மாநில மேலவையில் வாக்கெடுப்பு நடத்தத் தவறிய நிலையில், மாநில ஆளுநரால் கையெழுத்திடப்பட்ட ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு, கர்நாடக மாநிலம் மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்தியதற்குப் பதிலளிக்கும்விதமாக மே 23 ஆம் தேதி, திங்களன்று, 103 ஆண்டுகள் பழமை வாய்ந்த அனைத்திந்தியக் கத்தோலிக்க அமைப்பானது (AICU), "இந்தியாவில் கடந்த ஒரு சில மாதங்களாக அதிகரித்து வரும் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு நடவடிக்கைகள் இப்போதே தடுக்கப்படாவிட்டால், தேசிய அமைதி மற்றும் ஒற்றுமைக்கு அவை பெரும்தீங்கை விளைவித்துவிடும்" என்று கூறியுள்ளது. அவ்வாறே மற்ற ஒன்பது இந்திய மாநிலங்களும் மத மாற்றத்தைக் குற்றமாகக் கருதும் இதேபோன்ற சட்டங்களை இயற்றியுள்ளதாகவும் இவ்வமைப்பு மேலும் கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து, இவ்வமைப்பின் தேசியத் தலைவர் லான்சி டி குன்கா, "அமைதி மற்றும் நல்லுறவை வலுப்படுத்த அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அவர்கள் தங்கள் பொறுப்பிலிருந்து விலகிச் செல்ல முடியாது" என்று கருத்துத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம், கர்நாடகா, அரியானா ஆகிய மாநிலங்களில் அண்மையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மதமாற்றத் தடைச் சட்டங்கள், அனைத்து நிலைகளிலும் சிறுபான்மை சமூகங்கள், அவர்களின் மதத்தலைவர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றை அச்சுறுத்துவதற்கு, சம்பந்தமே இல்லாத பலருக்கு இது அதிகாரம் கொடுத்துள்ளதாகவும் இவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அனைத்திந்தியக் கத்தோலிக்க அமைப்பு (AICU) என்பது, இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட, பொதுநிலையினரைக் கொண்ட ஒரு அமைப்பாகும். திரு அவையின் சமூகப் போதனைகளை அறிவிப்பதில் பொறுப்புள்ள கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கு, இவ்வமைப்பு மக்களைத் தூண்டி எழுப்புகிறது.