Namvazhvu
குடந்தை ஞானி ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிய திருத்தூதர் பணி அலுவலகம்
Monday, 07 Feb 2022 06:09 am
Namvazhvu

Namvazhvu

பிப்ரவரி 2 ஆம் தேதி, புதனன்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வத்திக்கானுக்கு இடையிலான உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக்  குறிக்கும் வகையில், அபுதாபியில் ஒரு புதிய திருத்தூதர் பணி அலுவலகத்தைத்  திருப்பீட அலுவலகத்தின் அதிகாரி, பேராயர் எட்கர் பெனா பர்ரா திறந்து வைத்தார்.

திருப்பலி நிறைவேற்றி, திருத்தந்தையின் அன்பான வாழ்த்துக்களையும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு அவருடைய ஆன்மீக நெருக்கத்தையும் தெரிவித்த பேராயர் எட்கர் பெனா பர்ரா அவர்கள், ஒரு புதிய திருத்தூதர் பணி அலுவலகத்தின் பிரசன்னம், இந்நாட்டு மக்களுக்கு குறிப்பாக, கத்தோலிக்கச்  சமூகத்திற்கான திருத்தந்தையின் மேய்ப்புப் பணியின் அடையாளமாகவும், அவருடைய இல்லமாகவும் அமைந்துள்ளது என்றும் தனது மறையுரையில் தெரிவித்தார்

மனச்சோர்வை பொறுமையுடன் சகித்துக் கொண்டு வெற்றியின் கிரீடத்தை வெல்வது எப்படி என்பதற்கு, இயேசு ஆண்டவர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார் என்று கூறிய பேராயர் எட்கர் பெனா பர்ரா அவர்கள், அபுதாபி மற்றும் ஒட்டுமொத்த அரேபிய தீபகற்பத்தின் கத்தோலிக்கச் சமூகமும் நம்பிக்கை நிறைந்த பொறுமை மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு என்று தான் தைரியமாகக் கூற முடியும் என்றும் தெரிவித்தார்

2019 ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அபுதாபிக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதையும், அப்போது நற்செய்தியை நடைமுறைப்படுத்துவதில் கத்தோலிக்கர்களின் முக்கிய பங்கை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் விடுத்த அழைப்பையும் நினைவுகூர்ந்த பேராயர் எட்கர் பெனா பர்ரா அவர்கள், கிறிஸ்துவின் திருஉடலில் எந்த ஒரு பகுதியும் மற்றொன்றைவிடச் சிறந்ததோ அல்லது முக்கியமானதோ அல்ல என்று மேலும் கூறினார்.