இங்கிலாந்தின் ராணியாக, தனது பவள விழாவைக் கொண்டாடும் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அனுப்பியுள்ள தனது வாழ்த்துச் செய்தியில், அவருக்கும், அவரது அரசவைக் குடும்பத்தினர் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒற்றுமை, வளமை மற்றும் அமைதி நிறைந்த ஆசீர்வாதங்களை இறைவன் வழங்கிட தான் செபிப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
இலண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையிலுள்ள ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, தங்களின் மேன்மைமிகு பிறந்த நாளையும், இங்கிலாந்தின் ராணியாக, பவள விழா ஆண்டின் தொடக்கத்தையும் கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தான் தொடர்ந்து செபிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
தேசத்தின் நன்மை, அதன் மக்களின் முன்னேற்றம், புகழ்பெற்ற ஆன்மீக, கலாச்சார மற்றும் அரசியல் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அவரின் விடாமுயற்சி, மற்றும் உறுதியான பணிகளுக்கு வாழ்த்துக் கூறும் அனைவருடனும், தானும் மகிழ்ச்சியுடன் இணைந்துகொள்வதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
வருங்கால சந்ததியினருக்கு வழங்கப்பட வேண்டிய பரிசாக, கடவுளின் படைப்பைப் பராமரிப்பதில் அரசியின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், Queen’s Green Canopy என்ற யூபிலி மரம் நடும் திட்டத்திற்கு, லெபனோனின் கேதுரு மரம் ஒன்றைப் பரிசாக வழங்குவதில் தான் மகிழ்வதாகக் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், திருவிவிலியத்தில் துணிவு, நீதி மற்றும் வளமை ஆகியவற்றைக் குறிக்கும் இந்த மரம், அவரின் அரசாட்சியில் ஏராளமான தெய்வீக ஆசீர்வாதங்களின் உறுதிமொழியாக அமையட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.