Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் போரை நடத்துபவர்கள், மனிதகுலம் குறித்து அக்கறையற்றவர்கள்
Tuesday, 08 Mar 2022 06:13 am
Namvazhvu

Namvazhvu

போரை நடத்துபவர்கள் அனைவரும், மனிதகுலம் குறித்து சிறிதும் அக்கறையற்றவர்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அழிவு தரும் ஆயுதங்களைக் கைக்கொள்வது என்பது, இறைவிருப்பத்திற்கு எதிரானது என உரைத்தார்.

உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதலால் அவதியுறும் மக்களுக்காகவும், போரிலிருந்து தப்பிக்க வெளியேறும் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்காகவும், உக்ரைனிலும் உலகின் பல பகுதிகளிலும் இடம்பெறும் மோதல்களை முடிவுக்குக் கொணரும் அரசியல் தீர்மானங்களுக்காகவும் இறைவேண்டல் செய்யுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அனைவருக்கும் அழைப்புவிடுத்தார்.

உக்ரைனில் துன்புறும் நம் சகோதரர் சகோதரிகளுடன் நம் நெருக்கத்தை வெளியிடும் நாளாக, திருநீற்றுப் புதனைச் சிறப்பிப்போம் என்ற அழைப்பை அனைத்து விசுவாசிகளுக்கும் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரின் பாதை மேற்கொள்ளப்படக்கூடாது என்று, மீண்டும் மீண்டும் இறைவனை மன்றாடி வரும் நாம், போர் வேண்டாம் என்று குரல் கொடுப்பதை நிறுத்திவிடாமல், கடவுளிடம் மிக உருக்கமாக மன்றாடுவோம் எனக் கேட்டுக்கொண்டார்.

போரைத் தொடர்ந்து நடத்துபவர்கள், மக்களின் உண்மையான வாழ்வு மீது அக்கறை காட்டுவதில்லை. மாறாக, அவர்கள் அனைத்திற்கும் மேலாக, கட்சி நலன்கள் மற்றும் அதிகாரத்தை முன்னிலைப்படுத்துபவர்களாக இருப்பதால், உண்மையாகவே, எல்லாப் போர்களிலும் அப்பாவி மக்களே பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாள்களில் புகலிடம் தேடுகின்ற வயது முதிர்ந்தோர், தங்கள் பிள்ளைகளுடன் நாட்டைவிட்டு வெளியேறும் அன்னையர் போன்ற, நம் சகோதரர், சகோதரிகளுக்கு  மனிதாபிமானக் கதவுகள் திறந்துவிடப்பட்டு, அவர்கள் வரவேற்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

உக்ரைன் மற்றும், உலகெங்கும் இடம்பெற்றுவரும் போர்கள் குறித்து மிகுந்த மனவேதனையை வெளியிட்டு, வன்முறையைப் பயன்படுத்துவோருடன் அல்லமாறாக, அமைதியை ஏற்படுத்துவோருடன் கடவுள் இருக்கிறார் என்று கூறிய திருத்தந்தை, உக்ரைன் மற்றும், உலகின் அமைதிக்காகவும், ஏமன், சிரியா, எத்தியோப்பியா போன்று, உலகின் பல்வேறு பகுதிகளில் போரினால் துன்புறும் மக்களுக்காகவும் செபிக்குமாறு அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.