Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தையின் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை
Tuesday, 01 Feb 2022 11:20 am
Namvazhvu

Namvazhvu

திறந்த மனமற்ற நிலையையும், மறுதலிப்புகளையும் எதிர்நோக்க வேண்டியிருந்தாலும் கிறிஸ்தவர்களின் பணி தொடர்ந்து நன்மை செய்வதாகவே இருக்கவேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார்.

தன் சொந்த இடமாகிய நாசரேத்தில், தன் முதல் போதனையை வழங்கியபோது, மக்களின் எதிர்ப்புணர்வை சந்தித்த இயேசு, ஒவ்வொரு கிறிஸ்தவரும் தாழ்ச்சியுடன் இறைவனின் வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைச் சொல்லித் தருகின்றார் என ஜனவரி 30 ஆம் தேதி, ஞாயிறு நண்பகல் மூவேளை செபஉரையின்போது திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இயேசுவிடமிருந்து உண்மைகளின் வார்த்தைகளை அல்ல, மாறாக அரும் அடையாளங்களை மக்கள் எதிர்பார்த்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இத்தகைய எதிர்பார்ப்பால் இயேசுவின் மீதான வெறுப்பு வெளிப்பட்டதையும், அதுவே இயேசுவை, எந்த இறைவாக்கினரும் தன் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்று கூற வைத்ததையும் எடுத்துரைத்தார்.

இயேசுவின் இந்த வார்த்தைகளை வைத்துப் பார்க்கும்போது, தன்னை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார், இருப்பினும் அவர் போதிக்கச் சென்றது, இறைவன் மனிதன்மீது கொண்டிருந்த அன்பையும், நாம் அவரை ஒதுக்கினாலும் அவர் நம்மை ஒதுக்கிவிடுவதில்லை என்பதையும் எடுத்துக்காட்டுவதற்கே என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.

வத்தித்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையில், பிள்ளைகள் தங்களுக்கு எதிராக என்ன செய்தாலும், பெற்றோர்கள் அவர்களை அன்பு செய்வதிலிருந்து விலகுவதில்லை என்பதை எடுத்துரைத்து, பெற்றோரைப்போல் நம்மை அன்புகாட்டும் கடவுளை நம் தினசரி வாழ்வில் நாம் ஏற்றுக்கொள்வோம் என்ற அழைப்பையும் விடுத்தார்.