கிறித்தவர்கள் ஒவ்வொருவரும் இரக்கம் நிறைந்தவர்களாக, நலப்பணிகளை மேற்கொள்பவர்களாக செயல்படவேண்டும் என மியான்மார் கர்தினால் சார்லஸ் போ அழைப்புவிடுத்துள்ளார். மியான்மார் நாட்டின் நையாங்லிபின் மரியன்னை திருத்தலத்தில், உலக நோயுற்றோர் தினத்தையொட்டி திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய கர்தினால் போ அவர்கள், மியான்மார் நாட்டில் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும் பகைமையின் காயங்களை அன்னை மரியின் துணையுடன் குணப்படுத்த ஒன்றிணைந்து முன்வருவோம் என அழைப்புவிடுத்தார்.
பிப்ரவரி 11 ஆம் தேதி, புனித லூர்து அன்னை விழாவன்று அகில உலகத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட நோயுற்றோர் தினத்தையொட்டி, அனைவரின் தாராள மனதிற்கும் அழைப்புவிடுத்த கர்தினால், துயருறும் மக்களோடு இணைந்து பிறரன்பு பாதையில் நடைபோடுவோம் என விண்ணப்பித்தார்.
ஒவ்வோர் ஆண்டும் உலக நோயுற்றோர் தினத்தன்று அன்னைமரியாவை நோக்கி வரும் மியான்மார் மக்கள், இவ்வாண்டு ஒரு காயமுற்ற தேசமாகவும், பெரும் சவால்களுடனும், கண்ணீருடனும், பெருந்தொற்றின் பாதிப்புகளுடனும், குடிபெயர்தல்களுடனும், மனமுறிவுகளுடனும் அன்னையை நோக்கி வந்துள்ளோம் என்று கர்தினால் போ தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி இராணுவத்தால் நடத்தப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து அந்நாட்டின் 5 கோடியே 48 இலட்சம் மக்கள் தொகையில் 1 கோடியே 44 இலட்சம் பேர் பிறரின் உதவிகளை சார்ந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.