இலங்கையில் 2019 ஆம் ஆண்டு இயேசு உயிர்ப்பு நாளில் கோவில்களும் உணவு விடுதிகளும் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது குறித்த உள்நாட்டு விசாரணைகள் மக்களுக்கு நீதியை வழங்க தவறியுள்ளதால், அனைத்துலக சமுதாயத்திடம் இதனை எடுத்துச்செல்ல உள்ளதாக கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அறிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில், இந்த வழக்கை அனைத்துலகச் சமுதாயத்திடம் வைப்பதைத் தவிர வேறு வழியில்லை எனத் தெரிவித்த கர்தினால் இரஞ்சித் அவர்கள், நாட்டிற்குள்ளேயே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன எனவும் தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வேளையில், உள்நாட்டு விரசாரணைகளில் நியாயம் கிடைக்காது எனத் தோன்றுவதால் இதனை ஐ.நா நிறுவனத்திற்கும் பலம் வாய்ந்த சில நாடுகளுக்கும் எடுத்துச்செல்ல உள்ளதாக கர்தினால் இரஞ்சித் குறிப்பொன்றைக் கொடுத்திருந்தார்.
இயேசு உயிர்ப்பு நாளில் 2019 ஆம் ஆண்டு, 3 கோவில்களும் 3 உயர்மட்ட உணவு விடுதிகளும் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளானதிற்குப் பின்னால் இருப்பவர்கள் குறித்த முழுவிபரங்கள் வெளியிடப்படும்வரை நீதிக்கானப் போராட்டத்தில் ஒயப்போவதில்லை என இலங்கையின் கத்தோலிக்கர்கள் அறிவித்துள்ளனர்.