ஜனவரி 28 ஆம் தேதி வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் கத்தோலிக்க ஊடகங்களின் அனைத்துலக கூட்டமைப்பினரை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றினார். தகவல்தொடர்புகளின் கருப்பொருளைப் பற்றியும், குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பான சில சிக்கலான பிரச்சினைகளை கிறிஸ்தவத் செய்தித் தொடர்பாளர்கள் கையாள வேண்டிய விதத்தைப் பற்றியும் ஒன்றாகச் சிந்திக்க உங்களை அழைக்கிறேன் என்று கூறி திருத்தந்தை தன் உரையைத் தொடங்கினார்.
தனது உரையில், இணைந்து பணியாற்றுவது, யாருக்காகப் பணியாற்றுவது மற்றும் உண்மைக்காகப் பணியாற்றுவது என மூன்று விடயங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் தனது சிந்தனைகளை செய்தியாளர்களோடு பகிர்ந்து கொண்டார்.
இணையவழித் தொடர்பு, பகிர்தல் திறன்கள், அறிவு மற்றும் பொருத்தமான தகவல்களை வழங்குவதற்கான பங்களிப்புகள் ஆகியவற்றுக்காக தகவல் துறையில் ஒன்றாக இணைந்து வேலை செய்வது அவசியம் என்பதை எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொற்றுநோயின் விளைவுகளையும், அதனால் ஏற்படும் சமூகப் பிளவுகளையும் நாங்கள் உணரும் நேரத்தில், கிறிஸ்தவ செய்தித் தொடர்பாளர்களாக நீங்கள் ஒரு செய்தியை அனுப்புவதே, ஒரு செய்தியாகும் என்றுரைத்தார்.
இரண்டாவதாக யாருக்காகப் பணியாற்றுகிறோம் என்பதில் கிறிஸ்தவர்களாகிய நாம் அநீதிகளுக்கும் பொய்களுக்கும் எதிரான நிலையில், எப்போதும் மனிதர்களை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறோம் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்கள் நோக்கம் தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவது, போலிச் செய்திகளை மறுப்பது மற்றும் மனதை கவரக் கூடிய செய்திகளைக் கையாள்வது போன்றவையாக இருந்தாலும், தகவல்களுக்கும் மக்களுக்கும் இடையிலான அடிப்படை வேறுபாட்டை ஒருபோதும் கவனிக்காமல் விடக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
மூன்றாவதாக, உண்மைக்காகப் பணியாற்றுகிறோம் என்பதைக் குறித்துப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தரவுகளைச் சரிபார்ப்பதிலும், அவற்றைப் பொருத்தமான முறையில் வழங்குவதிலும், உண்மைக்கான நமது சொந்தத் தேடலைத் தொடர்வதிலும் நாம் ஒருபோதும் சோர்வடையக்கூடாது என்றும், ’நானே உண்மை’ என்று கூறிய இயேசுவின் வழியில், அனைவரும் இணைந்து ஒரு நியாயமான, உறுதியான மற்றும் நிலையான சமுதாயத்தை மேம்படுத்துவதற்காகவே பணியாற்றுகிறோம் என்று உணர்ந்துகொள்ளவும் திருத்தந்தை அழைப்புவிடுத்தார்.
இறுதியாக, கோவிட் 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும் அவர்தம் குடும்பங்களையும் நினைவு கூற அவர்களுக்கு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செய்தியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் ஆசீரையும் வழங்கி தனது உரையை நிறைவு செய்தார்.