திருப்பீடத் தலைமையகத்தின் பொது விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வதற்கென்று, திருப்பீட தலைமையகத்தின் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய குழு ஒன்றை, மே 05 ஆம் தேதி, வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் உருவாக்கியுள்ளார்.
திருத்தந்தை உருவாக்கியுள்ள இந்த குழு குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், திருப்பீடத் தலைமையகம் மற்றும் அது உலகளாவியத் திரு அவைக்கு ஆற்றும் பணிகள் குறித்து, இவ்வாண்டு மார்ச் 19 ஆம் தேதி வெளியிடப்பட்ட Praedicate Evangelium திருத்தூது கொள்கை விளக்கம், வருகிற ஜூன் 5 ஆம் தேதி நடைமுறைக்கு வரும்வேளை, திருப்பீடத் தலைமையகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற (காண்க. எண்.43§1) பொது விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யவேண்டியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இப்போதைய பொது விதிமுறைகள், புதிய திருத்தூது கொள்கை விளக்கத்தின் கொள்கைகளுக்கு ஒத்திருக்கின்றதா என்பது மட்டுமல்லாமல், அக்கொள்கை விளக்கத்தை ஊக்குவிக்கின்ற முறையிலும் இருக்கின்றதா என்பது குறித்து ஆய்வுமேற்கொள்ள வேண்டியுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
Praedicate Evangelium திருத்தூது கொள்கை விளக்கத்தின் புதிய சட்டங்கள், திருப்பீடத் தலைமையகத்தில் பணிசார்ந்த நல்ல உறவுகளை உருவாக்குகிறதா, அத்தலைமையகத்தை மேலும் திறமையுடன் நிர்வாகம் செய்கிறதா, ஒவ்வொரு பணியாளருக்கும் தகுதியான நிலையை வழங்குகிறதா (காண்க. எண்.43 §2) போன்றவை குறித்து பரிசீலனை செய்யவேண்டியுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
திருப்பீட சட்ட விளக்கங்கள் அவையின் தலைவர் பேராயர் பிலிப்போ ஐனோனி, திருப்பீட தலைமையகத்தின் பொது விவகாரத்தின் நேரடிச் செயலர் பேராயர் எட்கர் பெனா பாரா, திருப்பீடச் சொத்து நிர்வாகத்துறையின் தலைவர் ஆயர் கலான்டினோ, செயலர் அருள்பணி மார்கோ மெல்லினோ, இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தின் தலைவர் அருள்பணி ஜுவான் அன்டோனியோ குரெரோ ஆல்வ்ஸ் ஆகியோர் கொண்ட குழுவை திருத்தந்தை உருவாக்கியுள்ளார்.