Namvazhvu
பேராயர் விர்ஜிலியோ டோ கார்மோ டா சில்வா கிழக்குத் திமோரின் முதல் கர்தினாலோடு ஓர் உரையாடல்
Friday, 19 Aug 2022 12:05 pm
Namvazhvu

Namvazhvu

தான் கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழியாக, கடவுள், கிழக்குத் திமோர் திருஅவைக்கும், நாட்டு மக்களுக்கும் வழங்கும் ஓர் அருள்கொடையாக உள்ளது என்று, அந்நாட்டின் முதல் கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருக்கும், தலைநகர் திலி பேராயர் விர்ஜிலியோ டோ கார்மோ டா சில்வா  அவர்கள் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 27ம் தேதி வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றும் நிகழ்வில், பேராயர்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள் என 21 பேர், கர்தினால்களுக்குரிய சிவப்புத் தொப்பியைப் பெற்று, கர்தினால்கள் அவையில் இணைவார்கள்.

இவ்வாண்டு மே மாதம் 29ம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த 21 பேரில் ஒருவரான, சலேசிய சபையைச் சார்ந்த 54 வயது நிரம்பிய பேராயர் கார்மோ டா சில்வா  அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், கிழக்குத் திமோர் நாட்டின் முதல் கர்தினாலாக தான் அறிவிக்கப்பட்டிருப்பது, தனது ஆன்மிகம், தலத்திருஅவை எதிர்கொள்ளும் சவால்கள், தலத்திருஅவைக்கு தான் முன்னுரிமை கொடுக்கவேண்டிய பணிகள் என பல்வேறு தலைப்புக்களில் தன் எண்ணங்களை எடுத்துரைத்துள்ளார்.

கிழக்குத் திமோரில் கத்தோலிக்கம் பரவத்தொடங்கியதன் 500ம் ஆண்டு நிறைவு, அந்நாடு போர்த்துக்கல் நாட்டிலிருந்து விடுதலை அடைந்ததன் இருபதாம் ஆண்டு (மே 20,2002)  நிறைவு ஆகிய இரு முக்கிய நிகழ்வுகளும், 96 விழுக்காடு கத்தோலிக்கரைக் கொண்டு, தென்கிழக்கு ஆசியாவில் சிறிய நாடாக விளங்கும் கிழக்குத் திமோர் மக்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளன என்று, கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருக்கும் பேராயர் கார்மோ டா சில்வா  அவர்கள் கூறியுள்ளார்.

கத்தோலிக்கப் பாரம்பரியம், கிழக்குத் திமோர் நாட்டுத் தனித்துவத்தின் அடிப்படை அம்சமாக அமைந்திருக்கின்றது என்றும், இதனை நாட்டு மக்களின் வாழ்வில் தெளிவாக உணரலாம் என்றும் உரைத்துள்ள அவர், அதற்கு எடுத்துக்காட்டு ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், எகிப்தின் அல்-அசார் இசுலாமிய தலைமைக்குருவும் அபு தாபியில் கையெழுத்திட்ட மனித உடன்பிறந்த நிலை (Human Fraternityஎன்ற ஏட்டை, கிழக்குத் திமோர் நாடாளுமன்றம், அண்மையில் அந்நாட்டில் சிறப்பிக்கப்பட்ட இருபதாம் ஆண்டு சுதந்திர நிகழ்வின்போது ஏற்றுக்கொண்டது என்பதை திலி பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது கிழக்குத் திமோர் மக்கள் அனைவருக்கும் மகிழ்வையளித்துள்ளது எனவும், ஆகஸ்ட் 27ம் தேதி நடைபெறும் நிகழ்வில் அரசு சார்பில் மூன்று பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் எனவும் திலி பேராயர் கார்மோ டா சில்வா  குறிப்பிட்டார். போர்த்துக்கல் நாடு, 1769ஆம் ஆண்டு கிழக்குத் திமோரில் காலனி ஆதிக்கத்தைத் தொடங்கி, 1975ஆம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி அதனை முடித்துக்கொண்டது.