கனடாவின் வரலாறு
கனடா என்பதற்கு, கிராமம், அல்லது குடியேற்றம் என்ற அர்த்தமாகும். 16 ஆம் நூற்றாண்டு முதல், 18ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை, "கனடா" என்பது, புனித இலாரன்ஸ் ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள நியு பிரான்சின் (New France) ஒரு பகுதியாகவே கருதப்பட்டது. பின்னர் 1791ஆம் ஆண்டில், அந்தப் பகுதி இரு பிரித்தானிய காலனிகளாக, மேல் கனடா, கீழ் கனடா என அழைக்கப்பட்டது.
பின்னர் 1841ஆம் ஆண்டில் இவ்விரு காலனிகளும், கனடாவின் பிரித்தானிய ஒன்றியமாக, கனடா என அழைக்கப்பட்டது.
1867ஆம் ஆண்டில் இலண்டன் கருத்தரங்கில் இந்நாடு, கனடா என்ற பெயரை சட்டப்படி பெற்றது.
1982ம் ஆண்டில் இயற்றப்பட்ட கனடா அரசியலமைப்பின்படி, கனடா என்ற பெயர் அந்நாட்டிற்கு மட்டும் உரியதாக மாறியது.
16 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய மற்றும், பிரெஞ்சு நாடுகளின் பயணிகள், கனடாவைக் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்கள், அட்லாண்டிக் பெருங்கடலின் கரையோரம் தங்களின் குடியேற்றத்தை அமைத்தனர். பல்வேறு ஆயுதம் ஏந்திய போர்களின் விளைவாக, 1763ம் ஆண்டில், வட அமெரிக்காவில் பிரான்ஸ் நாடு, அதன் ஏறத்தாழ எல்லாக் காலனிகளையும் விட்டுக்கொடுத்துவிட்டது.
1867 ஆம் ஆண்டில், கூட்டாட்சி வழியாக மூன்று பிரித்தானிய வட அமெரிக்க காலனிகளைக்கொண்டு கனடா உருவாக்கப்பட்டது. அச்சமயத்தில் இது நான்கு மாநிலங்களைக் கொண்டிருந்தது. பிரித்தானியாவின் குடியிருப்புகளாக இருந்த ஒன்டாரியோ, க்யூபெக், நியுபிரன்ஸ்விக், நோவா ஸ்காட்டியா ஆகிய மாநிலங்கள், பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தின் வழியாக, கனேடிய கூட்டரசாக உருவானது. கனடாவின் பிற மாநிலங்கள் பின்னர் அவ்வரசில் சேர்ந்தன. 1949ஆம் ஆண்டில், நியு ஃபவுண்ட்லேண்ட் மாநிலம், கனடாவுடன் கடைசியாக இணைந்தது.
வெளியுறவுக் கொள்கை
பிரெஞ்சு, ஆங்கிலேயக் குடியேற்றதாரர்கள், ஃபர்ஸ்ட் நேஷன்ஸ் எனப்படும் முதல் குடிமக்கள் இனத்தவர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கனடா கூட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களின்படி கனடாவை இணைக்கும் இரயில் பாதை ஒன்று கட்டவேண்டிய தேவை இருந்தது. இதற்காக 1870களில் சீனர்கள் இரயில் பாதை கட்டமைப்பில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டனர்.
1885ஆம் ஆண்டு அப்பாதை கட்டிமுடிக்கப்பட்ட பின்பு, சீனர்கள் வரவு, குறிப்பாக 1923ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட சீனர்கள் வெளியேற்ற சட்டம் ( " Chinese Exclusion Act ") வழியாக கட்டுப்படுத்தப்பட்டது. 1920ஆம் ஆண்டளவில் கனடாவில் இன அடிப்படையிலான குடிவரவுக் கொள்கைகள் பின்பற்றப்படத் தொடங்கின. இதன் காரணமாக ஐரோப்பியர் தவிர, ஏனைய இன மக்கள் கனடாவுக்குள் வருவது கடினமாக்கப்பட்டது.
ஆயினும் இக்கொள்கை 1967ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. 1971ஆம் ஆண்டில், பல இனப் பண்பாட்டு கொள்கையை அதிகாரப்பூர்வ கொள்கையாக ஏற்றுக்கொண்ட உலகின் முதல் நாடாக கனடா விளங்கியது. அதனைத் தொடர்ந்து பன்னாட்டு மக்களும் கனடாவுக்கு வருவது அதிகரித்தது. இக்கொள்கையால், 1980களிலும் 1990களிலும் தமிழர்கள், பிற தெற்காசிய மக்கள், ஆப்ரிக்கர்கள் கணிசமான தொகையினராக இருந்தனர்.
கனடாவில் கிறிஸ்தவம்
கனடாவில் 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 67.2 விழுக்காடு கிறிஸ்தவர்கள். இவர்களில் பெரும்பான்மையினர் கத்தோலிக்கர். அந்நாட்டில் 23.9 விழுக்காட்டினர், எவ்வித மதங்களையும் பின்பற்றாதவர்கள். 3.2 விழுக்காடு இசுலாமியரும், 1.5 விழுக்காடு இந்துக்களும், 1.4 விழுக்காடு சீக்கியர்களும், 1.1 விழுக்காடு புத்த மதத்தினரும், 1 விழுக்காடு யூதர்களும் அந்நாட்டில் உள்ளனர். கனடாவில் அரசு மதம் என்று எதுவும் கிடையாது. ஆயினும், கனடாவின் அரசியல் கலாச்சாரத்தின்படி, பல்சமயத்தன்மை மற்றும், சமய சுதந்திரம் ஆகியவற்றுக்கு கனடா அரசு ஆதரவு வழங்குகிறது. ஐரோப்பிய காலனி ஆதிக்கத்திற்குமுன்பு, பூர்வீக இன மக்களின் இயற்கையை வழிபடும் மதங்கள் பரவலாக நிலவின. பூர்வீக இனத்தவர், ஆவிகளுக்கும் இயற்கைக்கும் மரியாதை அளித்தது உட்பட, அவர்களின் மதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.
16 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின்போது, உரோம் இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்கம் நியு பிரான்ஸ்-ல் குறிப்பாக, தற்போதைய நோவா ஸ்காட்டியாவாகிய கீழ் கனடா மற்றும், க்யூபெக்கில் பரவத் தொடங்கியது. 1534ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி, பிரெஞ்சு அருள்பணியாளர் ஒருவர், பயணி ஜாக்குஸ் கார்ட்டியர் (Jacques Cartier) அவர்களுக்கு, தற்போதைய நியூ பிரான்ஸ் அதாவது அப்போதைய காஸ்போ (ழுயளயீஸீ) தீபகற்பத்தில் திருப்பலி நிறைவேற்றினார். 1608ஆம் ஆண்டில் க்யூபெக்கிலும், 1642ஆம் ஆண்டில் வில்லே மேரி (Ville Marie) அதாவது தற்போதைய மான்ட்ரியல் (Montrea) நகரிலும் பிரெஞ்சு காலனி தொடங்கப்பட்டது. அதற்குப்பின்னர் பல பிரெஞ்சு துறவு சபைகள் கனடாவில் மறைப்பணியைத் தொடங்கின. இயேசு சபையினர், உரோனி பூர்வீக இனத்தவர் மத்தியில் மறைப்பணியைத் தொடங்கினர். அவர்களின் பணி 17 ஆம் நூற்றாண்டில் வளமையடைந்தது. இவர்களின் மறைப்பணிக்குச் சான்றாக விளங்குபவர் புனித கட்டேரி தெக்காக்வித்தா (Kateri Tekakwitha) (1656-1680) ஆவார். இவர் அமெரிக்காவின் முதல் பூரிவீக இனப் புனிதராவார். இவர், 2012ஆம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் புனிதராக அறிவிக்கப்பட்டார்.
18ஆம் நூற்றாண்டின் பாதியில் பிரித்தானியர் கனடாவை ஆக்ரமிக்கத் தொடங்கியது, கத்தோலிக்கத் திருஅவைக்கு இன்னலாக இருந்தது. எனினும், 19ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், கத்தோலிக்கரின் மத சுதந்திரத்தை பிரித்தானிய காலனி அரசு மதித்தது. அதற்குப்பின்னர், 1841ஆம் ஆண்டில் கனடாவில் கத்தோலிக்கத் திருஅவை சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டதால், பல்வேறு துறவு சபைகள் அந்நாட்டில் பணிகளைத் தொடங்கின.
தற்போது கனடாவில் அமைந்துள்ள 73 மறைமாவட்டங்களில் ஏறத்தாழ ஏழாயிரம் அருள்பணியாளர்கள் மறைப்பணியாற்றுகின்றனர். இக்காலக்கட்டத்தில் உலகில் நிலவும் உலகாயுதப் போக்கின் மத்தியில் மறைப்பணியாற்றும் பெரும் சவாலை கனடாவின் கத்தோலிக்கத் திருஅவை எதிர்கொண்டு வருகிறது. ஞாயிறு திருப்பலிகளில் 15 முதல் 25 விழுக்காட்டு கத்தோலிக்கரே பங்கு கொள்கின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன. இருந்தபோதிலும், கனடாவின் கத்தோலிக்கத் திருஅவை, பிற கிறிஸ்தவ சபைகள் மற்றும், மதங்களோடும், பூர்வீக இன மக்களோடும் உரையாடலை மேற்கொண்டு வருகிறது.
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை
மேலும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையினர், 1890களின் தொடக்கத்திலிருந்து, ஆஸ்ட்ரிய-ஹங்கேரி பேரரசின் கிழக்கு மற்றும், தென் பகுதியிலிருந்தும், மேற்கத்திய இரஷ்யப் பேரரசிலிருந்தும் கனடாவுக்குள் வரத் தொடங்கினர். இருபதாம் நூற்றாண்டில், முன்னாள் சோவியத் யூனியன், அதனைச் சேர்ந்த கிழக்கத்திய நாடுகள், கிரேக்கம் மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் கனடாவில் குடியேறத் தொடங்கியபோது கனடாவில் அச்சபை பரவத் தொடங்கியது. தற்போது கனடாவில் கிறிஸ்தவம் சரிவைக் கண்டுவருகிறது எனக் கூறப்படுகிறது. மக்கள் தங்களின் தினசரி வாழ்வில் மதத்தை முக்கியமற்றதாக கருதுகின்றனர். மதத்தைக் கடைப்பிடிப்பது தனிமனிதரைச் சார்ந்தது என்ற மனநிலை பரவலாக நிலவுகிறது. இருந்தபோதிலும் அம்மக்கள் கடவுள் நம்பிக்கையைக் கைவிட்டுவிடவில்லை.
“ஒன்றிணைந்து பயணம்” என்ற தலைப்பில், கனடாவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டுவரும் 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் நோக்கம் நிறைவேற செபிப்போம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 24, ஞாயிறு முதல், 29ம் தேதி வெள்ளிக்கிழமை வரை, கனடாவில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு, 30ம் தேதி உள்ளூர் நேரம் காலை 7.50 மணிக்கு உரோம் பியூமிச்சினோ பன்னட்டு விமான நிலையம் வந்திறங்கவுள்ளார்.