டிஜிட்டல் உலகில், இயேசு கிறிஸ்துவை இன்னும் சந்தித்திராத மக்களுக்கு அவரை அறிவிக்கும் டிஜிட்டல் நற்செய்தி அறிவிப்புப் பணியாளர்களை திருத்தந்தை பிரான்சிஸ் ஊக்குவித்தார்.
மெக்சிகோ நாட்டின் மான்ட்டெரி நகரில், “திருத்தூதுப் பணிகள் 29” என்ற தலைப்பில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெள்ளி, மற்றும் 6 ஆம் தேதி சனி ஆகிய இரு நாள்களில் நடைபெற்ற பன்னாட்டு நிகழ்வில் கலந்துகொண்ட இளையோரிடம், ஆகஸ்ட் 06 ஆம் தேதி, சனிக்கிழமை மாலையில் காணொளி வழியாகப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக கிறிஸ்துவை அறிவிக்கும், டிஜிட்டல் நற்செய்தி அறிவிப்புப் பணியாளர்கள், திருஅவையின் உயிரூட்டமுள்ள உறுப்பினர்களாக இருக்குமாறும் ஊக்கப்படுத்தியுள்ள திருத்தந்தை, ஆண்டவர் நம்முள் நுழைய நம் இதயக்கதவைத் தட்டுகிறார். அதேநேரம், நமக்குள்ளே இருக்கும் அவரை வெளியே கொணர பல முறைகள் தட்டுகிறார் என்று கூறியுள்ளார்.
இணையதள மறைப்பணியாளர்கள்
இந்த முக்கியமான நிகழ்வில் கலந்துகொண்ட அவர்கள் அனைவரும் ஒரு குழுமமாக, திருஅவையின் மறைப்பணி வாழ்வின் ஓர் அங்கமாக இருக்கவேண்டும் என்ற தன் ஆவலைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, திருஅவை, புதிய எல்லைகள் மற்றும் பகுதிகளில், கடவுளின் இரக்கம் மற்றும் கனிவன்பை, படைப்பாற்றல் மற்றும் துணிவோடு அறிவிக்க ஒருபோதும் அஞ்சாது என்று எடுத்தியம்பியுள்ளார்.
கிறிஸ்துவை இன்னும் அறியாதவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதற்கு புதிய வழிகளைக் காணுமாறு, தனது அண்மை கனடா திருத்தூதுப் பயணத்தின்போது, கத்தோலிக்கரை, தான் ஊக்கப்படுத்தியதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார். நாம் வாழும் இடங்களில் மற்றவர் நம்மிடம் வரவேண்டும் எனக் காத்திருக்காமல், அவர்களைச் சந்தித்து அவர்கள் பேசுவதைக் கேட்டு, உரையாடுவதற்கு வாய்ப்புக்களைத் தேட, மேய்ப்புப்பணியில் படைப்பாற்றல் அவசியம் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
இணையதளம் வழியாக நற்செய்தியை அறிவிக்கும்போது தவறுகள் இழைப்பதற்கு அஞ்சவேண்டாம் என கத்தோலிக்க இளையோரைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் விளிம்புநிலைகளில் மறைப்பணியாற்ற முயற்சிகளை மேற்கொள்கையில் காயமடையும் திருஅவையை நான் விரும்புகிறேன் என்று கூறுவதில் ஒருபோதும் சோர்வடையமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
சில்லறைத்தனமான பாதுகாப்புகளுக்காக தன்னையே முடக்கிக்கொள்ளும் திருஅவை நோயுற்ற திருஅவை என்று கூறியுள்ள திருத்தந்தை, டிஜிட்டல் மறைப்பணியாளர்கள், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில், மற்றவருக்கு நல்ல சமாரியர்களாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இளையோர் இணையதளத்தில் மற்றவரை நன்றாக நடத்துவதன் வழியாக, அவர்களில் கடவுள் இருப்பதை சமகால இளையோர் அறிவார்கள் எனவும், இயேசுவை அறியாதவர்களுக்கு அவர் மீது நம்பிக்கையை உருவாக்குங்கள் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.