ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூர் மறைமாவட்டத்தில் உள்ள மலைக்கோவிலில் அன்னை மரியாள், குழந்தை இயேசு மற்றும் திருஇருதய ஆண்டவரின் திருவுருவச் சிலைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அடித்து உடைத்திருப்பது உள்ளூர் கத்தோலிக்கர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பங்குதந்தை பால சுபாஷ் சந்திர போஸ் "இச்சம்பவம் மே 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் இடைப்பட்ட இரவில் நடந்திருக்கிறது. அதிகாலை அங்கு வந்திருந்த எங்கள் பங்கு மக்கள் மூலம் நாங்கள் இதை தெரிந்து கொண்டோம். இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளோம். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. 2021 ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பாஜகவின் தேசியச் செயலாளரான சுனில் தியோதர் ட்விட்டரில், இம்மலையில் இந்துக் கடவுளான ராமர் மனைவியின் காலடித் தடங்கள் உள்ளன. எனவே இது எங்களுக்கு உரிய மலை என்று பதிவிட்டிருந்தார். அன்றிலிருந்து எங்களின் இந்த புனித மலை அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறது" என்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
குண்டூர் மறைமாவட்டத்தின் ஆயர் பாக்யய்யா சின்னபத்தினி "ஆறு மாதங்களுக்கு முன்பு, தன்னை பாஜகவின் தொண்டர் என்று அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு பெண்மணி இப்புனித மலைக்கு வந்து, இந்த இடம் சீத்தா தேவியினுடையது என்று கூறினார். இதை தொடர்ந்து பிஜேபி மற்றும் இந்து அடிப்படைவாத குழுக்கள், குண்டூரில் "கிறிஸ்தவ மாஃபியாக்கள் அழிவை உருவாக்குகிறார்கள்" என்று வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பி வந்தனர் என்று கூறினார்.
பங்குதந்தை போஸ், "இந்த மலையை 35 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் ஜெபம் செய்ய கிறிஸ்தவ மறைபரப்பு குழு வாங்கியது. அதிகமான மக்கள் ஜெபம் செய்ய வரத் தொடங்கியதால், நாங்கள் ஒரு கோவில் கட்ட முடிவு செய்தோம். கடந்த ஆண்டு பாஜக மற்றும் பிறரால் போடப்பட்ட தடைகளைத் தாண்டி நாங்கள் ஒரு சிலுவையை அமைத்தோம்," என்று மேலும் கூறினார்.
குண்டூர் மாவட்டத்தில் 900,000 மக்கள் தொகையில் 86 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது. மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 1.84 சதவீதம் மட்டுமே உள்ளனர்.