Namvazhvu
குடந்தை ஞானி தொய்வின்றி தொடரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருப்பணி
Tuesday, 17 May 2022 12:58 pm
Namvazhvu

Namvazhvu

85 வயது நிரம்பிய நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தற்போது முழங்கால் வலியால் அவதியுற்றாலும் அறைக்குள்ளோ மருத்துவமனைக்குள்ளோ முடங்கிவிடாமல் தொடர்ந்து தனது அன்றாடப் பணிகளை மிகுந்த பேரார்வத்துடன் ஆற்றிவருகிறார். கால் நரம்பை இழுக்கும் சியாட்டிக்கா என்னும் நோயால் திருத்தந்தை பாதிக்கப்பட்டிருக்கிறார்.

அடி முதுகில் ஆரம்பித்து காலின் பின்பகுதியில் உள்ள குதிகால் வரை நீளும் மிக நீண்ட சியாட்டிக்கா என்ற உடலின் நீளமான நரம்பு¬, திடீரென்று ஏற்படுத்தும் சொல்லி மாளாத வலி என்னும் நோயால் திருத்தந்தை பாதிக்கப்பட்டிருக்கிறார். மூட்டுப் பகுதியில் உள்ள இணைப்புகள் நன்றாக வேலை செய்வதற்கான ஊசிகள் திருத்தந்தைக்கு செலுத்தப்படுவதாக இத்தாலிய செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மே மாதம் 5 ஆம் தேதி உலகளாவிய பெண் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பின் 22 வது ஆண்டு நிறையமர்வில் செய்தி வழங்க திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்திற்கு வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முதன் முறையாக சக்கர நாற்காலியில் அமர்ந்தவண்ணம் உதவியாளர் ஒருவரால் கொண்டுவரப்பட்டார். உற்சாகம் குறையாமல் இருந்த திருத்தந்தை, ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த உரையை வாசிக்காமல், தாமே சொந்தமாக, தன் எண்ணத்தில் எழுந்த சிந்தனைகளைப் பகிர்ந்து துறவிகளை உற்சாகப்படுத்தினார். அச்செய்தியில், துறவற வாழ்வில் சில நேரங்களில் வலுவற்ற நிலையை ஏற்க கடினமாக இருந்தாலும் கூட துறவியர் அதனை ஏற்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே வலது முழங்காலின் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சரியான நிலையிலும் திருத்தந்தை வலது காலை சற்று தாங்கி நடப்பது வழக்கம். ஏப்ரல் 2-3 ஆகிய தேதிகளில் மால்டாவுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது விமானத்திலிருந்து இறங்கும்போதும் ஏறும்போதும் மின்தூக்கியை முதன்முறையாக திருத்தந்தைப் பயன்படுத்தினார். முழங்கால் வலியின் காரணமாக திருத்தந்தையின் பயணம் படிகளில் ஏறாத வண்ணம் திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கு முந்தைய வாரம் ஸ்லோவாக்கிய ஆயர்களைச் சந்தித்தபோது எழுந்து நின்று வாழ்த்து தெரிவிக்காமல் நாற்காலியில் அமர்ந்த வண்ணம் பேசுவதற்கு அவர்களிடம் வருத்தம் தெரிவித்தார். ‘ஒரு பிரச்சனை இருக்கிறது.. இந்த முழங்கால் சரியாக வேலை செய்யவில்லை; நடக்க வேண்டாம் என்று சொன்ன மருத்துவருக்கு நான் கீழ்ப்படியவேண்டும்என்று புன்னகைத்துக்கொண்டே சொன்னார்.

துறவியர் மாநாட்டில், திருத்தந்தை அவர்தம் அறைக்கு செல்லும்வரை பெண் துறவிகள் கைககளைத் தட்டி திருத்தந்தையை உற்சாகப்படுத்திய வண்ணம் இருந்தனர்.

திருத்தந்தை சக்கர நாற்காலியில் பொதுவெளியில் தோன்றுவது இதுவே முதல் முறை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தை எப்போதும்போல் புன்னகை தவழும் முகத்துடன், உற்சாகம் குறையாத மனதுடன் வழக்கம்போல் தன் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

பல்லக்குகளில் பட்டினப் பிரவேசம் மேற்கொள்ள துடிக்கும் இவ்வுலகில், நம் திருத்தந்தை, வலிகளின் மத்தியிலும் வழிகளைத்தேடி சக்கர நாற்காலியில் வலம் வருவது பாடம் மட்டுமல்ல.. நல்ல படிப்பினையே!

திருத்தந்தையின் உடல் நலத்திற்காக நாம் பக்தியுடன் செபிப்போம். - ஆசிரியர்

பின்குறிப்பு

அண்மைக் காலங்களில் கொடுத்த நேர்காணல்களில் திருத்தந்தை குறிப்பிட்ட ஜூன் மாதம் 12-13 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளவிருந்த லெபனானுக்கான திருத்தூதுப் பயணம் ஒத்தி வைக்கப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை மாதம் தெற்கு சூடான் - காங்கோ, மற்றும் கனடா நாட்டிற்கு திருத்தந்தை மேற்கொள்ளவுள்ள திருத்தூதுப் பயணங்களும் ஒத்திவைக்கப்படலாம் என்றே தெரிகிறது.