தூய இதய மரியன்னை சபையின் அறிக்கை!
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே, மிக்கேல்பட்டியில் உள்ள எமது திரு இருதய மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவரின் மரணம், எம் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்தம் இழப்பால் வருந்தும் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், சக மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக எம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மாணவியின் இழப்பு எம் பள்ளிக்கும், நிர்வாகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இறந்த லாவண்யா எட்டாம் வகுப்பிலிருந்து எம் விடுதியில் தங்கிப் படித்து வந்தாள். விடுமுறைகளில் கூட, வீட்டிற்குச் செல்லாமல், எம்மோடு தங்குவதையே விரும்பியவள். அவ்விதத்தில் எங்கள் அனைவருக்கும் பிள்ளையாகவே அவள் வளர்ந்தாள். அதனால்தான் பத்தாம் வகுப்பில் 489/500 மதிப்பெண்கள் பெற்றாள். அவளது இறப்பை ஒட்டிப் பல்வேறு வதந்திகள் தற்போது பரவுகின்றன. அச்சூழலில், எம் பள்ளிகளின் கூட்டு மேலாண்மை சார்பாகக் கீழ்க்கண்ட செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
எம் தூய இதய மரியன்னை சபை கடந்த 180 ஆண்டுகளாய்க் கல்விப்பணியில் ஈடுபட்டுள்ளது. மேற்சொன்ன பள்ளிகள் 160 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. மாணவிகளின் நலன் கருதியே அப்பள்ளியில் 90 ஆண்டுகளாய் விடுதியும் செயல்படுகிறது. தமிழ் மண்ணில் பெண்கல்வியிலும், பெண் விடுதலையிலும் எம் சபையினுடைய பங்களிப்பு முதன்மையானது. பட்டி தொட்டியெல்லாம் தமிழ்வழிப் பள்ளிகளை நாங்கள் நடத்தி வருகின்றோம். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு, இந்தியச் சமூகம் கல்வி மறுத்த காலத்தில், எம் பள்ளிகளே பொதுக்கல்விக்கான விடியலாய் அமைந்தது. அதனை நாங்கள் அர்ப்பணத்துடன் செய்கின்றோம்.
பெண் குழந்தைகளின் மகிழ்ச்சி, எதிர்காலம், அவர்களின் ஒளிமயமான வாழ்வு இவையே எம் கல்வி நிறுவனங்களின் இலக்காகும். எம்மிடம் பயிலும் குழந்தைகள் பல மதங்களையும், சமூகத்தையும் சார்ந்தவர்கள். அச்சூழலில், அனைவருக்குமான சமயசார்பற்ற கல்வியை எம் சபை அளித்து வருகிறது. எவரது மத நம்பிக்கையிலும் நாங்கள் குறுக்கிடுவதில்லை. அனைவரது நம்பிக்கையையும் பெரிதாக மதிக்கிறோம். இதுவே எங்கள் பொது வாழ்வின் அடிப்படையாக உள்ளது.
கடந்த 19.01.2022 அன்று இறந்து போன எம் மாணவி, தன்னுடைய இறுதி வாக்குமூலத்தில், விடுதிக் காப்பாளர் மீது குற்றம் சுமத்தியதாக அறிகின்றோம். காவல் துறை மற்றும் கல்வித்துறையின் முறையான விசாரணைக்கு நாங்கள் அணியமாக உள்ளோம். அது தொடர்பான சட்ட விசாரணைகளுக்கு எப்போதும் நிர்வாகம் துணை நிற்கும். கிறிஸ்தவச் சமூகம் சட்டத்தை மதித்து வாழும் ஒரு சமூகமாகும். அதே வேளையில் இத்துயரச் சம்பவத்தைத் தங்கள் அரசியலுக்காக, ஒருசில பிரிவினர் கையில் எடுப்பதும், திசை திருப்புவதும், பொய்களை விதைப்பதும், ஊடகங்களில் எம்மை அவதூறு செய்வதும், எம் பணிக்குக் களங்கம் கற்பிப்பதும் பல வழிகளில் தொடர்கிறது. இதுகுறித்து நாங்கள் பெரிதும் வருந்துகிறோம்.
பல்லாண்டுகளாய், பல இலட்சம் மாணவிகளுக்குக் கல்வி வழங்கி வரும் எம் நிறுவனங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டு இதுவரை எழுந்ததில்லை. ஒவ்வொரு குழந்தையின் ஆளுமையை, சுதந்திரத்தை அவர்களின் தனித்தன்மையை நாங்கள் பெரிதும் மதிக்கின்றோம். மதமாற்ற நடவடிக்கை என்ற குற்றச்சாட்டிற்கு எவ்விதத்திலும் எம் நிறுவனங்களில் எந்த அடிப்படையும் இல்லை. எம் பள்ளியில், கல்லூரிகளில் பயின்ற/பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்களே இதற்குச் சாட்சியாவர். எம் குழந்தைகளின் மதங்களைக் கடந்த மனித மாண்பின் அடிப்படையிலும், இந்திய அரசியல் சாசனத்தின் விழுமியங்கள் அடிப்படையிலுமே எம் கல்விக் கூடங்கள் செயல்படுகின்றன. அச்சூழலில் இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி, எம் நிறுவனங்களைக் குற்றப்படுத்துவதும், எமது சமூக அர்ப்பணத்தைக் கொச்சைப்படுத்துவதும் மிகவும் வருந்தத்தக்கது.
எம் மாணவிகளின் எதிர்கால வாழ்விற்காக இரவு பகலாகத் தம்மை அர்ப்பணித்துள்ள எம் சபையின் அருள்சகோதரிகள், எம் ஆசிரியப்பெருமக்கள், பணியாளர்கள், எம் பெற்றோர்கள் அனைவரும் இதுபோன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களைப் புறந்தள்ள வேண்டுமெனத் தாழ்மையுடன் வேண்டுகிறோம். உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாமென ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறோம்! இதுபோன்ற துன்ப வேளைகளில் உண்மையின்பால் உறுதியுடன் நிற்கும் அனைவர்க்கும் எம் நெஞ்சார்ந்த நன்றி!