Namvazhvu
பயங்கரவாதம் பிரச்சனைகளுக்கு தீர்வல்ல
Wednesday, 19 Jun 2019 06:11 am

Namvazhvu

காஷ்மீர் மாநிலத்தின் புல்வானா மாவட்டத்தில் ஜெய்ஷ் முகம்மது (துநஅ) தீவிரவாதிகன் நிகழ்த்தியுள்ள பயங்கரவாதத் தாக்குதல் மன்னிக்க முடியாத மாபாதகச் செயலாகும். மத்திய காவல்துறையினர் (ஊசுஞகு) பயணித்த வாகனத்தை நோக்கிக் குறிவைத்து மேற்கண்ட தீவிரவாத அமைப்பு சுட்டபோது 44 படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொடிய வன்முறைத் தாக்குதலைத் தமிழக கத்தோலிக்க ஆயர்பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. குற்றமேதும் அறியாத அப்பாவி வீரர்கள் கொல்லப்பட்டதால், இவர்கள் சார்ந்த குடும்பத்தார் படும் சோகத்தில் ஆத்மார்த்தமாகப் பங்கு கொள்கிறோம். இறந்துபோன உயிர்களுக்கு அரசு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 
காஷ்மீரின் புல்வானா மாவட் டத்தில் நிகழ்ந்த இக்கோர நிகழ்வு காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்ட தனித்த நிகழ்வல்ல. கடந்த ஒரு நூற்றாண்டாக, அவ்வப்போது ஆங்காங்கே அரசுப் படையினர் ஒருபக்கம், காஷ்மீர் பிரச்சினைக்கான தீர்வாக போராளிகள் முன்னெடுக்கும் போராட் டம் மறுபக்கம் என  இரு தரப்பினரும் தொடர்ந்து ஆயுதந்தாங்கி முன்னெடுக்கும் கலவரங்களால் அப்பாவி மக்கள் உயிர்களையும் உடமைகளையும் இழந்து வருகின்றனர்.
இவ்வன்முறைப் போராட்டத்தின் பின்புலமாக எந்தச் சக்தியிருந்தாலும், எந்த இயக்கம் இருந்தாலும், அது பாகிஸ்தானாக இருந்தாலும், இம்மாதிரியான கொலை தாக்குதல் நாகரிகச்
சமுதாயத்திற்கு எதிரானது.
இந்திய மண்ணில் இத்தீவிரவாதத் தாக்குதல்கள் பாகிஸ்தானின் தூண்டுதலால் நடந்திருக்கலாம். அது உண்மையாயின் உலக அரங்கில் பாகிஸ்தானை அம்பலப்படுத்துவதும், தனிமைப்படுத்துவதும் கட்டாயத் தேவையே. இந்தியா ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு அளித்திருந்த சிறப்பு அந்தஸ்தை உடனடியாக விலக்கிக் கொண்டு தன் கோபத்தைக் காட்டியுள்ளது.
அதே வேளை காஷ்மீர் மக்களின் போராட்டத்தில் இருக்கும் நியாயமான கோரிக்கைகளையும் இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டுவதும் காட்டாயமாகிறது. பாகிஸ்தான் என்ற அண்டை நாட்டின் தூண்டுதலே, காஷ்மீர் மக்களின் தீவிரவாதப் போராட்டத்திற்குக் காரணம் என்று மீண்டும் சொல்லி, பிரச்சினையைத் திசை திருப்பலும் முறையன்று.
இந்திய நாட்டின் பன்முகத் தன்மையையும், சமயசார்பின்மையையும் சனநாயகத்தையும் காப்பதில்தான் இந்திய இறையாண்மை காக்கப்படும் என்பதில் நாம் உறுதியாக இருப்போம்.
அரசியல் சாசனத்தின் அடிப்படைப் பண்புகள் பாரபட்சமின்றி காக்கப்பெறுகின்றபோது, இம்மாதிரியான கொடூரத் தாக்குதல்கள் நிகழாதிருக்க முடியும் என்று தமிழக ஆயர் பேரவை நம்புகிறது. இப்பண்புகளைக் காக்க முனையும் இந்திய அரசுக்கு எங்கள் ஒத்துழைப்பை நல்குவோம் என்று உறுதி கூறுகிறோம்.