடியும் என்றும் விளக்கிய திருத்தந்தை, முழு ஒற்றுமையை நோக்கிய நமது பயணத்திற்கு, இன்னும் தீவிரமான இறைவேண்டலும், இறைவழிபாடும் தேவை என்று வலியுறுத்தினார்.