Namvazhvu
குடந்தை ஞானி இஸ்லாமிய தலைமைக்குரு அகமது அல்-தாய்ப் அவர்களின் செய்தி
Monday, 07 Feb 2022 06:14 am
Namvazhvu

Namvazhvu

பிப்ரவரி 4 ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, உலக மனித உடன்பிறந்த உணர்வுநிலை தினத்தைக் குறித்து இஸ்லாமிய தலைமைக்குரு அகமது அல்-தாய்ப் அவர்கள் செய்தி ஒன்றை வழங்கியுள்ளார்

இந்தக் கொண்டாட்டம் என்பது சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் சக்தி மேலோங்கும் சிறந்த உலகத்திற்கான தேடலைக் குறிக்கிறது என்றும், சமகால மனிதகுலத்தின் நெருக்கடிகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள பயனுள்ள கருவிகளை வழங்குவதற்கான நம்பிக்கையையும் இந்நாளில் தருகிறது என்றும்  இஸ்லாமிய தலைமைக்குரு அகமது அல்-தாய்ப் அவர்கள் தனது செய்தியில் கூறியுள்ளார் 

மேலும், அனாதைகள், ஏழைகள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் துயர்துடைக்கும் நாளாகவும் இது அமைந்துள்ளதாகக்  கூறிய இஸ்லாமிய தலைமைக்குரு அகமது அல்-தாய்ப் அவர்கள், கத்தோலிக்கத்  திருஅவையில் சகோதரத்துவம் மற்றும் அமைதியின் பாதையில் இடைவிடாமல்  துணிச்சலாகப் பயணிந்துவரும் தோழரான எனது அன்புச் சகோதரர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு முதலில்  மரியாதைக்குரிய வாழ்த்துகளைத் தெரிவித்துக்  கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

உலக மனித உடன்பிறந்த உணர்வுநிலை  தினமான பிப்ரவரி 4 ஆம் தேதி, வெள்ளியன்று, அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பிடன் அவர்களும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் காலநிலை நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய சவால்களை சமாளிக்க அனைத்து மக்களும் பிளவுகளைக் கடந்து ஒன்றிணைந்து ஒத்துழைக்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

என் வாழ்க்கையில், நம்பிக்கை எப்போதும் கலங்கரை விளக்கமாகவும், இருண்ட நாட்களில் கூட நோக்கத்திற்கான அழைப்பாகவும் இருந்து வருகிறது என்று கூறியுள்ள ஜோ பிடன் அவர்கள், நாம் ஒருவரையொருவர் நேசிக்கவும், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு சேவை செய்யவும், பாதுகாக்கவும், மேலும் ஒவ்வொரு நபரின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், நம்பிக்கையும் மரபுகளும் கொண்ட புனித போதனைகள்நமக்குக் கட்டளையிடுகின்றன என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.  

ஒன்றாக, உலகளாவிய மனித உரிமைகளை நிலைநிறுத்தவும், ஒவ்வொரு மனிதரையும் உயர்த்தி, அனைவருக்கும் அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்கவும், நம் அனைவருக்கும் இந்நாள் உண்மையிலேயே ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும், அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பிடன் அவர்கள் கூறியுள்ளார்.