திருப்பலி முன்னுரை
இன்று நாம் பொதுக்காலத்தின் 17 ஆவது ஞாயிறு வழிபாட்டினை சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தியில், ஆண்டவர் இயேசுவின் சீடர்கள், தங்களுக்கு செபிக்க கற்றுத்தருமாறு அவரிடம் கேட்கின்றனர். ‘செபம்’ என்பது கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடல். அந்த உரையாடல் நம்பிக்கையை அடித்தளமாக கொண்டு தந்தைக்கும், மகனுக்கும் நடக்கும் உரையாடல் போல இருக்க வேண்டும் என்பதை, ஆண்டவர் இயேசு கிறிஸ்து ‘தந்தையே’ என்றழைத்து நமக்கு எடுத்துக்காட்டுகிறார். இங்கு அற்புதமான ஓர் நிகழ்வு என்னவென்றால், செபத்தில் நாம் இறைவனிடம் அனைத்தையும் கேட்போம். ஆனால், இங்கே சீடர்கள் செபத்தையே இறைவனிடமிருந்து கேட்கிறார்கள். ஆண்டவர் இயேசு, செபம் என்பது தேவைகளின் தொகுப்பாக மட்டும் இருப்பது அல்ல; மாறாக, நம்மீது இரக்கம் காட்டும்படி, நமக்கு எதிராக குற்றம் செய்பவருக்கு மன்னிப்பு தரும்படி, சோதனைகளிலிருந்து விடுதலைதரும்படி, தந்தைக் கடவுளிடம் மன்றாட வேண்டும் என்பதை செபமாக தருகிறார். இவை அனைத்திற்கும் மேலாக விண்ணுலகில் உமது திருவுளம் எப்படி இருக்கிறதோ அதுபோன்று மண்ணுலகிலும் இருக்கவேண்டும் என்று, செபிக்க அறிவுறுத்துகிறார். ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியில், விடாமுயற்சியுடன் பலமுறை நீங்கள் தந்தைக் கடவுளிடம் கேட்டுக்கொண்டே இருந்தால், கேட்பதை பெறுவீர்கள் என்று, சொல்லுகிறார். அப்படிச் சொன்னவர் மற்றொரு கருத்தையும் முன்வைக்கிறார். பல நேரங்களில் நாம் செபிப்பது கிடைப்பதில்லை. ஏனெனில், நாம் நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆண்டவரிடம் செபிக்கிறோம். ஆண்டவரோ, அவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு நமக்குத் தருகிறார். எனவே, ஆண்டவரிடம் செபங்களை முன்வைக்கும் நாம், ஆண்டவரே உமது விருப்பப்படியே எங்களுக்குத் தாரும் என்று மன்றாடுவோம். இதற்கான வரத்தை இத்திருப்பலியில் வேண்டுவோம்.
முதல் வாசக முன்னுரை
சோதோம், கொமோரா நகர்களை இறைவன் அழிக்க நினைக்கிறார். ஆபிரகாம் நீதிமான்கள் பொருட்டு அதை அழிக்காமல் விட்டுவிடுவீரா எனக்கேட்க, ஆண்டவரோ, பத்து நீதிமான்கள் இருந்தால்கூட நகர்களை அழிக்கமாட்டேன் என்று கூறுவதை இம்முதல் வாசகத்தில் கேட்போம்.
தல் வாசகம்
தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 20-32
அந்நாள்களில் ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, ``சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெரும் கண்டனக் குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது. என்னை வந்தடைந்த கண்டனக் குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்துகொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்'' என்றார். அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார். ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: ``தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ? ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ? தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?'' என்றார். அதற்கு ஆண்டவர், ``நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்'' என்றார். அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, ``தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்து விட்டேன்; ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?'' என்றார். அதற்கு அவர், ``நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்'' என்றார். மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, ``ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?'' என்று கேட்க, ஆண்டவர், ``நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்'' என்றார். அப்பொழுது ஆபிரகாம்: ``என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம். ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்?'' என, அவரும் ``முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்'' என்று பதிலளித்தார். அவர், ``என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத் துணிந்து விட்டேன். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?'' என, அதற்கு அவர், ``இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்'' என்றார். அதற்கு அவர், ``என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒருவேளை அங்கு பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?'' என, அவர், ``அந்த பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்'' என்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 138: 1-2. 2b-3. 6-7. 7-8
பல்லவி: ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்.
1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்;
தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
2ய உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி
2bஉ உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;
ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.
3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்;
என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி
6 ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்;
எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்;
ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து கொள்கின்றீர்.
7யb நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்;
என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; -பல்லவி
7உ உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.
8 நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்;
ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு;
உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
நமது பாவங்களால் நாம் அடிமை வாழ்வுக்கு ஆளானோம். நமது பாவங்களை மன்னித்து நமது அடிமை வாழ்வின் கடன்பத்திரத்தை ஆண்டவர் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்துவிட்டார் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.
இரண்டாம் வாசகம்
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 12-14
சகோதரர் சகோதரிகளே, நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது கிறிஸ்துவோடு அடக்கம் செய்யப் பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர் பெற்று எழுந்துள்ளீர்கள். உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்களாயும் குற்றங்கள் செய்பவர்களாயும் வாழ்ந்ததால் நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். கடவுள் உங்களை அவரோடு உயிர்பெறச் செய்தார். நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார். நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன் பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்துவிட்டார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! பிள்ளைகளுக்கு உரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், ``அப்பா, தந்தையே'' என அழைக்கிறோம். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-13
அக்காலத்தில் இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, ``ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்'' என்றார். அவர் அவர்களிடம், ``நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்'' என்று கற்பித்தார். மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ``உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, `நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், `எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது' என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டேயிருந்தால், அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!''
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மன்றாட்டுகள்
1. எல்லாம் வல்லவரே! உம் திரு அவையை வழிநடத்தும் திருப்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினருக்கு நல்ல உடல் உள்ள நலனைத் தாரும். இவர்கள் காலத்தின் தேவைக்கேற்ப உமது பணிகளை விரைந்து செய்திட வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. இரக்கமுள்ள கடவுளே! நவீனம் என்ற பெயரில் சோதோம் கொமோரா நகர்களைப்போல மாறி வரும் எம் தாய் திருநாட்டின் மீது உமது இரக்கத்தை பொழிவீராக. தங்களது குற்றங்களை உணர்ந்து, நாட்டு தலைவர்களும், மக்களும் மனம்மாற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் விண்ணகத் தந்தையே! எமது பங்கின் இளையோர்கள் உம் திருமகன் இயேசு கிறிஸ்து கற்றுத்தந்த இறையாட்சியின் விழுமியங்களுக்கு ஏற்ப வாழ்ந்து, நீர் விரும்பும் நீதிமான்களாக இவர்கள் உருமாற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. என்றும் வாழ்பவரே! எங்கள் செபங்கள் தேவைகளின் தொகுப்பாக மட்டும் அமைந்து விடாமல், உம் திருமகன் இயேசு கிறிஸ்து கற்றுத் தந்ததுபோல, எங்களுக்கு எதிராக இருப்பவர்களுக்கும் செபிக்கும் உள்ளத்தை பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. நலம் தருபவரே! மருத்துவமனைகளில், வீடுகளில் நோயினால் பாதிக்கப்பட்டு, மருத்துவர்கள் கைவிட்ட நிலையிலும், உம்மீது நம்பிக்கை கண்களைப் பதியவைத்திருக்கும் இவர்களுக்கு நலம் தந்து, நீர் வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.