இளையோர், தாத்தாக்கள், பாட்டிகளுக்குச் செவிமடுக்கவும், வாழ்க்கையை மிக கவனத்தோடு தெளிந்து தேர்வுசெய்யவும், நம்பிக்கையில் துணிச்சலோடு இருக்கவும், தொண்டாற்றுவதற்கு தங்களை அர்ப்பணிக்கவும், இவற்றை அன்னை மரியாவின் வாழ்வுப் பாதையிலிருந்து கற்றுக்கொள்ளவும் வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 3 ஆம் தேதி, செவ்வாயன்று கூறியுள்ளார்.
ஒவ்வொரு மாதத்திற்கும் தான் தேர்ந்தெடுத்துள்ள பொதுக் கருத்தை காணொளிச் செய்தி வழியாக விளக்கி வருகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மே மாதக் காணொளிச் செய்தியில், இளையோரிடம் பேசி, அவர்கள், மற்றவருக்குத் தொண்டுபுரிய தங்களையே கையளிப்பதற்கு கிடைக்கும் துணிச்சலிலிருந்து வாழ்க்கையின் முழுமையைப் பெறுமாறு கூறியுள்ளார்.
செவிமடுத்தலின் முக்கியத்துவம்
வாழ்க்கையில் தங்களின் சொந்தப் பாதைகளைத் தெரிவுசெய்யும் முறையில், அன்னை மரியா போன்று இளையோரும் செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, இளையோர் தங்கள் வாழ்க்கையைத் தெளிந்து தேர்வுசெய்யும் பயணத்தில், தாத்தாக்கள், பாட்டிகள் கூறுவதற்குச் செவிமடுத்தால், அப்போதைய விவகாரங்களையும் கடந்து ஒரு ஞானத்தை அவர்களில் கண்டுகொள்ள முடியும் எனவே அவர்கள் கூறும் சொற்களில் கவனம் செலுத்துமாறு இளையோரிடம் கூறியுள்ளார்.
அதேநேரம், சமுதாயத்தில் இளையோரின் குரல்கள் அதிகமாகக் கேட்கப்படுவதற்கும் இடமளிக்கப்படவேண்டும் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
துணிச்சல், சேவை
திருத்தந்தை, தன் மே மாதப் பொதுக் கருத்து பற்றிய காணொளிச் செய்தியில் இளையோர், மற்றவருக்குத் தொண்டுபுரியவேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளார். பணியாற்றுவது, மற்றவருக்கு நல்தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும், அன்னை மரியா போன்று, ‘ஆகட்டும்’ என்று சொல்வதற்கு இளையோருக்குத் துணிச்சல் அவசியம் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார். அன்னை மரியா, இயேசுவைப் பின்பற்றுவதற்காகத் தன் வாழ்வுப் பாதையை மாற்றுவதற்கு அனைத்து சவால்களையும் துணிச்சலோடு எதிர்கொண்டவர் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
மே மாதப் பொதுக்கருத்து
எல்லா இளையோரும் வாழ்க்கையை முழுமையாக வாழவும், செவிமடுத்தல், ஆழ்ந்து தெளிந்துதேர்தல், நம்பிக்கையை உருவாக்கும் துணிவு, பணியாற்றுவதற்கு அர்ப்பணம் ஆகியவற்றை அன்னை மரியாவின் வாழ்வில் காணவும் வேண்டும் என்று, அவர்களுக்காக, இந்த மே மாதத்தில் சிறப்பாக இறைவேண்டல் செய்வோம் என்றும் திருத்தந்தை அழைப்புவிடுத்துள்ளார். 2016 ஆம் ஆண்டிலிருந்து திருத்தந்தையின் மாதப் பொதுக் கருத்துகள் வெளியிடப்பட்டுவரும், திருத்தந்தையின் காணொளியை 17 கோடியே 60 இலட்சத்திற்கு மேற்பட்டோர் பார்த்து வருகின்றனர். வத்திக்கான் ஊடகத்தால் ஒளிபரப்பப்படும் இக்காணொளி, 23 மொழிகளில் 114 நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றது.