Namvazhvu
குடந்தை ஞானி குடியரசுத் தலைவராக ஒரு கிறித்துவர்?! திரு. தொல். திருமாவளவன் கோரிக்கை
Wednesday, 22 Jun 2022 06:59 am
Namvazhvu

Namvazhvu

இந்தியக் குடியரசு நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் 2017 ஜூலை 25 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவராக தனது ஐந்தாண்டு பணிகளை முடிக்கும் தருணத்தில் இந்தியக் குடியரசு நாட்டின் 15வது குடியரசுத் தலைவருக்கான தேர்தலானது ஜூலை மாதம் 18 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையொன்றில் கூறியுள்ளார்

இந்தியாவின் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் என பலதரப்பட்ட துறைகளின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பவர்கள் கிறித்துவர்கள். இந்திய மக்கள்தொகையில் மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் கிறித்துவர்கள். 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கின்படி 2.78 கோடி கிறித்துவர்கள் நம் இந்திய நாட்டில் வாழ்கிறார்கள். இவ்வளவு பெரிய எண்ணிக்கை கொண்ட  இச்சமூகத்திலிருந்து இதுவரை ஒருவர் கூட குடியரசுத் தலைவராக பொறுப்பு வகித்ததில்லை என்பது நெஞ்சை வருடும் செய்தி. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பெண்கள், தலித்துகள் முதலானோர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளனர். ஆனால், இதுவரை கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்த எவரும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததின் 75வது ஆண்டை கொண்டாடும் நாம், கிறித்துவ சமுதாயத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். இந்தியாவின் சுதந்திர தின பவள விழாவை கொண்டாடும் இந்நேரத்தில் கிறித்தவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதின் மூலம் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை உலகிற்கு காட்டுகிறோம். இதுவரை கிறித்துவர்களுக்கு சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றங்களிலும் போதுமான பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. அவர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கோவா, கேரளா போன்ற மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குக் கூட போதிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் அமைச்சரவையில் கிறித்துவர் எவரும் இடம்பெற்றிருக்கவில்லை. அதை பலமுறை, பலர் சுட்டிக்காட்டிய பிறகே அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தின் போது கிறித்துவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பாஜக ஆட்சியில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றிக் கிறித்துவர்களும் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். பல்வேறு மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு எவ்வித ஆதாரமும் இன்றி கிறித்துவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். மேலும், சங்பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்களால் கிறித்துவர்கள், குறிப்பாக அருள்பணியாளர்கள் திட்டமிடப்பட்ட தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆங்காங்கே தனித்தியங்கும் சிறிய சிறிய வழிபாட்டுத் தலங்கள், ஜெபக்கூடங்கள் காவல்துறையினரின் ஒத்துழைப்போடு தகர்க்கப்படுகின்றன, மூடப்படுகின்றன.

பெரும்பான்மை மக்களான இந்துக்களை ஒருங்கிணைக்க சிறுபான்மை மக்களுக்கெதிரான வெறுப்பு அரசியலையே தமது பிழைப்புக் கருவியாகப் பயன்படுத்தும் பாஜக, குடியரசுத் தலைவர் தேர்தலையும் அதே நோக்கத்திற்காகத்தான் பயன்படுத்தும். எனவே, எதிர்க்கட்சிகள் தமது பொது வேட்பாளராகக் கிறித்துவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த வேண்டும். இது பாதுகாப்பற்ற நிலையில் எந்நேரமும் அச்சத்தில் வாழும் கிறித்துவ மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாகவும், வெறுப்பு அரசியலுக்கு எதிரான ஒரு மாற்று நடவடிக்கையாகவும் அமையுமென்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது என திருமாவளவன் கூறியுள்ளார்.