Namvazhvu
அருள்திரு. ஆ.தைனிஸ், கப்புச்சின் சபை திரு அவை வரலாற்றுப் பேராசிரியர், ஆற்காடு. திருத்தூதர் புனித தோமா மறைசாட்சியான 1950 ஆம் ஆண்டு நினைவு
Thursday, 30 Jun 2022 10:46 am
Namvazhvu

Namvazhvu

இந்தியாவின் திருத்தூதர்

இந்தியத் திரு அவை ஈராயிரம் ஆண்டுகள் பழமையானது. இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவரான புனித தோமாவால் நற்செய்தி அறிவிக்கப்பட்ட பெருமைக்குரிய நிலம், தமிழகம் மற்றும் இந்தியத் திருநாடு. கி.பி.52 இல் புனித தோமா பழந்தமிழ்நாட்டின் ஒரு பகுதியான இன்றைய கேரளாவின் மலபார் கடற்கரையை வந்தடைந்தார். இவ்வாறு, முதல் நூற்றாண்டின் துவக்கத்திலே கிறிஸ்தவம் புனித தோமாவால் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் “புனித தோமா கிறிஸ்தவர்கள்” என்ற பெயரால் கிறிஸ்தவம் செழித்தோங்கியது. 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறைப்பணியாளர்களின் வருகையால் இந்தியா முழுவதும் கிறிஸ்தவம் மறுமலர்ச்சிப்பெற்றது. புனித பிரான்சிஸ் சவேரியார், புனித அருளானந்தர், வீரமாமுனிவர், தந்தை எப்ரேம் தெ நெவேர், வண. அனஸ்தாசியுஸ் ஹார்ட்மேன், இறைஊழியர் லூயிஸ் சவீனியன் துப்புயி, தந்தை கான்ஸ்டன்ட் லேவினாஸ், புனித அன்னை தெரசா போன்றோரின் மறைப்பணித் தாகத்தால், அர்ப்பணத்தால் புனித தோமாவால் விதைக்கப்பட்ட நற்செய்தி விதை ஆழமாக வேரூன்றி மனிதநேய சேவைகளால் இந்தியத் திருநாடெங்கும் பரவிக்கிடக்கிறது.

இந்தியாவில் இருபது ஆண்டுகள் மறைப்பணி ஆற்றிய புனித தோமா பரங்கிமலையில் கி.பி. 72 இல் மறைசாட்சியாக மரித்தார். கிறிஸ்துவுக்காக திருத்தூதர் தோமா நமது மண்ணில் மரித்து, 2022 ஆம் ஆண்டோடு 1950 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன. புனித தோமாவின் மறைசாட்சி விழா நமது நற்செய்தி வாழ்வை சீரமைக்க தூண்டுகிறது.

நற்செய்தி நூல்களில் புனித தோமா

நற்செய்தி நூல்களின்படி புனித தோமா இயேசுவின் பன்னிரெண்டு திருத்தூதர்களில் ஒருவராக அறியப்படுகிறார். தோமா என்றால் கிரேக்க மொழியில் “திதிம்” அதாவது இரட்டையர் என்பது பொருள். இதன் வேர்ச்சொல் அரமாயிக் மொழியில் “டோமா” என்பதாகும். கலிலேயாவிலுள்ள பன்சதா என்ற ஊர் திருத்தூதர் தோமாவின் பிறப்பிடமாக இருக்கலாம் என, விவிலிய அறிஞர்கள் கருதுகின்றார்கள். திருத்தூதரான புனித யோவான் தனது நற்செய்தி நூலில் மூன்று இடங்களில் திருத்தூதர் தோமா ஆண்டவர் இயேசுவோடு உரையாடுவதை பதிவு செய்துள்ளார். இலாசர் இறந்தபிறகு, யூதேயாவிற்கு நாம் செல்ல வேண்டும் என இயேசு கூறுகின்ற போது, அங்கு செல்வது நமது பாதுகாப்பிற்கு உகந்தது அல்ல என ஏனைய திருத்தூதர்கள் அஞ்சியப்பொழுது, தோமா மட்டும் மனவுறுதியுடன் “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம் என்றார்” (யோவா11:16). இவ்வார்த்தைகள் மூலம் நமது தலைவர் கிறிஸ்துவே! அவருக்கே நம் வாழ்வு! என்பதை தெளிவுப்படுத்துகின்றார்.

இயேசு தனது இறுதி இராவுணவின்போது, நான் தந்தையிடம் திரும்பிச் செல்கின்றேன், அவ்விடத்திற்கான வழி உங்களுக்குத் தெரியும் என்றார். அதற்கு தோமா “ஆண்டவரே நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படி தெரிந்து கொள்ள இயலும் என்றார்” (யோவா 14:5). இவ்வினா ஆழமான  கிறிஸ்தியலுக்கு இட்டுச் செல்கிறது; எனவேதான் இயேசு: “வழியும் உண்மையும் வாழ்வும் நானே; என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை (யோவா 14:6) என மொழிந்து, மானிடரின் மீட்புப்பணியில் தனது தரப்பில் பங்களிப்பை மிகத்துல்லியமாக பதிவுசெய்கிறார். புனித தோமாவைப் பற்றிய புனித யோவான் நற்செய்தியின் மூன்றாவது பதிவு (யோவா 20:24-29) புகழ்பெற்றது; கிறிஸ்து சாவை வென்று உயிர்த்தெழுந்தார் என்பதை நம்பாததால் “சந்தேக தோமாவாக” கிறிஸ்தவர் அனைவரிடமும் பரிச்சயமானார். உயிர்த்த இயேசுவைக் கண்டுப் பாவித்து மனப்பூர்வமாக விசுவசித்தபோது அவரில் எழுந்த நம்பிக்கை அறிக்கை “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!!” (யோவா 20:27) கிறிஸ்துவில் ஆட்கொண்ட ஆழ்ந்த அன்பையும், நம்பிக்கையும் வெளிப்படுத்தியது. மறைசாட்சியாக இரத்தம் சிந்தி மரிப்பதற்கும் உறுதிப்படுத்தியது.

புனித தோமாவின் சந்தேகத்தால் கிறிஸ்தவ நம்பிக்கையானவர்கள் அனைவருக்கும் ஒரு மாபெரும் ஆசீர்வாதம் கிடைத்துள்ளது அதுவே “என்னைக்  காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்!! (யோவா 20:29) என்ற இயேசுவின் ஆசி மொழிகள்.

இந்தியாவில் திருத்தூதர் தோமாவின் மறைப்பணி

கிறிஸ்துவின் விண்ணேற்பு மற்றும் தூய ஆவியாரின் வருகைக்குப் பிறகு, திருத்தூதர் தோமா கிழக்கு நாடுகளுக்கு நற்செய்தி அறிவிக்கும் பொறுப்பை ஏற்கின்றார். முதலில் இன்றைய ஈரான், ஈராக், சிரியா நாடுகளில் நற்செய்தி அறிவிப்புப்பணியை துவங்கினார். ஹபான் என்ற யூத வணிகர் துணையுடன் நற்செய்தி அறிவிப்பதற்காக திருத்தூதர் தோமா கி.பி 52 இல் இந்தியாவின் மலபார் கடற்கரை நகரான முசிறி (கொடுங்கலூர்) துறைமுகத்திற்கு வந்தடைந்தார்.

நற்செய்தியை அறிவித்து பக்காலோமட்டம், சங்கரபுரி, கள்ளி போன்ற பகுதிகளில் பல குடும்பங்களுக்கு திருமுழுக்களித்தார். கேரளா, தமிழக கடற்கரைப் பகுதிகளில் தம் கரங்களால் ஏழு ஆலயங்களை அமைத்ததாக பாரம்பரியம் பறைசாற்றுகிறது. கொடுங்கலூர், பலையூர், பரவூர், கொக்க மங்களம், நிரணம், கொல்லம் மற்றும் சாயல் (நிலக்கல்) ஆகிய இவ்வூர்களில் புனித தோமாவால் இவ்வாலயங்கள் எழுப்பப்பட்டன.

தமிழகத்தில்  சென்னை மயிலாப்பூர் பகுதியிலும் ஆர்வமுடன் கிறிஸ்து அறிவிப்புப்பணியில் ஈடுபட்டார். சென்னை மாநகரின் மூன்று இடங்கள் திருத்தூதர் தோமா வாழ்வோடு ஒன்றித்துக் காணப்படுகின்றன: சின்னமலை, பரங்கிமலை மற்றும் புனித சாந்தோம் பேராலயம். இவ்விடங்கள் தோமாவின் கடைசி நாட்களோடு தொடர்புடையவை. சின்னமலையில் உள்ள குகையை தனது வீடாக பயன்படுத்தி, கடும் தவ வாழ்வை மேற்கொண்டார். சின்னமலையின் மீதும், அக்குகையின் உட்பகுதியிலும் முழந்தாள் படியிட்டு மணிக்கணக்காக செபித்தார். தன்னைத் தேடிவந்த மக்கள் கூட்டத்திற்கு அம்மலையிலிருந்து நற்செய்தியை அறிவித்தார். அக்குகையில் வைக்கப்பட்டுள்ள குழந்தை இயேசுவை தாங்குகின்ற புனித மரியன்னையின் படம், நற்செய்தியாளர் லூக்கா அவர்களால் தீட்டப்பட்டு, தோமா தன் கைப்பட இந்தியாவிற்கு எடுத்துவந்த புனித ஓவியமாக மக்களால் நம்பப்படுகிறது. தனது செப, தவ நற்செய்தி வாழ்வால் பல புதுமைகளையும் திருத்தூதர் ஆற்றினார்.

புனித தோமா கிறிஸ்தவர்கள்

கேரளாவில் காணப்படுகின்ற சீரோ-மலபார், சீரோ மலங்கர கத்தோலிக்கர், மலங்கர பழைமைவாய்ந்த கிறிஸ்தவர், ஜேக்கோபைட், மலபார் சீரியன், மலங்கரமார்தோமா சிரியன் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கிறிஸ்தவ சபைகள் தங்களை திருத்தூதர் தோமா வழிவந்த கிறிஸ்தவர்கள் என அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

தங்களது முன்னோர்கள் தோமாவால் திருமுழுக்குப் பெற்றவர்கள் என நம்புகின்றனர். புனித தோமா கிறிஸ்தவர்களாக இவர்களை அணிதிரட்டும் பணி முதன் முதலில் 8 ஆம் நூற்றாண்டில் பிதாபிதா திமோத்தேயு அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. தங்களுக்கென்று வழிபாட்டுமுறை, மொழி, விழாக்கள், பண்பாடு ஆகியவற்றை வகுத்து, தங்களை வரலாற்றில் தனித்துவப்படுத்திக் காட்டினர்.

எனவேதான், போர்ச்சுக்கீசிய மாலுமி வாஸ்கோடகாமா தனது மாலுமிகளுடன் 1498 இல் கொச்சின் கரையை சேர்ந்தபொழுது, இங்கு ஏற்கனவே உயிரோட்டமான கிறிஸ்தவம் இயங்குவதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். புனித தோமா கிறிஸ்தவர்கள் ‘நஸ்ரானி கிறிஸ்தவர்கள்’ எனவும் அழைக்கப்பட்டனர். போர்ச்சுக்கீசியரின் ஊடுருவலால் 1653 இல் கூனன் சிலுவை உறுதிமொழியால், புனித தோமா கிறிஸ்தவர்கள் வரலாற்றில் முதன் முறையாக புத்தன்கூர், பழையாக்கூர் என இரு பிரிவுகளாக பிரித்தனர். இன்று அவர்களில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அனைத்து குழுக்களும் தங்களை தோமா கிறிஸ்தவர்கள் என அழைத்துக் கொள்வதில் பெருமையடைகின்றனர்.

கிறிஸ்தவ பாரம்பரியத்தில் புனித தோமா

தோமாவின் பதிவுகள் (Acts of Thomas) என்ற நூல் புனித தோமாவின் இந்தியப் பயணம், மறைப்பணிப் பற்றி கூறுகின்றது. இந்நூல் முதலில் சிரிய மொழியில் எழுதப்பட்டது. இந்நூலின் 17 ஆவது அதிகாரத்தில் திருத்தூதர் தோமா வட இந்தியாவில் வாழ்ந்த அரசன் கோந்த பாரசை சந்தித்ததாக குறிப்பிடுகின்றது. மர வேலையில் கை தேர்ந்த தோமாவிடம் தனது புதிய அரண்மனை கட்டுகின்ற பணியை ஒப்படைத்து அதற்குத் தேவையான பணத்தையும் தருகின்றார். திருத்தூதர் தோமா அரண்மனையைக் கட்டாமல், அத்தொகையை ஏழைகளுக்கு பிரித்துக் கொடுத்துவிடுகிறார். இதனால் கோபமடைந்த அரசன் திருத்துதர் தோமாவை ஈட்டியால் குத்தி கொலை செய்ததாக இந்நூல் குறிப்பிடுகின்றது. மேலும், புனித மரியன்னையின் விண்ணேற்பும், தோமாவின் சந்தேகத்தால் உறுதி செய்யப்பட்டது என பாரம்பரியம் கூறுகின்றது.

நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த திரு அவையின் தந்தையரில் ஒருவரான புனித எப்ரேம், திருத்தூதர் தோமா இந்தியாவில் மறைசாட்சியாக மரித்ததாகவும், அவரது திருப்பண்டங்கள் வணிகர் ஒருவரின் உதவியால் இன்றைய துருக்கியின் எடசா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக குறிப்பிடுகின்றார். மேலும் இதே நூற்றாண்டை சார்ந்த செசாரியா நகர் எவுசேபியுஸ் என்ற திரு அவையின் வரலாற்று அறிஞர் திருத்தூதர்களான தோமா மற்றும் பர்த்தலோமேயு இந்தியா வரை சென்று நற்செய்தியை அறிவித்தனர் என பதிவு செய்துள்ளார்.

மயிலையில் மறைசாட்சி மரணம்

சென்னை சின்னமலையில் தங்கி தோமா கிறிஸ்து அறிவிப்புப் பணியில் ஈடுபட்டப்போது நற்செய்தியை ஏற்காதவர்கள் அவரை ஈட்டியால் முதுகில் குத்தினர். அக்குகையில் திருத்தூதர் இறை வேண்டல் செய்யும்போது இந்நிகழ்வு நடைபெற்றது. அக்குகையிலுள்ள குறுகிய சந்து வழியாக திருத்தூதர் தோமா பரங்கிமலைக்கு தப்பிச் சென்றார். அங்கு இரத்த க hயங்களுடன் சில நாட்கள் துன்பத்தை அனுபவித்த பிறகு, கி.பி.72 டிசம்பர் 21 அன்று மறைசாட்சி மரணத்தை தழுவினார். இறந்த அவரது புனித உடலை திருத்தூதர்களின் சீடர்கள் இன்றைய சாந்தோம் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்ததாக பாரம்பரியம் கூறுகின்றது. 16 ஆம் நூற்றாண்டில் திருத்தூதரின் கல்லறையை போர்த்துக்கீசியர்கள் அடையாளம் கண்டு அக்கல்லறைமீது சாந்தோம் பேராலயத்தைக் கட்டியெழுப்பினர்.

சாந்தோம் - முதல் கிறிஸ்தவ நகரம்

இரண்டாம் நூற்றாண்டில் புனித தோமாவின் கல்லறையைத் தேடி பான்தேனையுஸ், பர்மேன்தேயுஸ் போன்ற கடற்பயணிகள் மயிலைக்கு வருகைப்புரிந்தனர். சீனாவின் பெக்கிங் முதல் ஆயர் மற்றும் பேராயராக நியமனம்பெற்ற ஜான் மோன்தே கொர்வினோ என்ற இத்தாலியில் பிரான்சிஸ்கன் துறவி சீனாவிற்கு செல்லும் வழியில் தொமினிக்கன் துறவி நிக்கோலஸ் பிஸ்தோவுடன் கி.பி 1291-92 ஆகிய ஆண்டுகளில் மயிலையில் தங்கி, நற்செய்தி அறிவித்து நூற்றுக்கணக்கானவர்களுக்குத் திருமுழுக்கு அளித்ததாக மார்க்கோபோலோ என்ற வரலாற்று அறிஞர் இந்தியாவிற்கான தனது பயணக்குறிப்பில் பதிவு செய்துள்ளார். கி.பி.1500 களின் துவக்கத்தில் புனித தோமாவின் கல்லறையைக் கண்டுபிடித்த போர்த்துக்கீசியர்கள் திருத்தூதரின் கல்லறையைச் சுற்றி புனித தோமாவின் பெயரால் சாந்தோம் என்ற நகரை எழுப்பி ஏராளமான போர்த்துக்கீசியர்களை குடியமர்த்தினர்.

புனித தோமாவின் கல்லறை ஆலயத்தை தொடர்ந்து 1517 இல் மயிலை காட்டுப் பகுதியில் பிரான்சிஸ்கன் மறைப்பணியாளர்கள் லஸ் என்ற புனித பிரகாச அன்னை ஆலயத்தை நிறுவினர். இவர்களை தொடர்ந்து பதுரவாதோ மறைப்பரப்பு அமைப்பின் கீழ் தொமினிக்கன், அகுஸ்தினார், இயேசு சபைத் துறவிகள் மற்றும் பதுரவாதோ மறைமாவட்டக் குழுக்களும் இந்நகரைச் சுற்றி ஆலயங்களை எழுப்பி நற்செய்திப் பணியில் ஈடுபட்டனர். 1606 இல் தெற்காசிய முழுமையும் உள்ளடக்கிய சாந்தோம் மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது. புனித தோமா என்ற மறைசாட்சியின் இரத்தத்தால் கிறிஸ்தவம் தெற்காசியா முழுவதும் வேரோடியது.

புனித தோமாவின் நினைவை போற்றுவோம்

திருத்தூதர் தோமா கிறிஸ்துவின் நற்செய்தியை நமது முன்னோர்களுக்கு அறிவிப்பதற்காக நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டார். துணிச்சல்மிக்க அவரது பயணமும், மறைப்பணி வாழ்வும் இன்றும் நமக்கு புதிய உத்வேகத்தை தருகின்றது. அவரது செந்நீரால் வேரூன்றப்பட்ட இந்தியத் திரு அவையும் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டு 1950 ஆண்டுகளை கடந்தும் உயர் துடிப்புடன் இருப்பது தூய ஆவியாரின் வழி நடத்துதலை உணர்த்துகிறது. ஆனால், இந்தியா முழுவதும் நற்செய்தியின் மதிப்பீடுகள் முழுமையாக சென்று சேரவில்லை. புனித அசிசி பிரான்சிஸ் தனது மரணப் படுக்கையில் “இந்நாள் வரை நாம் ஒன்றும் செய்யவில்லை வாருங்கள் நாம் புதிதாக துவங்குவோம்" என்றார். இச்சொற்களை மனதில் நிறுத்தி, இந்தியாவின் தென்பகுதியான சாந்தோமிலிருந்து கிறிஸ்தவர் அனைவரும் தமது வேறுபாடுகளைக் களைத்து கிறிஸ்துவின் விடுதலை சிலுவையை இணைந்து தூக்கி பிடிப்போம்; சிலுவையின் அருளில் இந்தியா எழுச்சிப்பெற உழைப்போம்.