ஜூலை 25, 2022 திங்கள்
ஜூலை 25 ஆம் தேதி திங்கள் காலை 6.30 மணிக்கு, எட்மன்டன் நகரின் புனித யோசேப்பு கல்லூரியில் தனியாகத் திருப்பலி நிறைவேற்றிய பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அங்கிருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்ற மஸ்குவாசிஸ் நகருக்கு காரில் சென்றார்.
கனடாவின் எட்மன்டன் நகருக்குத் தெற்கே, ஏறத்தாழ நூறு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மஸ்குவாசிஸ் பகுதிக்கு ஏறத்தாழ ஒரு மணி நேரம் காரில் பயணம் மேற்கொண்டார். பொதுவாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்களில், அந்நாடுகளின், அரசு மற்றும், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள் போன்றோரைச் சந்தித்து அவர்களுடன் உரையாற்றுவது முதல் பயண நிகழ்ச்சியாக இருக்கும். ஆனால், கனடா நாட்டுத் திருத்தூதுப் பயணத்தில், திருத்தந்தை முதலில் அந்நாட்டு பூர்வீக இனங்களின் மக்களை, இரு இடங்களில் சந்தித்தார்.
திங்கள் காலை பத்து மணிக்கு, மஸ்குவாசிஸ் பகுதியின் வியாகுல அன்னை பங்குத்தள ஆலயத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஆலய முகப்பிலேயே பங்குத்தந்தை, மற்றும், ஃபர்ஸ்ட் நேஷன்ஸ், மெட்டிஸ், இன்னூயிட் ஆகிய பூர்வீக இனங்களின் மூத்த பிரதிநிதிகள் வரவேற்றனர். பின்னர் அவர்கள் திருத்தந்தையை ஒரு சிறிய கோல்ப் வாகனத்தில் அமரவைத்து, தம்பூராக்களை இசைத்துக்கொண்டே கல்லறைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். மற்ற மக்கள் எவரும் இந்நிகழ்வில் அனுமதிக்கப்படவில்லை. அத்தோட்டத்தில் திருத்தந்தை சிறிதுநேரம் அமைதியாகச் செபித்தார். இவ்விடத்தில்தான், எர்மினேஸ்கின் பூர்வீக இனச் சிறாருக்கென நடத்தப்பட்ட மாணவர் விடுதிப் பள்ளி இருந்தது. அப்பள்ளியில் இறந்த சிறாரின் கல்லறைகளும் இங்குதான் இருக்கின்றன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கல்லறைத் தோட்டத்தில் செபித்த பின்னர், அதே காரில் அதற்கு அருகில் அமைந்துள்ள கரடி பூங்காவிற்குச் சென்றார். அவ்விடத்தின் நுழைவாயிலில் கனடாவின் அனைத்து பூர்வீக இனங்களின் தலைவர்கள் திருத்தந்தையை வரவேற்றனர். தங்களின் மரபுப்படி திருத்தந்தையை உள்ளே அழைத்துச் சென்றனர். அந்நிகழ்வில் முதலில் ஒரு பூர்வீக இனத் தலைவர் வில்ட்டன் லிட்டில் சைல்டு அவர்கள், திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார்.
அதற்குப் பின்பு திருத்தந்தையும் அம்மக்களுக்கு தன் எண்ணங்களை எடுத்துரைத்தார். இதுவே இத்திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை ஆற்றிய முதல் உரையாகும்.
திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வுரையை நிறைவுசெய்து அம்மக்களை ஆசீர்வதித்து, பூர்வீக இனங்களின் பிரதிநிதிகளைத் தனித்தனியே வாழ்த்தி, மீண்டும் காரில் எட்மன்டன் நகருக்குச் சென்றார். திங்கள் பகல் ஒரு மணிக்கு எட்மன்டன் நகரின் புனித யோசேப்பு குருத்துவக் கல்லூரியில் திருத்தந்தை மதிய உணவருந்தி சிறிதுநேரம் ஓய்வும் எடுத்துக்கொண்டார்.
திருத்தந்தை பிரான்சிஸ் மாலை நான்கு முப்பது மணிக்கு, எட்மன்டன் புனித யோசேப்பு குருத்துவக் கல்லூரியிலிருந்து 4.4 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இயேசுவின் திருஇருதய பூர்வீக இனத்தவரின் ஆலயத்திற்குச் சென்றார். 1913 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இவ்வாலயம், கனடாவிலுள்ள மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்றாகும். 1991 ஆம் ஆண்டில் பேராயர் ஜோசப் மாக்நெயில் அவர்கள், இவ்வாலயத்தை, ஃபர்ஸ்ட் நேஷன்ஸ், மெட்டிஸ் மற்றும் இன்னூயிட் ஆகிய இனங்களுக்குரிய தேசிய பங்குத்தள ஆலயமாக அறிவித்தார். இவ்வாலயத்தில் கத்தோலிக்க நம்பிக்கை, பூர்வீக இனத்தவரின் மரபில் அறிவிக்கப்படுகின்றது. இவ்விடத்தில் பூர்வீக இனத்தவரின் புனிதக் கலைகள் மற்றும், கைவினைப் பொருள்களைக் காணலாம். நாளடைவில், எட்மன்டன் நகரில் குடியேறிய புலம்பெயர்ந்தோர் இந்த ஆலயத்தில் தங்களின் ஆன்மீகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாலயப் பீடமும், திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளர் அமரும் நாற்காலியும் பூர்வீக இனக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. மிகவும் சேதமடைந்திருந்த இவ்வாலயத்தில் கடந்த ஈராண்டுகளாக புதுப்பித்தல் பணி நடைபெற்று, தற்போது புதுப்பொலிவுடன் விளங்குகிறது.
இவ்வாலயத்திற்குச் சென்ற திருத்தந்தையை, பங்குத்தந்தை அருள்பணி சூசை ஜேசு அவர்கள் வரவேற்று அழைத்துச் சென்றபோது, ஆலயத்திற்குள் மக்கள் தம்பூராக்களை இசைத்துக்கொண்டிருந்தனர். முதலில் அருள்பணி. சூசை ஜேசு அவர்கள் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். அமல மரி தியாகிகள் சபையைச் சேர்ந்த, அருள்பணி. சூசை ஜேசு அவர்கள், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழராவார்.
பங்குத்தந்தை அருள்பணி. சூசை ஜேசு அவர்கள் திருத்தந்தையை வரவேற்றதற்குப் பின்னர் பங்கு மக்களில் இருவர் திருத்தந்தையை வரவேற்று பேசினர். பூர்வீக இனத்தவரின் பாடலும் இடம்பெற்றது. இவற்றுக்குப்பின்னர், திருத்தந்தை தன் உரையைத் தொடங்கினார். இறுதியில் வட அமெரிக்காவின் முதல் பூர்வீக இனப் புனிதரான கத்தேரி தெக்காவித்தாவின் திருவுருவத்தை திருத்தந்தை புனிதப்படுத்தினார். இதுவே திங்களன்று நடைபெற்ற இறுதிப் பயண நிகழ்வாகும்.
திருத்தந்தை பிரான்சிஸ் அன்று மாலை மீண்டும் எட்மன்டன் புனித யோசேப்பு குருத்துவக் கல்லூரிக்குச் சென்று இரவு உணவு அருந்தி உறங்கச் சென்றார்.
ஜூலை 26, செவ்வாய்
ஜூலை 26, செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் தனது திருத்தூதுப் பயணத்தின் முதற்கட்டமாக கனடாவின் முதல் நாடுகளின் இன்னூயிட் மற்றும் மெட்டிஸ் பூர்வீக இன மக்களைச் சந்தித்து அவர்களுக்கு உரையாற்றினார். எட்மன்டன் நகரின் காமன்வெல்த் அரங்கத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியின் இறுதியில், எட்மன்டன் பேராயர் ரிச்சர்டு வில்லியம் ஸ்மித் அவர்கள் திருத்தந்தைக்கு நன்றி கூறினார்.
பேராயரின் இந்நன்றியுரைக்குப்பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார்.
எட்மன்டன் காமன்வெல்த் அரங்கத்தில், உள்ளூர் நேரம் பகல் 11.45 மணிக்கு திருப்பலியை நிறைவுசெய்து, அங்கிருந்து காரில், மீண்டும் எட்மன்டன் புனித யோசேப்பு குருத்துவக் கல்லூரிக்குச் சென்று திருத்தந்தை பிரான்சிஸ் மதிய உணவு அருந்திவிட்டு, சிறிதுநேரம் ஓய்வும் எடுத்துக்கொண்டார்.
செவ்வாய் மாலை நான்கு மணிக்கு, புனித யோசேப்பு குருத்துவக் கல்லூரியிலிருந்து 83 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள புனித அன்னாள் ஏரிக்கரை (Lac Ste. Anne) எனப்படும் திருப்பயண புனித இடத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் சென்றார்.
இந்த புனித இடத்திற்குச் சென்ற திருத்தந்தையை அப்பகுதி பங்குத்தந்தை வரவேற்றார். பின்னர் திருத்தந்தையை அந்த ஏரிப் பகுதிக்கு கோல்ப் காரில் அழைத்துச் சென்றனர். அங்குச் சென்றவுடன், பூர்வீக இன மக்களின் மரபுப்படி, திருத்தந்தை நான்கு பக்கங்களிலும் சிலுவை வரைந்து அத்தண்ணீரை ஆசிர்வதித்தார். சிறிதுநேரம் அமைதியாகச் செபித்தார். பின்னர் அந்த ஏரிக்கரையில் நடைபெற்ற இறைவார்த்தை திருவழிபாட்டை தலைமையேற்று நிறைவேற்றினார். அதில் திருத்தந்தை மறையுரையும் ஆற்றினார்.
அத்திருவழிபாடு முடிந்து பங்குத் தளத்திற்கு வரும் வழியில் அமைக்கப்பட்டிருந்த முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை மரியா திருவுருவத்தை திருத்தந்தை பிரான்சிஸ் ஆசீர்வதித்தார். பின்னர், அங்கிருந்து 83 கிலோ மீட்டர் தூரம் காரில் எட்மன்டன் நகரின் புனித யோசேப்பு குருத்துவக் கல்லூரிக்கு வந்தார். அங்கு இரவு உணவருந்தி திருத்தந்தை உறங்கச் சென்றார். இத்துடன் செவ்வாய் தின திருத்தந்தையின் பயண நிகழ்வுகள் முற்றுப்பெற்றன.
ஜூலை 27, புதன்
புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் நான்காவது நாளாகும். புதன் காலை 6.30 மணிக்கு, திருத்தந்தை, அந்நகரின் புனித யோசேப்பு குருத்துவக் கல்லூரியில் தனியாகத் திருப்பலி நிறைவேற்றியபின் காலை உணவை முடித்து, இந்நாள்களில் அக்கல்லூரியில் தனக்கு உதவி செய்த எல்லாருக்கும் நன்றியும் தெரிவித்தார். அக்கல்லூரிக்கு புனித யோசேப்பு திருவுருவம் ஒன்றையும் பரிசாக அளித்தார். அக்கல்லூரியிலிருந்து 31.3 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள எட்மன்டன் பன்னாட்டு விமான நிலையத்திற்கு காரில் சென்று கியூபெக் நகருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் புறப்பட்டார். ஏற்கனவே உள்ள திட்டத்தின்படி, திருத்தந்தை ITA A330 இத்தாலிய விமானத்தில் எட்மன்டன் நகரிலிருந்து கியூபெக் நகருக்குச் செல்லவேண்டியிருந்தது. ஆனால், நிறைய சிறப்பு விருந்தினர்கள், மற்றும், இப்பயணத்திற்கு ஆதரவளிக்கும் குழு ஆகியோர் மற்றொரு விமானத்தில் காத்திருந்ததால், திருத்தந்தையும் அந்த விமானத்தில் ஏறவேண்டியிருந்தது. இதனால் விமானம், எட்மன்டன் நகரிலிருந்து கியூபெக் நகருக்கு ஏறத்தாழ ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது.
ஜூலை 27, புதன் காலையில் எட்மன்டன் நகரிலிருந்து ஏறத்தாழ நான்கு மணி நேரம் விமானப் பயணம் மேற்கொண்டு, கனடாவின் கிழக்குப் பகுதியிலுள்ள கியூபெக் மாநிலத்தின் தலைநகரான கியூபெக் நகரின் பன்னாட்டு விமானத்தளம் சென்றார். பின்னர் அங்கிருந்து 15.8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கனடாவின் தலைமை ஆளுநர் மாளிகைக்கு திருத்தந்தை பிரான்சிஸ் காரில் சென்றார்.
ஜூலை 28, வியாழன்
வியாழனன்று, திருத்தந்தை கனடா நாட்டில் தனது முதல் பயணத் திட்டமாக, புனித அன்னா திருத்தலத்தில் திருப்பலியை நிறைவேற்றினார். அதன் பின்னர், கனடாவின் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்கள், திருத்தொண்டர்கள், மேய்ப்புப் பணியாளர்கள் ஆகியோரைச் சந்தித்தார்.
ஜூலை 29, வெள்ளி
37வது திருத்தூதுப் பயணத்தின் கடைசி நாள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காலை 7 மணிக்கு, கியூபெக் பேராயர் இல்லத்தில் தனியாகத் திருப்பலி நிறைவேற்றிய பின்னர் காலை உணவை முடித்து, இந்நாளின் முதல் நிகழ்வாக, கியூபெக் நகரில் தான் தங்கியிருந்த பேராயர் இல்லத்தில் கனடாவில் மறைப்பணியாற்றும் இயேசு சபை குழுமத்தினரைச் சந்தித்து திருத்தந்தை உரையாடினார்.
பின்னர், அதே இல்லத்தில் உள்ளூர் நேரம் காலை 10.45 மணியளவில், கியூபெக் நகரில் வாழ்கின்ற பூர்வீக இனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றினார். பூர்வீக இனங்களின் மக்களோடு மேற்கொள்ளப்பட்டுவரும், கடவுளுக்கு மிகவும் விருப்பமான ஒப்புரவு மற்றும், குணப்படுத்துதல் நடவடிக்கைக்கு நானும் உதவியிருப்பதாக நம்புகிறேன் என்று திருத்தந்தை இவ்வுரையில் கூறியுள்ளார். கியூபெக் பேராயர் இல்லத்தில் பூர்வீக இனங்களின் பிரதிநிதிகளோடு தன் நல்லுணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, அவர்கள் ஒவ்வொருவரையும் கைகுலுக்கி முத்திசெய்து வாழ்த்தினார். பேராயர் இல்லத்தில் தனக்கு நல்ல வரவேற்பளித்த அனைவருக்கும் நன்றி சொல்லி, புனித யோசேப்பு திருவுருவம் ஒன்றையும் பரிசாக அளித்து அங்கிருந்து கியூபெக் விமானத்தளம் சென்று ஈக்குவாலுயிட் நகருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் புறப்பட்டார்.
ஈக்குவாலுயிட் நகரத்தின் விமான நிலையத்தைச் சென்றடைந்த திருத்தந்தையை, சர்ச்சில்-ஹட்சன் ஆயரும், அமல மரி தியாகிகள் சபையைச் சார்ந்தவருமான அந்தோணி வியெஸ்லாவ் அவர்களும், ஐந்து உள்ளூர் அதிகாரிகளும் வரவேற்று, அங்கிருக்கும் அறையில் சிறிதுநேரம் உரையாடிக்கொண்டிருந்தனர். பின்னர் அங்கிருந்து காரில் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று, நாகாசு தொடக்கப் பள்ளிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் சென்றார். அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிலரைச் சந்தித்து திருத்தந்தை பேசினார்.
இப்பள்ளி, அக்கால பூர்வீக இனத்தவர் மாணவர் விடுதிப் பள்ளி அமைப்பாகச் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இம்முன்னாள் மாணவர்களோடு சேர்ந்து, இயேசு கற்றுக்கொடுத்த ‘விண்ணுலகில் இருக்கிற தந்தையே’ என்ற செபத்தை திருத்தந்தை சொன்னார். பின்னர் அப்பள்ளி வளாகத்தில் இளையோர் மற்றும், வயது முதிர்ந்தோரை திருத்தந்தை சந்தித்தார். இளையோர், தங்களின் பாரம்பரிய இசைக் கருவிகளை மீட்டி திருத்தந்தையை வாழ்த்திப் பாடினர். அதற்குப்பின்பு, திருத்தந்தையும் உரையாற்றினார்.
ஈக்குவாலுயிட் நகரத்தில் இன்னூயிட் இனத்தவரைச் சந்தித்து அவர்களோடு தன் அருகாமையைத் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார். 85 வயது நிரம்பிய திருத்தந்தை அவர்கள், கனடாவில் மேற்கொண்ட “தவத் திருப்பயணத்தின்” இறுதி நிகழ்வுகள் ஈக்குவாலுயிட் நகரில் நடைபெற்றன. இத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கனடா நாட்டு முதல் திருத்தூதுப் பயணம், மற்றும், அவரது 37வது திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வந்தது.
ஜூலை 30, சனிக்கிழமை இத்தாலி நேரம் காலை 8 மணிக்கு உரோம் பியூமிசினோ பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தார். வத்திக்கானுக்கு திரும்பிய வழியில், உரோம் மேரி மேஜர் பெருங்கோவில் சென்று, இப்பயணம் சிறப்பான முறையில் நடைபெற்றதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அன்னை மரியாவுக்கு நன்றி தெரிவித்தார்.(ஆக்கம் : குடந்தை ஞானி)