Namvazhvu
அருள்பணி. P. ஜான் பால் பாஸ்கா காலம் 6 ஆம் ஞாயிறு திப 15: 1-2, 22-29, திவெ 21: 10-14, 22-23, யோவா 14: 23-29
Wednesday, 11 May 2022 10:08 am

Namvazhvu

திருப்பலி முன்னுரை

பாஸ்கா காலத்தின் 6 ஆவது ஞாயிற்றுக் கிழமையின் இறைவார்த்தை வழிபாடானது, ஆண்டவர் இயேசு தந்தைக் கடவுளிடம் செல்லவிருப்பதையும், மேலும், தூய ஆவியார் வரவிருப்பதையும் பற்றிக்கூறுகிறது. ஆண்டவர் இயேசு, தன் தந்தையின் விருப்பப்படி பாடுகள்பட்டு, மரித்து, உயிர்த்தெழுந்தார். உயிர்த்தெழுந்த அவர், தன் சீடர்களுக்கு பலமுறை தோன்றினார். இவ்வாறு, பலமுறை தோன்றியபிறகும், அவர் தங்களோடு இல்லை என்றுதான் அவர்கள் நினைத்தார்கள். தங்களை, தலைவன் இல்லாத கூட்டமாக, போதகர் இல்லாத சீடர்களாக, ஆயன் இல்லாத ஆடுகளாக நினைத்து அஞ்சினார்கள். எனவேதான், தங்கள் பழைய வாழ்க்கைமுறையைத் தேடி மீன்பிடிக்கச் சென்றார்கள். ஆண்டவர் இயேசுவோடு ஒட்டி உறவாடியவர்கள் இந்த சீடர்கள். அவருடைய எல்லா செயல்களுக்கும் சாட்சிகள் இந்த சீடர்கள். ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்திற்குப்பிறகு, அவர் கற்றுத்தந்த இறையாட்சியின் விழுமியங்களை விதைக்கவேண்டியவர்கள் இந்த சீடர்கள். ஆனால், இவர்களோ உயிருக்கு பயந்து சிதறிப்போனார்கள்.

இன்னும் சிலநாட்களில் தான் தந்தையிடம் செல்ல வேண்டும். தான் தந்தையிடம் சென்றுவிட்டால், இவர்கள் மீண்டும் சிதறி ஓடக் கூடும் என்பதை முன்னறிந்தவராய் இயேசு அவர்களை திடப்படுத்துகிறார். ‘நீங்கள் உள்ளம் கலங்காதீர்கள் இதோ மற்றொரு துணையாளரை தந்தைக்கடவுள் உங்களுக்கு அளிப்பார், அவர் உங்களை பாதுகாத்து வழிநடத்துவார்என்று சொல்லி, அவர்களுக்கு ஆறுதலையும், துணிவையும் தருகிறார். ஆண்டவர் ஒருபோதும் நம்மைவிட்டு விலகுவதில்லை. ஆனால், நாம்தான் அவரை விட்டு விலகி ஓடுகிறோம். ஆண்டவருக்காக எதையும் தாங்கி கொள்ளும் மனதிடனை வேண்டி இத்திருப்பலியில் பங்குபெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

இறைவனின் மீட்பைபெற விருத்த சேதனம் என்னும் கட்டளையைக் கடைபிடிப்பது முக்கியம் அல்ல; மாறாக என்னைத்தவிர வேறுதெய்வங்கள் உங்களுக்கு இல்லை என்ற கட்டளையைக் கடைபிடித்து வாழ்வதே அவசியமானது என்று கூறும் இம்முதல்வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

பழைய மண்ணுலக எருசலேமில், கடவுள் வாழ்வதற்காக கட்டப்பட்ட எருசலேம் தேவாலயம் புதிய மண்ணுலக எருசலேமில் காணப்படவில்லை. ஏனெனில், அங்கு கடவுளே கோவிலாக இருக்கிறார் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. எல்லாம் வல்லவரே! உமது திரு அவையையும், அதன் திருப்பணியாளர்களையும் நிறைவாக ஆசீர்வதித்து, உம் திருமகன் கொண்டுவந்த அன்பு, ஒற்றுமை, அமைதி, இரக்கத்தை தங்கள் சொல்லாலும், செயலாலும் இவ்வுலகிற்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்களை எந்நாளும் காப்பவரே! எம் நாட்டையும், நாட்டு மக்களையும் ஆள்வோருக்குத் தேவையான ஞானத்தை தந்து, அன்பு என்னும் இறையாட்சியின் விழுமியத்தின் வழியாக எங்களை வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஞானத்தின் இருப்பிடமே இறைவா! தேர்வுகளை எழுதிக் கொண்டிருக்கும் எம் மாணவ-மாணவிகளுக்கு, நல்ல ஞாபகத்திறனை தந்தருளும். அச்சமின்றி, தாங்கள் படித்த அனைத்தையும் எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்று, வெற்றி பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் வானகத் தந்தையே! அன்பின்றி, அமைதியின்றி பிரிந்து வாழும் குடும்பங்கள், உம் திருமகன் செய்த தியாகத்தை நினைவு கூர்ந்து, ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு, ஒரே குடும்பமாக இணைந்து வாழவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் வானகத் தந்தையே! பிள்ளைகளை இழந்து, பெற்றோர்களை இழந்து அனாதை இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும் வாடுவோருக்கு நீரே அரணும், கோட்டையுமாக அமைந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.