ஜூலை 22 புனித மகதலா மரியா
புனித மகதலா மரியா கலிலேயாவில் கெனசரேத்துச் சமவெளியின் தெற்கு பகுதியில் மகதலா நகரில் பிறந்தார். இயேசு இவரிடமிருந்து ஏழு பேய்களை ஓட்டினார். இயேசுவின் அளவற்ற அன்பும், இரக்கமும் பெற்று தூயவரானார். இயேசுவுக்கு பணிவிடை செய்த பெண் சீடர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றவர். இயேசுவின் இறையாட்சி பணியில், சிலுவையில் அறையப்பட்ட போதும், மகதலா மரியா உடனிருந்தார். தனது சொத்துகளை இயேசுவின் காலடியில் அர்ப்பணித்தவர். இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்தபின், அவருடைய உடலில் நறுமணத் தைலம் பூச யாக்கோபின் தாய் மரியா மற்றும் சலோமி ஆகியோருடன் சென்றார். “என் ஆண்டவரை யாரோ எடுத்துகொண்டு போய்விட்டனர்” என்று கூறி, கல்லறைக்கு வெளியே நின்று அழுது கொண்டிருந்தார். உயிர்த்த இயேசுவை முதலில் பார்த்து, அவரோடு பேசியவர். இயேசுவை ரபூனி என்றழைத்தவர்.