மார்ச் 10, 1953
இந்திய இறையழைத்தலின் விளைநிலமாம் கோட்டாறு மறைமாவட்டத்தின், பிள்ளைத்தோப்பு என்னும் சிற்றூர் அகில உலகத் திரு அவைக்கு ஈந்த ஒப்பிலா செல்வமே மேதகு ஆயர் தாமஸ் அக்வினாஸ்!
விசுவாசத்திலும் பிறரன்பிலும் திளைத்திருந்த லெபோன்ஸ்-எலிசபெத் தம்பதியினரின் தவப்புதல்வனாக பிறந்த இவர், வான்முகிலாக, வளமை சேர்க்க தன் சிறகுகளை விரித்தார்.
மே 22, 1980
இறைவனின் அழைப்பை உள்ளூற உணர்ந்து, இளங்குருமட மாணவராக சாந்தோம் புனித தோமா இளங்குருமடத்தில் தன் வேர்களைப் பரப்பி, பூவை திரு இருதய குருமடத்தில் மெய்யியலையும் இறையியலையும் கற்று வேலூர் மறைமாவட்டத்திற்காக, மேதகு ஆயர் அந்தோனிமுத்து அவர்களால் தம் பிறந்தகமான பிள்ளைத்தோப்பில் 1980-ல் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
1980-1987
ஜமீன் கூடலூரில் உதவிப் பங்குத்தந்தையாக தன் குருத்துவப் பணியைத் தொடங்கினார்; விருது விளங்கினான் என்னும் திருத்தலத்தில் உதவிப் பங்குத்தந்தையாக தொடர்ந்தார். 1982 முதல் 1986 வரை அதே பங்கில் பங்குத்தந்தையாக தகுதி உயர்ந்தார்.
வேலூர் மறைமாவட்ட இளங்குருமட அதிபராக பத்தியாவரத்தில் தன் பணி தொடர்ந்து, மறைமாவட்டப் பொருளாளராகி, தான் படித்த பூவை திரு இருதய குருமடத்தில் பேராசிரியராக தன் பணியைத் தொடர்ந்தார்.
1988-1997
பெல்ஜியம் லூவேன் பல்கலையில் 1988-1993 வரை திரு அவைச் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்று, மீண்டும் பூவை திரு இருதய குருமடத்தில் பேராசிரியராகத் தம் மறைப்பணியைத் தொடர்ந்தார்.
பங்கு - மறைமாவட்டம் - குருமடம் - கல்வி - திரு அவைச் சட்டம் - பேராசிரியர் என்று அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த வித்தகர் இவர்.
வேலூர் மறைமாவட்ட முதன்மைக் குருவாக (1997-1999), பள்ளியின் மேலாளராக (1999), மறைமாவட்ட வேந்தராக (1999-2002) நிர்வாகத்திலும் தம் திறம் தேர்ந்தார்.
ஆகஸ்டு 28, 2002
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் ஜூலை 10, 2002 அன்று கோவை மறைமாவட்ட ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இம்மறைமாவட்டத்திற்காக ஆகஸ்டு 28, 2002 அன்று திருப்பொழிவுச் செய்யப்பட்டார். இருபது ஆண்டுகள் கோவை மறைமாவட்டத்தின் ஆயராக சீரும் சிறப்புமாக தம் நிறை குருத்துவத்தில் திறம்பட வழிநடத்தி வருகிறார்.
இவர்தம் மேய்ப்புப் பணியில் 38 புதிய ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன; 33 ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஏழு புதிய பங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை மாதா திருத்தலம் பசிலிக்காவாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு புதியத் திருத்தலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஐந்துக்கும் மேற்பட்ட ஆராதனை ஆலயங்களும் ஒரு கல்லறை கோவிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 39 பங்குத்தந்தையர் இல்லங்கள் கட்டப்பட்டுள்ளன. 23 திருமணக் கூடங்களும், ஏழு மணிக்கூண்டுகளும், 89க்கும் மேற்பட்ட மரியன்னை கெபிகளும், 28க்கும் மேற்பட்ட கொடிமரங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆன்மீக அளவிலும் மறைவட்டந்தோறும் மறுமலர்ச்சி! ஒவ்வொரு பங்கிலும் ஆன்மீகப் புதுப்பித்தலுக்கும் விசுவாச மறுமலர்ச்சிக்கும் வித்திடப்பட்டுள்ளது. மறைமாவட்ட சமூகப் பணி மையங்கள் மூலம் திரளான எண்ணிக்கையில் ஏழைகளின் வாழ்வில் பொருளாதார ஈடேற்றம் எட்டப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மாணவ - மாணவிகளுக்கு உயர்கல்வி கற்பதற்கு கல்வி உதவித் தொகையும், மேல்படிப்பிற்கான உதவித் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டபோதும் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் நல்ல சமாரியன்களாக உதவிக்கரங்கள் நீட்டப்பட்டுள்ளது. பொருளாதாரத்திலும் அருளாதாரத்திலும் சமநிலையில் ஆயர்தம் விருதுவாக்கிற்கேற்ப கிறிஸ்துவை வாழ்ந்து பகிர்வதற்கான அனைத்துவிதமான முயற்சிகளும் செயல்பாடுகளும் கசடற முன்னெடுக்கப்பட்டுள்ளன. காலத்தின் அறிகுறிகளை நல்லாயனாக ஆயரும் அவர்தம் ஆலோசகர்களும் அறிந்துணர்ந்து, கோவை மறைமாவட்டம் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றி பெற்றுள்ளது என்றால் அது மிகையன்று.
கடந்த இருபது ஆண்டுகளாக, தம் கோவை மந்தையை பசும்புல்வெளியிலும் நீரோடைக்கருகிலும் வழிநடத்தி, எல்லாரும் இறையாட்சிக்கான கிறிஸ்துவின் அடிச்சுவட்டில் உழைத்து வரும் மேதகு ஆயர் தாமஸ் அக்வினாஸ் அவர்களின் தலைமைத்துவ மேய்ப்புப்பணி சிறக்க நாம் செபிப்போம்.
ஆயர் எந்த நிலையிலும் தாம் புகழப்படுவதையும் நன்றி பாராட்டப்படுவதையும் விரும்பாதவர். இருப்பினும் ஆயர்தம் பணி சிறக்க நம் செபக்கரங்கள் தேவை என்ற அடிப்படையில் அவர்தம் நலவிரும்பிகளின் விருப்பத்தின்பேரில் இவருக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தி, இவர்தம் ஆயர்பணி சிறக்க நாம் செபிப்பதற்காக இவ்விதழ் வெளிவருகிறது. மேதகு ஆயருக்காகவும் அவர்தம் கோவை மறைமாவட்ட அருள்பணியாளர்கள், துறவியர், மற்றும் இறைமக்களுக்காகவும் நாம் செபிப்போம்.