விளம்பரப் புன்னகையோடு இல்லாமல், இதயத்திலிருந்து பிறக்கின்ற உண்மையான புன்னகையோடு தங்களின் சகோதரர், சகோதரிகள் மீது அக்கறை காட்டுவதற்கும், மகிழ்வின் நற்செய்தியை வாழ்வால் சான்றுபகர்வதற்கும் வீறுகொண்டு எழுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் இளையோரை ஊக்கப்படுத்தியுள்ளார்.
இளையோர் மறைப்பணி மாநாடு ஒன்றில் பங்குபெறும் "மிசியோ ஜியோவானி" என்ற இளையோர் மறைப்பணி அமைப்பின் பிரதிநிதிகளை, ஏப்ரல் 23 ஆம் தேதி, சனிக்கிழமையன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வீறுகொண்டு எழுக, அக்கறை, சாட்சியவாழ்வு ஆகிய மூன்று சொல்லாடல்களை மையப்படுத்தி தன் சிந்தனைகளை வழங்கினார்.
பாப்பிறை மறைப்பணி கழகங்களின், இளையோர் மறைப்பணி இயக்கம் என்ற பெயரில், ஐம்பது ஆண்டுகளுக்குமுன் துவக்கப்பட்டு, தற்போது, "மிசியோ ஜியோவானி" என்ற பெயரில் இயங்கும், இளையோர் மறைப்பணி அமைப்பின் பிரதிநிதிகள், "மறைப்பணி - வருங்காலத்திற்கு மீண்டும் துவங்குகிறது" என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டனர்.
ஒரே இடத்தில் அமர்ந்திருக்கின்ற சோம்பலான வாழ்வு முறையைவிட்டு எழுந்து, இயேசு வழங்கும் புதிய வாழ்வுக்கு மகிழ்வோடு உள்ளங்களைத் திறங்கள் என்றும், பிறரன்புப் பணிகளில் ஈடுபடத் தயாராக இருங்கள் என்றும், எப்போதும் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள், அப்போது நீங்கள் மகிழ்ச்சியாய் இருப்பீர்கள் என்றும் இளையோரிடம் கூறியத் திருத்தந்தை, ஆர்வத்தால் தூண்டப்பட்டு ஆற்றப்படுகின்ற மறைப்பணி, அதனால் கிடைக்கும் மகிழ்வை, மற்றவரோடு பகிர்ந்துகொள்ளச் செய்யும் என்றும் கூறினார்.
நல்ல சமாரியரின் கண்கள் மற்றும் இதயத்தோடு மற்றவரை அணுகி உதவுமாறும், தங்களின் மகிழ்ச்சியை மற்றவரோடு பகிர்ந்துகொள்ளுமாறும், திருத்தந்தை இளையோரிடம் கேட்டுக்கொண்டார்.