இந்தியாவில் பழங்குடியினர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் படிப்படியாக அதிகரித்து வருவதை, நாடு தன் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய திரு அவைத் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கூறுகின்றனர்.
பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 2018 மற்றும் 2020 க்கு இடையில் 26 சதவீதம் அதிகரித்துள்ளன, அதே நேரத்தில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 17 சதவீதம் அதிகரித்துள்ளன என்ற புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி மத்திய உள்துறை அமைச்சர் அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றினார். மத்திய உள்துறை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, “பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் 2018 இல் 6,528 ஆக இருந்து 2020 இல் 8,272 ஆக உயர்ந்துள்ளது. இது 26.71 சதவீதம் அதிகரித்து 8,272 ஆக உயர்ந்துள்ளது. தலித்துகளு எதிரான குற்றங்கள், 42,793ல் இருந்து 52,291 ஆக உயர்ந்துள்ளது. இது மூன்று ஆண்டுகளில் 17.5 சதவீதம் அதிகரித்துள்ளது” என்று நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தேசிய குற்றப்பதிவு பணியகம் (NCRB) சேகரித்த தரவுகளை மேற்கோள் காட்டி தெரிவித்தார்.
பழங்குடியினர் மற்றும் தலித் சமூகங்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான குற்றங்கள் வடக்கு உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார். “அமைச்சர் சமர்ப்பித்த அறிக்கை கவலையளிக்கிறது மற்றும் அச்சுறுத்துகிறது. உடனடியாக அரசு தலையிட்டு வன்முறையாளர்களை கைது செய்ய வேண்டும். இம்மக்களின் சட்டம் பற்றிய அறியாமையை வன்முறையாளர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். மேலும் பெரும்பாலான குற்றங்கள் காவல் துறையிடம் புகார் செய்யப்படுவதில்லை”என்று இந்திய கத்தோலிக்க ஆயர்கள் ஆணையத்தின் பழங்குடியினர் பிரிவிற்கான செயலாளர் தந்தை நிக்கோலஸ் பர்லா கூறினார்.
தலித் கிறிஸ்தவ ஆர்வலரும், ராமன் மகசேசே விருதை வென்றவருமான பெஸ்வாடா வில்சன், "புது தில்லியில் அல்லது மாகாணங்களில், அரசாங்கம் எதுவாக இருந்தாலும், இந்நிலைமாறாது," என்று கூறினார். புதுதில்லியில் உள்ள ஒரு வார இதழின் ஆசிரியர் முக்தி பிரகாஷ் டிர்கி, “மக்களுக்கு சட்டத்தின் மீது எந்த பயமும் இல்லை. தன்னை வலிமையானதாக காட்டிக்கொள்ளும் சமூகம் பலவீனமானவர்கள் மீதான வன்முறையை மாற்றாத வரை, எதுவும் மாறாது” என்று கூறினார்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில், பல குற்றங்கள் குறைந்து போனாலும் பழங்குடியினர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்களின் அதிகரிப்பு தனித்து நிற்கிறது.