Namvazhvu
குடந்தை ஞானி தேசியப் பூங்காவில், ஒலிவ மலையை இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு
Tuesday, 01 Mar 2022 11:36 am
Namvazhvu

Namvazhvu

இஸ்ரேல் நாட்டின் தேசியப் பூங்காவில், ஒலிவ மலைப்பகுதி உட்பட, கிறிஸ்தவ புனித இடங்களை இணைக்கும் அந்நாட்டு அரசின் திட்டத்திற்கு, புனித பூமியின் கிறிஸ்தவத் தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேலின் இயற்கை மற்றும் பூங்கா அமைப்பின் அதிகாரிகளின் (INPA) திட்டத்தின்படி, இஸ்ரேலின் தேசியப் பூங்காவை விரிவாக்கும் நடவடிக்கையில் திரு அவைக்குச் சொந்தமான நிலங்களும், கிழக்கு எருசலேமில் கிறிஸ்தவர்களின் புனித இடங்களும் இணைக்கப்படுவது குறித்து, அத்தலைவர்கள் தங்களின் கவலையைத் தெரிவித்துள்ளனர்.

புனித பூமியின் பாதுகாவலர் பிரான்செஸ்கோ பேட்டன், எருசலேம் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை 3 ஆம் தெயோபிலோஸ், எருசலேம் அர்மேனியன் முதுபெரும் தந்தை நூர்ஹான் மனோஜியன் ஆகியோர் கையெழுத்திட்டு, இஸ்ரேல் சூழலியல் அமைச்சர் தாமர் சாண்ட்பெர்க் அவர்களுக்கு அனுப்பியுள்ள மடலில், ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான திருப்பயணிகள் பார்வையிடும் மிகவும் புனிதமான இடங்களில் ஒலிவ மலையும் ஒன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒலிவ மலையின் புனிதத் தன்மையைப் பாதுகாப்பதிலும், திருப்பயணிகள் அங்குச் செல்வதற்கு வசதிகளை அமைத்துக் கொடுப்பதிலும், எங்களது கிறிஸ்தவ சபைகள், அயராது, கடுமையாய் உழைத்து வருகின்றன என்றுரைக்கும் அம்மடல், அண்மை ஆண்டுகளில் பல்வேறு அமைப்புகள், அவ்விடத்தின் புனிதத்தன்மையைக் குறைக்கும் வழிகளைத் தேடி வருகின்றன என்றும் கூறியுள்ளது. தேசிய பூங்காத் திட்டத்தில், ஒலிவ மலையையும் இணைக்கும் இஸ்ரேல் அரசின் இந்நடவடிக்கை, புனித பூமியிலுள்ள கிறிஸ்தவர்களையும், திரு அவைகளையும், எருசலேம் புனித நகரத்தில் உலக அளவில் உறுதியளிக்கப்பட்டுள்ள உரிமைகளையும் நேரடியாகத் தாக்குவதாக உள்ளது என்றும், கிறிஸ்தவத் தலைவர்களின் மடலில் கூறப்பட்டுள்ளது.

இயேசுவின் வாழ்வின் சில முக்கிய நிகழ்வுகள், ஒலிவ மலையில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டின் நிலவரப்படி, இஸ்ரேலில் 81 தேசியப் பூங்காக்கள் உள்ளன. மேலும், நானூறுக்கு மேற்பட்ட வனவிலங்கு காப்பகங்களும், அந்நாட்டிற்கே உரிய 2,500 காட்டுச்செடிகளும், 32 மீன் வகைகளும், 530 பறவையினங்களும் அந்நாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.