சர்வதேச கத்தோலிக்கக் குடியேற்ற ஆணையத்தின் (ICMC) குழுவானது, ஜூன் 1 ஆம் தேதி, திருமதி. கிறிஸ்டின் நாதனை அதன் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்தது. முதல்முறையாக இக்குழுவிற்கு ஆசியாவிலிருந்து, அதிலும் சிறப்பாக நம் இந்திய மண்ணிலிருந்து ஒருவர் தலைவராக பொறுப்பேற்பதில் நமக்கு மகிழ்ச்சியே. இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் (CCBI) புலம்பெயர்ந்தோருக்கான ஆணையத்தால் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிறிஸ்டின் நாதன் மும்பை மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். மும்பை மறைமாவட்டத்தின் புலம்பெயர்ந்தோர் மற்றும் தொழிலாளர் ஆணையத்தின் உறுப்பினரான நாதன், இத்துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான முன்னனுபவத்தைக் கொண்டவர். மேலும் வயது வந்தோர் மற்றும் தொழிலாளர்களின் கல்வியில், மூத்த கல்வி நிபுணராக உள்ளார். ஒரு பக்தியுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவரான இவர், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சட்டங்களை வலுப்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் மற்றும் பாலின சமத்துவத்தை உருவாக்கவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். உலகெங்கிலும் உள்ள திருத்தூதுவ மாநாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ICMC குழுவின் 58 உறுப்பினர்கள் ரோமில் சமீபத்தில் நடந்த கூட்டத்தின்போது கிறிஸ்டின் நாதனைத் தேர்ந்தெடுத்தனர் என்று ஜூன் 2 ஆம் தேதி, (CCBI) யின் துணை பொதுச் செயலாளர் ஸ்டீபன் அலதாரா கூறினார்.