தென் இந்தியாவில் புகழ்பெற்றதும், தமிழகத்தின் முதன்மையான இறையியல் கல்லூரியுமான திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழா கோலாகலமாக ஜூன் மாதம் 29 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தமிழகம் மற்றும் இலங்கையில் உள்ள மறைமாவட்டங்களுக்கு தேவையான குருமாணவர்களுக்கு இறையியல் மெய்யியல் கல்வி தந்து, வளமான திருஅவையை உருவாக்கும்பொருட்டு 1921 ஆம் ஆண்டு சேசு சபை அருள்பணியாளர்களால் புனித பவுல் குருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது.
பின்னர், 1978ஆம் ஆண்டு முதல் மதுரை உயர்மறைமாவட்டத்திற்குட்பட்ட ஆயர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு, “கிறிஸ்துவின் நற்செய்திப் பணிக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட” என்ற விருதுவாக்குடன் செயல்படத் தொடங்கியது. கடந்த ஒரு நூற்றாண்டில் இந்தியா, இலங்கையில் உள்ள மறைமாவட்டங்களுக்கு 25 ஆயர்களையும் 1746 அருள்பணியாளர்களையும் துறவறச் சபைகளுக்கான எண்ணற்ற இருபால் துறவியரையும், 500க்கும் மேற்பட்ட கற்றறிந்த பொதுநிலையின கிறித்தவ நம்பிக்கையாளர்களையும் உருவாக்கி திருஅவையின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களித்துள்ளது. தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்குருகுலம் தமிழகத் திருஅவைக்கு ஒரு தனிவரமே.
இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகளை தமிழில் மொழிபெயர்த்தல், திருவிவிலியம் புதிய ஏற்பாடு மொழிபெயர்த்தல் திருஅவைச் சட்டம் தமிழில் மொழிபெயர்த்தல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான மொழிபெயர்ப்புப் பணிகளையும் , சூழமைவு இறையியல் கற்பித்தல், தமிழ் இறையியல் மன்றம், பண்பாட்டுமயமாக்கல் உள்ளிட்ட அறிவார்ந்த அணுகுமுறைகளையும் உட்புகுத்தி, மண், மக்கள், மரபு ஆகிவற்றின் மீது தீராப் பற்றும் பேரன்பும் கொண்ட இலட்சியமும் அர்ப்பணமுமிக்க ஆயிரக்கணக்கான குருமாணவர்களை இக்குருமடம் வளர்த்தெடுத்துள்ளது; தொடர்ந்து தொய்வின்றி இப்பணியைத் தொடர்கிறத. மெய்யியல், இளங்கலை - முதுகலை இறையியல் பயிற்சியளிக்கும் இக்குருத்துவக் கல்லூரி புனித பவுல் இறையியல் கல்வி நிறுவனமாக(st.Paul's Institute of Theology) அடுத்த நிலைக்கு வளர்ந்துள்ளதே இதன் வளர்ச்சிக்கு சாட்சியமாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்து திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத் திருப்பலிக்கு மதுரை பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி தலைமைத் தாங்கினார்; சென்னை - மயிலைப் பேராயர் மேதகு. ஜார்ஜ் அந்தோனிசாமி மறையுரை ஆற்றினார்.
13 ஆயர் பெருமக்களும் 450க்கும் மேற்பட்ட அருள்பணியாளர்களும் இருபால் துறவியரும் இல்லப்பணியாளர்களும் திரளான எண்ணிக்கையில் இறைமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அன்று மாலையில் நடைபெற்ற கலை நிகழ்வில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மாண்புமிகு அப்பாவு அவர்கள் தலைமை தாங்கி தலைமை உரை வழங்கினார். கத்தோலிக்க அருள்பணியாளர்களாலும் துறவியராலும் மேற்கொள்ளப்பட்ட கல்வி, மருத்துவம் சார்ந்த பிறரன்புப் பணிகளையும், சமூகநீதிக்கான முன்னெடுப்புகளையும் மனதாராப் பாராட்டினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேசு பொய்யாமொழி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு இனிகோ இருதயராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூற்றாண்டு விழா மலர் உட்பட நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன.
மேலும் குருமாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. இப்பயிற்சியகத்தின் இல்லத் தலைவர் அருள்முனைவர் ஆண்ட்ரூ டி ரோஸ், இல்லப் பொருளாளர் அருள்பணி. சவரிமுத்து, பேராசிரியர்கள், குருமாணவர்கள், இல்லப்பணியாளர்கள் என அனைவரும் திட்டமிட்டு உழைத்து உதவினர். இந்நிகழ்வுகளை மாதா தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பு செய்தது.