Namvazhvu
குடந்தை ஞானி உரோமையில் 10 வது உலகக் குடும்பங்கள் மாநாடு
Monday, 13 Jun 2022 10:47 am
Namvazhvu

Namvazhvu

குடும்பம் என்பது, அன்பு மற்றும் அழகின் கொண்டாட்டம் என்று திருப்பீடத்தின் பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு கழகத்தின் துணைச் செயலாளர் பேராசிரியர் கேப்ரியல்லா காம்பீனோ கூறியுள்ளார்.

உரோமையில் வரும் ஜூன் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலகக் குடும்பங்கள் சந்திப்பு மாநாடு குறித்த விவரங்களை அறிவிப்பதற்காகத் திருப்பீடச் செய்தித் தொடர்பக அலுவலகத்தில் மே 31 ஆம் தேதி, செவ்வாய் அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது காம்பீனோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாகத் தாமதங்கள் ஏற்பட்டாலும், உரோம் மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள மறைமாவட்டங்கள், குடும்பங்களின் 10 வது உலக மாநாட்டிற்குத் தயாராகி வருவதாக அங்குக் கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம் பேராசிரியர் காம்பீனோ எடுத்துரைத்துள்ளார்.

இம்மாநாடு இறையியல்-கோட்பாட்டு உள்ளடக்கத்துடன் கல்வி ரீதியாக கட்டமைக்கப்பட்ட செயல்பாடுகளைக் கொண்டிருக்காது என்றும், அதேவேளையில், இது ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கும் உரையாடுவதற்கும் அழகியதொரு தருணமாக அமையும் என்றும் பேராசிரியர் காம்பீனோ விளக்கியுள்ளார்.

LGBT குடும்பங்கள் பங்கேற்பது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த பேராசிரியர் காம்பீனோ, அன்பின் மகிழ்ச்சி எனப் பொருள்படும் Amoris laetitia-வின் ஒளியில், இறைத்தந்தையின் அன்பை நோக்கி பரிவிரக்கமுடன் அனைவரையும் வரவேற்பது முக்கியம் என்றும், எல்லாக் குடும்பங்களும் திரு அவையுடன் ஒன்றித்திருக்கும் உணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றும் பேராசிரியர் காம்பீனோ தெரிவித்துள்ளார்.

"குடும்ப அன்பு: தொழில் மற்றும் புனிதத்திற்கான பாதை" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டுள்ள இம்மாநாடானது, ஜூன் 22 ஆம் தேதி புதன்கிழமை அன்று, திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் திருத்தந்தை பிரான்சிஸ் முன்னிலையில் தொடங்கும். ஜூன் 23 ஆம் தேதி வியாழன் முதல் 25 ஆம் தேதி  சனிக்கிழமை வரை மேய்ப்புப் பணிக் குறித்த மாநாடும் இதே அரங்கில் நடைபெறும். ஜூன் 25 ஆம் தேதி, சனிக்கிழமை மதியம் புனித பேதுரு சதுக்கத்தில் திருத்தந்தையின் தலைமையில் திருப்பலியும், அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை திருத்தந்தையின் மூவேளை செபவுரையும் நடைபெறும்.