Namvazhvu
குடந்தை ஞானி கருணைக்கொலை குறித்த கருத்து வாக்கெடுப்புக்கு அனுமதி மறுப்பு
Tuesday, 01 Mar 2022 11:23 am
Namvazhvu

Namvazhvu

இத்தாலியில் கருணைக் கொலையைத் தடை செய்யும் தண்டனைச் சட்டத்தொகுப்பு எண். 579 திரும்பப் பெறுவது குறித்து பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கு அரசியலமைப்பு நீதிமன்றம் அனுமதியளிக்காததை பாப்பிறை வாழ்வுக் கழகமும், இத்தாலிய ஆயர்களும் வரவேற்றுள்ளனர்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாப்பிறை வாழ்வுக் கழகம், மனித வாழ்வு மதிப்புமிக்கது மற்றும் அது மதிக்கப்பட வேண்டியது என்றுரைக்கும் கத்தோலிக்கத் திரு அவை, தற்கொலையையும், மற்றவர் உதவியால் ஆற்றப்படும் தற்கொலையையும் எதிர்க்கிறது என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

அதோடு, திருத்தந்தையும், இதே கருத்தை பலமுறை நினைவுபடுத்தியுள்ளார் என்றும் அக்கழகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

நோய் முற்றிய நிலையிலுள்ள நோயாளர்களைப் பராமரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறியுள்ள பாப்பிறை வாழ்வுக் கழகம், இந்நோயாளிகளைப் பராமரிப்பது குறித்த இத்தாலிய சட்டம் மிகச்சிறிய அளவிலே அறியப்பட்டுள்ளது. அச்சட்டமும் மிகச்சிறிய அளவிலே நடைமுறையில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது, துன்புறும் பலருக்கு உண்மையிலே உதவுவதாய் இருக்கும் எனவும், பாப்பிறை வாழ்வுக் கழகம் கூறியுள்ளது.

இதற்கிடையே, கருணைக் கொலையைச் சட்டப்படி அங்கீகரிப்பதற்கென, பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கு, குறைந்தது ஐந்து இலட்சம் கையெழுத்துக்கள் தேவையாயிருந்த வேளை, இதனை ஆதரிப்போர் அதைவிட இருமடங்கு கூடுதலாக, அதாவது 12 இலட்சம் கையெழுத்துக்களைச் சேகரித்திருந்தனர். ஆயினும், இத்தாலிய அரசியலமைப்பு நீதிமன்றம், இவ்விவகாரம் குறித்து பொதுமக்கள் வாக்கெடுப்புக்கு அனுமதியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.