Namvazhvu
கந்தமால் கிறிஸ்தவர்கள் கந்தமாலுக்காக 14 நாட்கள் தொடர் செபவழிபாடு
Friday, 12 Aug 2022 06:44 am
Namvazhvu

Namvazhvu

கந்தமாலில் கிறிஸ்தவர்களுக்கு நடந்த அந்த கொடுமையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. 2008, ஆகஸ்ட் 23 ஆம் தேதி, அன்று ஜென்மாஷ்டமி இரவில் கந்தமாலில் உள்ள ஆசிரமத்தில் 81 வயதான சுவாமி லஸ்மணானந்த சரஸ்வதி மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மரணத்திற்கு கிறிஸ்தவர்களே காரணம் என்று இந்து அடிப்படைவாதிகள் கிறிஸ்தவர்கள் மீது வன்முறையை தொடுத்தனர். 100க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ரத்தம் சிந்தி மறைசாட்சிகளாக மரித்தார்கள். 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் சிதைக்கப்பட்டன. 6000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. 56,000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் தங்கள் உயிரை காத்துக் கொள்ள காடுகளுக்குள் ஓடிப் போனார்கள். இக்கொடுமையான  நிகழ்வுகள் அரங்கேறி 14 வருடங்கள் நிறைவு பெற்றிருக்கின்றன. கந்தமால் கிறிஸ்தவர்களின் இந்த 14 வருட மறைசாட்சிய வாழ்வை நினைவு கூறும் வகையில், 14 நாட்கள் தொடர் வழிபாட்டை நடத்துவதாக கந்தமால் கிறிஸ்தவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். “14 வருடங்கள் ஆகியும் கிறிஸ்தவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இம்மிகப்பெரிய வன்முறைக்கு சரியான நீதியோ அல்லது நஷ்ட ஈடு இதுவரை வழங்கப்படாதது உண்மையாகவே வருத்தத்தை தருகிறது”, என்று 2016 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தனது வருத்தத்தை தெரிவித்தது. “செபம் செய்வதிலிருந்து எங்களை யாரும் தடுக்க முடியாது. ஒன்றுமறியாத கிறிஸ்தவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைக்கு மூல காரணம் யார்? என்ன? என்பதை இந்த செபத்தின் வழியாகவே அறிந்து கொள்ள முடியும். ஆகவே ஒவ்வொரு கிறிஸ்தவரும் கண்டிப்பாக செபம் செய்ய வேண்டும்என்று அக்கராவா என்கிற எழுத்தாளர் UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார். இவர் இந்த செபங்களை ஆங்கிலம், இந்தி, ஒடியா, மலையாளம் மற்றும் தமிழ் என ஐந்து மொழிகளில் தயாரித்திருக்கிறார்.