சாலையோர சிறார்களின் விடிவெள்ளி அருள்பணி. அந்தோனி தைப்பரம்பில் ச.ச மறைந்தார்.
கொல்கத்தா வீதிகளில் அநாதைகளாக ஆதரவற்று திரிந்த சாலையோர சிறார்களின் வாழ்வு ஈடேற தம்மையே அர்ப்பணித்து அவர்களுக்கு அடைக்கலம் தந்து ஒப்பற்ற மனிதநேயப் பணியை கடந்த முப்பது ஆண்டுகளாக ஆற்றிய சலேசி சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் அந்தோனி தைப்பரம்பில் ஏப்ரல் ஆம் தேதி மறைந்தார். 1985 ஆம் ஆண்டு தம் சிறப்புப் பணியை மேற்கொண்ட இவர், கல்கத்தாவின் புகழ்பெற்றப் பகுதியான ஹெளராவின் சேரி பகுதிகளில் 14 சாலையோரச் சிறார்களுடன் இரவு தங்கும் விடுதியைத் தொடங்கி அவர்களுடன் வாழ்ந்தார். நம்பிக்கை இல்லம் என்றழைக்கப்படும் ஆஷா இல்லங்களைத் தொடங்கினார். 1991 ஆம் ஆண்டு இரண்டாவது இல்லத்தையும் 1995 ஆம் ஆண்டு மூன்றாவது இல்லத்தை புனித அன்னை தெரசா அவர்களே திறந்து வைத்து இவரை ஊக்கப்படுத்தினார். இதுவரை மேற்கு வங்கத்தின் நாடியா மற்றும் கல்கத்தா மாவட்டங்களில் ஏறக்குறைய 23 ஆஷா இல்லங்களைத் தொடங்கி ஏறக்குறைய ஆயிரக்கணக்கான சாலையோர சிறார்களின் வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சியுள்ளார். 1995 ஆம் புது தில்லிக்குச் சென்ற இவர் அங்கு இல்லத்தைத் தொடங்கினார். ஹரியானா, உத்தர பிரதேசத்திலும் தம் பணியை விரிவுப்படுத்தினர். இவர் ஏறக்குறைய எண்பதாயிரம் சாலையோரச் சிறார்களை மீட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாபைப் பூர்விகமாகக் கொண்ட இவர் 1950 ஆம் ஆண்டு சலேசிய சபையில் சேர்ந்தார். சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு இளைஞர்கள் குழந்தைகளுக்கு பணியாற்றும்படி பணிக்கப்பட்டார். சாலையோரச் சிறார்களுக்கான இப்பணியை மிகச் சிறப்பாக ஆற்றிய இவர் தம் வயது முதுமையினால் 84 வயதில் புது தில்லியில் மார்ச் 19 ஆம் தேதி காலமானார். இவரது அடக்கச் சடங்கை புது தில்லியின் பணி நிறைவுப் பெற்ற ஆயர் மேதகு வின்சென்ட் கன்செஸ்ஸோ நிறைவேற்றினார். இவர் சாலையோரச் சிறார்களின் விடிவெள்ளி என்றால் அது மிகையன்று.