கடந்த சில வாரங்களாக புனித யோசேப்பு குறித்த தன் சிந்தனைகளை புதன் மறைக்கல்வியுரைகளில் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 2 ஆம் தேதி, இயேசுவை காணிக்கையாக ஒப்புக்கொடுத்த திருநாளான புதனன்று, புனித யோசேப்பும் புனிதர்களின் சமூக உறவும் என்ற தலைப்பில் கருத்துக்களை வழங்கினார். புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் மடலிலிருந்து ஒரு சிறு பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது.
உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். (1 கொரி 12: 12-13).
பின், திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வுகள் தொடர்ந்தன.
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, புனித யோசேப்பு குறித்த நம் மறைக்கல்வித்தொடரில், நாம் இதுவரை, நற்செய்திகளில் இம்மாபெரும் புனிதரைக் குறித்து உரைக்கப்பட்டுள்ளவைகளை ஆராய்ந்து, அவர் மீதான பக்தி முயற்சி எவ்வாறு வளர்ந்துள்ளது என்பது பற்றிக் கண்டோம்.
புனிதர்கள் பெயரிலான வழிபாடுகளும், அவர்களின் பரிந்துரைகள் மீதான நம் நம்பிக்கைகளும், புனிதர்களின் ஒன்றிப்பாக விளங்கும் திருஅவையின் மறையுண்மையில் அடித்தளத்தைக் கொண்டுள்ளன. நம்மைக் காப்பாற்றும் கிறிஸ்துவின் தியாகத்தால் மீட்கப்பட்டு, அவரின் மறையுடலின் அங்கத்தினர்களாக இணைக்கப்பட்டுள்ளோம்.
அவர்களின் பரிந்துரை மீதான நம் முழு நம்பிக்கை, கிறிஸ்துவில் அவர்களுடன் நாம் கொண்டிருக்கும் ஒன்றிப்பிலிருந்தும், திருப்பயணியாக இவ்வுலகில் இருக்கும் திருஅவையையும், வானகத்தில் இருக்கும் புனிதர்களையும் ஒன்றிணைக்கும் ஆன்மிக ஒருமைப்பாட்டின் இணைப்பு வளையத்தில் இருந்தும் பிறந்ததாகும்.
கிறிஸ்தவர்கள் எப்போதும், புனிதர்களை இயேசுவின் நண்பர்களாக நோக்கி, அதேவேளை, நம் வாழ்வின் முக்கியமான நேரங்களில் நமக்கு எப்போதும் உதவவும், ஆதரவு வழங்கவும் தயாராக இருக்கும், நம் நண்பர்களாகவும் கண்டுகொள்கிறோம். புனிதர்களுக்குள், இயேசுவின் தாயும் நம் அன்னையுமாகிய புனித கன்னிமரியாவை திருஅவை சிறப்பான விதத்தில் வணங்குகிறது. அதேபோல், திருக்குடும்பத்தை இறைவன் ஒப்படைத்த புனித யோசேப்புக்கும் சிறப்பிடம் கொடுத்து கௌரவிக்கிறோம். பல ஆண்டுகளாக நான் தினமும் எடுத்துரைத்து செபித்துவரும் புனித யோசேப்பு மீதான செபத்தின்வழி நம்மை புனித யோசேப்பின் பாதுகாவலில் வைப்போம். இயேசு, மற்றும் அன்னை மரியாவின் ஒன்றிப்பில் புனித யோசேப்பின் நட்புணர்வு மற்றும் அன்பின் மிகப்பெரும் வல்லமையயை நமக்கு கற்றுத்தருமாறு அவரை நோக்கி வேண்டுவோம்.
இவ்வாறு தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட துறவறத்தார் மற்றும் அர்ப்பணவாழ்வில் ஈடுபட்டோருக்கான உலக தினம் பற்றி குறிப்பிட்டு, அவர்களுக்காக செபிக்குமாறு வேண்டினார். தான் தினமும் புனித யோசேப்பின் பரிந்துரை வேண்டி செபிக்கும் செபத்தை எடுத்துரைத்து, பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.