தங்கள் பணிகளில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக, உலக பத்திரிகை சுதந்திரம் நாளில் கடவுளிடம் வேண்டுதல்களை எழுப்புவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 3 ஆம் தேதி செவ்வாயன்று கூறியுள்ளார்.
மே 3 ஆம் தேதி, செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட உலக பத்திரிகை சுதந்திர நாளை மையப்படுத்தி, உலக பத்திரிகை சுதந்திரம் ((#Press Freedom Day), ஒன்றிணைந்து செபிப்போம் (#Pray Together) என்ற ஹாஷ்டாக்குகளுடன் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பத்திரிகையாளர்களுக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
“பத்திரிகை சுதந்திரத்திற்காகப் பணியாற்றுகையில், தங்கள் உயிரை இழந்த அல்லது சிறைத்தண்டனையை எதிர்கொண்ட பத்திரிகையாளர்களுக்காகச் செபிப்போம், மனிதகுலத்தின் காயங்களை நமக்கு துணிச்சலோடு வழங்கும் அவர்களுக்கு சிறப்பு நன்றி” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
1993 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொதுப் பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி, ஒவ்வோர் ஆண்டும் மே 03 ஆம் தேதியன்று பத்திரிகை சுதந்திர நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.