ஈராக்கில் கிறிஸ்தவர்கள் இல்லாத ஒரு நிலையை கற்பனை செய்து பார்ப்பது இயலாத காரியம் என்று, அந்நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதன் ஓராண்டு நினைவாக, பிப்ரவரி 28 ஆம் தேதி, திங்களன்று திருப்பீடத்தில் தன்னை சந்திக்க வந்திருந்த அந்நாட்டு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளிடம் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.
இந்த ஒரு மனநிலை, மதத்தை வைத்து மட்டுமல்லாமல், அந்நாட்டின் சமுதாய மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்து ஏற்படுகின்றது என்றும், ஈராக்கில் கிறிஸ்தவர்கள் இல்லையென்றால், அந்நாடு ஈராக்காக இருக்காது என்றும் திருத்தந்தை கூறினார்.
முதல் நூற்றாண்டுகளிலிருந்து, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, ஒருவர் ஒருவரை ஏற்றல் ஆகிய பண்புகளில் மத்திய கிழக்குப் பகுதிக்கும், உலகிற்கும், முன்மாதிரிகையாய் விளங்கிய ஈராக் நாடு, தொடர்ந்து அப்பண்புகளில் சுடர்விட உதவுமாறும், ஈராக்கின் இச்சிறப்பான தனித்துவத்தை நிலைநிறுத்துவதற்கு, மற்ற மதத்தினரோடு இணைந்து உறுதியோடு செயல்படுமாறும், கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளை திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
ஈராக்கில் கிறிஸ்தவர்களின் இருப்பை உயிரூட்டமுள்ளதாக்கவும், அந்நாட்டில் அமைதியைக் கொணர்வதற்கு, மற்ற மதங்களோடு ஒன்றிப்பையும், உரையாடலையும் மேற்கொள்வதே ஒரே வழி எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பிரதிநிதிகளிடம் கூறினார். திருத்தூதர்கள் காலத்திலிருந்து, மற்ற மதத்தினரோடு ஒன்றிணைந்து வாழ்ந்துவரும் ஈராக் கிறிஸ்தவர்கள், அதைத் தொடர்ந்து காத்துவருமாறும், மதங்கள், உடன்பிறந்த உணர்வில் பணியாற்ற உதவுமாறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஓராண்டிற்கு முன்னர், ஈராக்கிற்கு தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் மறக்க இயலாதது என்றும், மத்திய கிழக்கின் பழங்காலக் கலாச்சாரங்கள் மற்றும், மீட்பின் வரலாற்றின் துவக்கமாக இருக்கின்ற ஈராக் நிலப்பகுதி மிகவும் முக்கியம் வாய்ந்தது என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார். உடன்பிறந்த உணர்வுப் பாதையில் செல்வதற்கு, பல்சமய உரையாடல் மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்களின் ஆதிக்க மனநிலை களையப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக்கில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார்.