Namvazhvu
திருத்தந்தை கலிலேயக் கடல், பன்முகத்தன்மை கொண்டதொரு இடம்
Thursday, 28 Jul 2022 12:09 pm
Namvazhvu

Namvazhvu

Lac Ste. Anne எனப்படும் திருப்பயண புனித இடத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வில் திருத்தந்தை வழங்கிய மறையுரை.

அன்புச் சகோதரர் சகோதரிகளே, இவ்விடத்தில் உங்கள் மத்தியில் நானும் ஒரு திருப்பயணியாக இருப்பதில் மகிழ்வடைகின்றேன். குணப்படுத்தும் பணியை அனுபவிப்பதற்காக இறைவனை நோக்கிப் பயணத்தைத் தொடங்கும் திருப்பயணிகளின் இதயத் துடிப்பை இங்கே உண்மையிலேயே நம்மால் உணர முடிகிறது. இந்த முக்கியமான இதயத்துடிப்புகளால் ஈர்க்கப்பட்டுள்ள நாம்,  இந்த ஏரியின் நீரை அமைதியாக சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஏரியும், நம்பிக்கையின் தோற்றுவாய்களுக்குத் திரும்புவதற்கு நமக்கு உதவுகிறது. கலிலேய கடல் என்றழைக்கப்படும் ஒரு ஏரியின் கரையில் தனது பணியின் பெரும்பகுதியை மேற்கொண்ட இயேசுவை குறித்துத் தியானிக்க இது நம்மை அழைக்கிறது.

பன்முகத்தன்மை கொண்ட கலிலேயக் கடல்  

மேலும், கலிலேயக் கடலை, பன்முகத்தன்மை கொண்டதொரு இடமாக நாம் நினைவு கூறலாம். மீனவர்கள் மற்றும் வரிவசூலிப்போர், நூற்றுவர் மற்றும் அடிமைகள், பரிசேயர்கள் மற்றும் ஏழைகள், பலவிதமான பிறப்பிடம் மற்றும் சமூக பின்னணியில் இருந்து வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் அங்கே ஒன்றினையும் இடமாக இவ்விடம் அமைந்திருந்தது.

இங்குள்ள இந்த ஏரியின் சூழல் நம் அனைவரையும் அந்தக் கலிலேய ஏரியில் நடந்த நிகழ்வுகளுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நாம் அனைவரும் திருப்பயணிகள் என்ற விதத்தில் உடன்பிறந்த உணர்வு நிலையில் ஒன்றிணைந்து புதியதொரு வாழ்வைத் தொடங்குவதற்கு இந்த ஏரி நம்மை அழைக்கிறது.

திருஅவையும் ஒரு தாய்                                                                                                                                                                                                        

அன்பான சகோதரர் சகோதரிகளே, கோவிலினின்று புறப்படும் ஓடை பாயுமிடமெல்லாம் உயிர்கள் வாழும் என்று இறைவாக்கினர் எசேக்கியேல் இரண்டுமுறை கூறுகின்றார் (எசே 47:8,9). நம்முடன் இங்கிருக்கும் அன்பான பாட்டிகளை நான் நினைவு கூறுகின்றேன்:  உங்கள் இதயங்கள் நீரூற்றுகள், அதிலிருந்து பாயும் நம்பிக்கையின் வாழ்வு தரும் தண்ணீரைக் கொண்டு உங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் தாகத்தைத் தணித்தீர்கள். பூர்வீக இனச் சமூகப் பெண்களின் முக்கிய பங்கைக் கண்டு நான் வியந்துபோகின்றேன். அவர்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல, ஆன்மிக வாழ்க்கையிலும் ஆசீர்வதிக்கப்பட்ட தோற்றுவாய்களாக ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர்.

புதிய வாழ்வைத் தருவது மட்டுமல்ல அத்தண்ணீர் நம்மைக் குணப்படுத்தவும் செய்கிறது என்றும் இறைவாக்கினர் எசேக்கியேல் கூறுகின்றார். ஆகவே, தனிமையில் களைத்துப்போயிருக்கும் நம் குடும்பங்களை ஆறுதல்படுத்தவும் குணப்படுத்தவும், நமதாண்டவர் இயேசு அப்போதுமட்டுமல்ல இப்போதும் நம்மிடையே வருகிறார். “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத் 11:28) என்ற அவரின் வார்த்தைகள் வழியாக நம் அனைவருக்கும் அதே அழைப்பை விடுக்கின்றார் இயேசு.

இயேசு குணப்படுத்தியது போன்று, நமது அன்னையர்களும் பாட்டிகளும் நம் இதயத்தின் காயங்களைக் குணப்படுத்த உதவுகிறார்கள். நமது திருஅவையும் ஒரு தாய் போன்று நம்மைத் தேற்றிக் குணப்படுத்துகிறார்.

கேள்விகள் எழுப்பிச் சிந்திப்போம்

பூர்விக இனமக்களைப் பார்க்கும்போதும், அவர்களின் வரலாற்றையும், அவர்கள் அனுபவித்த வலிகளையும் நினைக்கும்போது, அவர்களுக்கும் குணப்படுத்துதல் அவசியம் என்பதை உணர முடிகிறது.

ஆகவே, அவர்களின் துயர்நிறைந்த கடந்த கால வரலாற்றை நான் ஆர்வமுடன் கேட்கின்றேனா, அவர்களுக்காக உறுதியாக ஏதாவது செய்கின்றேனா, அவர்களை நான் சந்திக்கின்றேனா, அவர்களுக்காக இறைவேண்டல் செய்கின்றேனா, அவர்களை ஆதரிக்கின்றேனா, அவர்களின் வாழ்வு என்னைத் தொட அனுமதிக்கின்றேனா என்ற கேள்விகளை எழுப்பிச் சிந்திப்போம்.

உங்களில் பலர் அணியும் வண்ணப் பட்டைகளின் இழைகளைப் போல் இறுகப் பிணைக்கப்பட்ட திருஅவை உங்களுடன் பின்னிப் பிணைந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நலமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட எதிர்காலத்தை நோக்கி, குணப்படுத்தும் செயல்பாட்டில் இன்னும் நீங்கள் முன்னேற இறைவன் நமக்கு உதவிபுரிவாராக!