வருகிற ஜூலை மாதம் 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை, தென் சூடான் மற்றும் காங்கோ சனநாயக குடியரசுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப்பயண விவரங்களை மே 28 ஆம் தேதி சனிக்கிழமையன்று திருப்பீடம் வெளியிட்டுள்ளது.
மூன்று நகரங்கள், எட்டு உரைகள், மூன்று மறையுரைகள், அரசு மற்றும் திரு அவை அதிகாரிகள் சந்திப்பு, இளையோர், புலம்பெயர்ந்தோர், வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சந்திப்பு போன்றவை இத்திருத்தூதுப் பயணத்தில் இடம்பெறும். 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக இவ்விரு நாடுகளுக்குச் செல்லும் திருத்தந்தை, இப்பயண ஆவலை ஓராண்டுக்கு முன்னரே வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 2-முதல் 5 ஆம் தேதி வரை
ஜூலை 2 ஆம் தேதி சனிக்கிழமை உரோம் நேரம் காலை 9.30 மணிக்கு உரோம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து காங்கோ சனநாயக குடியரசின் கின்ஸாசா நகருக்குப் புறப்படும் திருத்தந்தை, அன்று உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு அந்நகரின் பன்னாட்டு விமான நிலையத்தை அடைந்து, அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்வுகளில் கலந்துகொள்வார். அதற்குப்பின்னர், கின்ஸாசா நகரின் தேசிய மாளிகையில் அரசுத்தலைவர் சந்திப்பு, அந்நாட்டு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் ஆகியோருக்கு உரையாற்றுதல், அந்நகரின் திருப்பீடத் தூதரகத்தில் இயேசு சபையினரைச் சந்தித்தல் ஆகிய நிகழ்வுகளை திருத்தந்தை நிறைவேற்றுவார். ஜூலை 3 ஆம் தேதி ஞாயிறன்று கின்ஸாசா நகரின் விமான நிலையத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை, அன்று மாலையில் அந்நகரின் காங்கோ அன்னை மரியா பேராலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், குருத்துவப் பயிற்சி மாணவர்கள் ஆகியோரைச் சந்திப்பார். ஜூலை 4 ஆம் தேதி திங்கள்கிழமை கின்ஸாசா நகரிலிருந்து கோமா நகருக்குச் செல்லும் திருத்தந்தை, பெனி மற்றும், காங்கோவின் கிழக்குப் பகுதியில் வன்முறையால் பாதிக்கப்பட்டோரைச் சந்தித்தபின், மீண்டும் கின்ஸாசா நகருக்குச் செல்வார்.
ஜூலை 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை
ஜூலை 5 ஆம் தேதி செவ்வாயன்று கின்ஸாசா நகரிலிருந்து, தென் சூடானின் ஜூபா நகர் செல்லும் திருத்தந்தை, அந்நாட்டில் இங்கிலாந்தின் கான்டர்பரி ஆங்லிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி, ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபையின் பொது அவையின் தலைவர் கிரீன்சீல்ட்ஸ் ஆகியோருடன் கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைதி திருப்பயண நிகழ்வுகளை நிறைவேற்றுவார்.
ஜூபா நகரில் அரசுத்தலைவர் சந்திப்பு, அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் ஆகியோருக்கு உரையாற்றுதல், இயேசு சபையினரைச் சந்தித்தல், "ஜான் கராங்" இறந்தோர் நினைவிடத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு போன்ற நிகழ்வுகளை நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 7 ஆம் தேதி முற்பகல் 11.15 மணியளவில் ஜூபாவிலிருந்து உரோம் நகருக்குப் புறப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.