Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான திருப்பீட அவையின் அழைப்பு
Friday, 04 Feb 2022 07:20 am
Namvazhvu

Namvazhvu

பிப்ரவரி 4 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அல்-அசார் இஸ்லாமிய தலைமைக்குரு  அகமத் அல்-டாயெப் ஆகியோருடன் சேர்ந்து, துபாயில், மனித உடன்பிறந்தஉணர்வு என்ற இரண்டாவது அனைத்துலக தினத்தை காணொளி செய்தி வழி உரை நிகழ்த்தி நிறைவேற்றினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வுக்கான அமைச்சகம், திருத்தந்தையின் மனித உடன்பிறந்த உணர்வின் உயர் குழு, அல்-அசார் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டு, எக்ஸ்போ துபாய் 2020ன் பின்னணியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மதங்களுக்கு இடையிலான உரையாடலுக்கான திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் மைக்கில் ஏஞ்சல் ஆயிசோ குயிக்சோ அவர்கள் ஓர் உரையாளராகப் பங்கேற்றார் என்று திருப்பீடச் செய்தி கூறுகிறது.

அனைத்துலக மனித உடன்பிறந்த உணர்வு தினத்தை கொண்டாடுவதில், இந்நாளைப் பொருத்தமானதாக கருதும் விதத்தில், அனைவரும்  இணைந்து வந்து இறைவேண்டல் செய்ய அழைக்கும் திருப்பீடத்தின் மதங்களுக்கிடையிலான உரையாடலுக்கான அவை, திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் அல்-அசார்  இஸ்லாமிய தலைமைக்குருவின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக, மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், எகிப்தின் அல்-அசார் பல்கலைக்கழகத்தின் இஸ்லாம் உயர்குரு அகமத் அல்-டாயெப் அவர்களும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில், 2019 ஆம் ஆண்டு, பிப்ரவரி 4 ஆம் தேதியன்று, மனித உடன்பிறந்தஉணர்வு என்ற வரலாற்று சிறப்புமிக்க ஏட்டில் கையெழுத்திட்டனர். அந்த ஏட்டின் பரிந்துரைகளை செயல்படுத்தும் நோக்கத்தில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி, மனித உடன்பிறந்த உணர்வின் உயர்மட்டக் குழு உருவாக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரையால் ஐக்கிய நாடுகள் நிறுவனம், மனித உடன்பிறந்த உணர்வின் உலக நாளை உருவாக்கியது.