உலகில் நோய்த்தடுப்பு சிகிச்சையின் பரவலை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, வாழ்வுக்கான பாப்பிறைக் கழகம் வழியாக பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நிகழ்நிலை கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை வாழ்வுக்கான பாப்பிறைக் கழகத்தின் தலைவர் பேராயர் வின்சென்சோ பக்லியா துவக்கி வைத்து, தீரா நோயுற்றோருக்கு வழங்கப்படும் மருத்துவப் பராமரிப்பு என்பது ஓர் உரிமை, மேலும் இந்த விழிப்புணர்வு பரவிவருவது சாதகமானதாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
பிப்ரவரி 9 ஆம் தேதி, புதன்கிழமையன்று தனது மறைக்கல்வி உரையின்போது, வாழ்வின் இறுதிக் காலத்தில் மக்களுடன் துணையாகவும் ஆதரவளிக்கவும் முற்படும் இத்தகைய நோய்த்தடுப்பு சிகிச்சைக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். அனைவருக்கும் பராமரிப்பு மற்றும் சிகிச்சைக்கான உரிமைக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பதை தான் எப்பொழுதும் சுட்டிக்காட்டுவதாகவும், பலவீனமானவர்கள் குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நோயுற்றவர்கள் ஒருபோதும் நிராகரிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறினார்.
உலகில் நோய்த்தடுப்பு சிகிச்சையைப் பரப்புவதற்கான திட்டத்திற்குத் தலைமை தாங்கி, 2017ல் இக்கழகத்தால் தொடங்கப்பட்ட "PAL-LIFE" என்ற முன்முயற்சியானது, கருணைக் கொலையை சட்டப்பூர்வமாக்குவதை எதிர்ப்பதற்கான ஒரு பயனுள்ள நடவடிக்கையாக உலகம் முழுவதும் நோய்த்தடுப்பு சிகிச்சை கலாச்சாரத்தை பரப்புவதற்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகம் முழுவதிலுமிருந்து 300க்கும் மேற்பட்ட நிபுணர்களின் பங்கேற்பைக் கொண்ட இந்நிகழ்நிலை கருத்தரங்கு, திருஅவையின் உலக நோயுற்றோர் தினத்தை கொண்டாடிய நாளில், அதாவது பிப்ரவரி 11 ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று நிறைவடைந்தது.