கத்தோலிக்கத் திரு அவையில் சிறார் பாதுகாப்புக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார் என்று, சிறார் பாதுகாப்பு பாப்பிறை அமைப்பின் தலைவரான கர்தினால் சீன் ஓ மாலி அவர்கள் கூறியுள்ளார்.
சிறார் பாதுகாப்பு பாப்பிறை அமைப்பு இவ்வாரத்தில் வத்திக்கானில் நடத்திய தன் ஏழாவது ஆண்டு நிறையமர்வு கூட்டத்தின் இறுதி நிகழ்வாக, அதில் பங்குகொண்டவர்கள், ஏப்ரல் 29 ஆம் தேதி வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்தபின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கர்தினால் சீன் ஓ மாலி அவர்கள், திரு அவையில் சிறார் பாதுகாப்பு குறித்து திருத்தந்தை மிகவும் அக்கறை காட்டுகிறார் என்று கூறினார்.
சிறார் பாதுகாப்புக்கு முன்னுரிமை
திருப்பீடத் தலைமையகத்தில் சிறார் பாதுகாப்பு நடவடிக்கை மைய இடத்தில் அமையவேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை, ஞசயநனiஉயவந நுஎயபேநடரைஅ என்ற புதிய திருத்தூது கொள்கை விளக்கத்தில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார் என்று, கர்தினால் சீன் ஓ மாலி அவர்கள் கூறினார்.
சிறார் பாதுகாப்பு பாப்பிறை அமைப்பு, திருப்பீடத் தலைமையகத்தில் தனித்தியங்கி, இவ்விவகாரத்தில், திரு அவை முழுவதையும் வழிநடத்தவேண்டும் என்ற ஆணையை திருத்தந்தை இந்த அமைப்புக்கு வழங்கியுள்ளார் என்றும் கர்தினால் சீன் ஓ மாலி அவர்கள் கூறினார்.
2014 ஆம் ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள சிறார் பாதுகாப்பு அமைப்பு, திருப்பீடத் தலைமையகத்தின் ஒரு பகுதியாக, விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்தின்கீழ் இயங்கி வருகிறது. இப்போது அந்த அமைப்பு, திருப்பீடத் தலைமையகத்தில் தனிப்பட்ட ஓர் அமைப்பாக இயங்கவேண்டும் என்பதை திருத்தந்தை மிகத் தெளிவாகக் கூறியுள்ளார் என்று கர்தினால் சீன் ஓ மாலி அவர்கள் மேலும் எடுத்துரைத்தார்.