Namvazhvu
அருள்பணி. P. ஜான் பால் ஆண்டின் பொதுக்காலம் 8 ஆம் ஞாயிறு சீஞா 27 : 4-7, 1 கொரி 15 : 54-56, லூக் 6 : 39-45
Tuesday, 22 Feb 2022 11:33 am

Namvazhvu

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பயன்படுத்தும் உடைகள், பொருட்கள் மற்றும் வாகனங்களை வைத்து நாம் செல்வந்தரா? அல்லது ஏழையா? என்று பிறர் சுலபமாக நம்மைப் பற்றி கணித்துவிட முடியும். ஆனால், நாம் நல்லவரா அல்லது தீயவரா என்பதை இவற்றைக் கொண்டு கணிக்க முடியாது. அதே நேரத்தில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் நாம் யார் என்பதற்கு முகவரியாக அமைகின்றன. நாம் பேசும் வார்த்தைகளைக் கொண்டே நாம் நல்லோரா அல்லது தீயோரா என்று பிறரால் அறியப்படுகின்றோம். ஆண்டவர் இயேசுவும்: “உங்களுக்கு தீர்ப்பு தரப்போகிற ஒன்று உண்டு, அது என் வார்த்தையேஎன்று கூறுகிறார். அதாவது இறைவனின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வாழ்கின்ற போது, அன்னை மரியாளைப் போல், இறை ஆட்சியில் உயர்ந்தவர்களாக நாம் இருப்போம். மாறாக, இறைவார்த்தைக்கு கீழ்ப்படியாமல் நம் ஆதித்தந்தை ஆதாமைப்போல இருந்தால் இறைவனின் அருள் நிழலிலிருந்து விலக்கி வைக்கப்படுவோம். இதைத்தான் இன்றைய நாளின் வாசகங்கள், நல்ல கனிதரும் நல்ல மரங்களாக, நல்ல வார்த்தைகளை பிறருக்குத் தருகிற நல்ல மனிதர்களாக நாம் வாழ வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகின்றன. “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம். வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளனஎன்று சொன்ன பேதுருவைப் போல, இறைவனின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வாழவும், அந்த கனிவான, நல்வார்த்தைகளையே பிறரோடு பகிர்ந்துகொள்ளும் மக்களாக வாழவும் வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

சல்லடையில் உமி தங்கி விடுவது போல, நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நாம் நல்லோரா அல்லது தீயோரா என நம்மை வடிகட்டுகின்றன. நாம் பேசும் வார்த்தைகளே நாம் யார் என்பதை காட்டுகின்றன என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

பாவமே சாவின் கொடுக்கு. முடிவே இல்லாத பாவத்திற்கும், சாவிற்கும் முடிவு தந்தவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இத்தகைய இறைவனை அடையாவிட்டால் நமது உழைப்பு அனைத்தும் வீண் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. எங்களை வழிநடத்துபவரே! உமது திரு அவையின் திருப்பணியாளர்கள் கடை நிலையில் இருக்கும் மக்களின் குரல்களையும் கேட்டு, அதற்கு ஏற்றாற்போல உம்  மந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்கள் அன்புத் தந்தையே! நாட்டை ஆளும் தலைவர்கள் தங்களின் சொந்த விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆட்சி செய்யாமல் மக்களின் தேவைகளைக் கவனத்தில் கொண்டு, நல்லாட்சி புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்களை காப்பவரே! எம் பங்கில் இருக்கும் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்து அவர்களின் கருத்துகளையும், கவனத்தில்கொண்டு, அனைவரையும் சமமாக மதித்து வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் விண்ணகத் தந்தையே! உம் வார்த்தைகளே எங்களுக்கு வாழ்வு தருகின்றன என்பதை உணர்ந்த நாங்கள், பிறருக்கு ஊக்கம் அளிக்கும் வார்த்தைகளை பேசக்கூடிய மனிதர்களாக வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் பரமதந்தையே! பிறரது குற்றங்களை ஏளனமாக பார்ப்பதற்கு முன், நாங்கள் பாவிகள் என்பதை உணரவும், அதற்கேற்றவாறு எங்களை முதலில் திருத்திக்கொள்ள வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.