கொஞ்சம் பின்னோக்கிச் செல்வோம் : 2002 குஜராத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகள் ஏறத்தாழ 2000 இசுலாமியர்: ஆண்கள், பெண்கள், குழந்தைகள் இவர்களுள் அடக்கம்.
முன்னாள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இஷான் ஜாப்ரி கலகக்காரர்களால் கொல்லப்படுகிறார். தன் கணவரின் கொலையால் பாதிக்கப்பட்ட அவர் மனைவி, சோர்ந்து போகாமல் நீதி வேண்டி சட்டத்தின் வழி போராடினார். மத வெறியூட்டப்பட்ட கலவரக்காரர்கள் மட்டுமே தன் கணவரின் கோரக் கொலைக்கு காரணமல்லவென்றும், அரசுக்கும், அரசின் கைப்பாவையான காவல்துறைக்கும் பொறுப்பு உண்டு என்று, விடாது போராடியவர் தீரமிக்க இசுலாமியப் பெண்மணி ஷாகியா ஜாப்ரி. கோத்ரா இரயில் எரிப்புக்குப்பின் நடந்த கோரக் கொலைகளுக்கு இந்துக்களின் கோபமே என காரணம் காட்டிய மோடி, அவர்கள் கோபம் தீரும் வரை யாரும் தலையிட வேண்டாம் என்பது போன்ற சைகை காட்டியவர், மானுடத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றம் (crime against humanity) என்ற பெயரில் மிகப்பெரிய விசாரணை அறிக்கையை நீதியரசர் கிருஷ்ண அய்யர் தலைமையிலான விசாரணைக்குழு தந்தது.
அன்றைய குஜராத் அரசின் உயர் போலீஸ் அதிகாரி ஸ்ரீகுமார் காவல்துறையின் செயற்பாடுகளையும், அரசியலாரும், காவல் துறையும் கை கோர்த்து கொலைகளை நிகழ்த்துவதற்கு துணை போயினர் என்ற உண்மையையும் வெளிக்கொணர்ந்தார். (ஸ்ரீகுமார் அவர்களின் நேர்காணல் ‘நம் வாழ்வி’லும் வெளிவந்துள்ளது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்).
மனித உரிமைத் தளத்தில் குறிப்பாக, இன்றைய மதவாதிகளை அனைத்துக் கட்டங்களிலும் தனது சீரிய செயற்பாட்டால் அம்பலப்படுத்தி வரும் வழக்கறிஞர் டீஸ்டா செடல்வாட் (இவரைப்பற்றிய கட்டுரையும் ‘நம் வாழ்’வில் இடம் பெற்றதை பலரும் பாராட்டினர்) குஜராத் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட அனைத்து வகை மத வெறித்தனத்தையும் தொடர்ந்து, அம்பலப்படுத்தி வந்த டீஸ்டா, பாதிக்கப்பட்டோரை நேரில் சென்று, அவர்களை ஆற்றல்படுத்தி, பயம் தெளிவித்து, சதிகாரர்களை அம்பலப்படுத்தினார். மதவாதிகள், பாசிஸ்டுகள் என்பதை அறிந்திருந்தும், தைரியத்தோடு, போராடினார். கொலை செய்யப்பட்ட ஜாப்ரியின் மனைவிக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வந்த இவர், மோடி அரசால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டார். இவரின் தொண்டு நிறுவனம் தீவிரமாகக் கண்காணிப்பிற்குள்ளானது. பலமுறை கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்தார். இவர் ஒரு வழக்கறிஞர் இப்பணியை ஒரு மிஷனாக நடத்தியவர்.
இப்போது என்ன நடந்தது?
இஷான் ஜாப்ரி கொலை வழக்கில், அவர் மனைவியின் விடாப்பிடியான தொடர் நீதி மன்றப் போருக்கு துணை நின்ற செடல்வாட் பொய்யான செய்திகளை உறுதியற்ற, ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளைத் தயாரித்தார் என்ற குற்றச் சாட்டை, நீதிமன்றமே தீர்ப்பாக அளித்து, டீஸ்டாவையும், ஸ்ரீகுமாரையும் சிறை வைத்துள்ளது. நீதி மன்றங்களில் வழக்குரைஞர்களால் வைக்கப்படும் வழக்குகள் ஒருவர்க்கு வெற்றியைத் தரலாம். எதிர் வழக்குரைஞர்க்கு தோல்வியைத் தரலாம். தோல்விக்கு காரணமாக காட்டப்பட்டவரை சிறைக்கு அனுப்புவது என்ன நியாயம்?
வழக்குரைக்கும் அனைத்து வழக்குரைஞர்களும் நீதியின் பால் தாகமுள்ளனரா? இந்திய நீதிமன்றத் தீர்ப்புகளில் டீஸ்டாவையும், ஸ்ரீகுமாரையும் சிறைக்கு அனுப்புவதில் எந்த முகாந்திரமும் இல்லையே. முழுக்க முழுக்க அரசியல் நோக்கில் சொல்லப்பட்ட தீர்ப்பில், நீதிமன்றம் கொச்சைப்படுத்தப்படவில்லையா?
இந்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீதி வழுவாமல் செயற்படவேண்டிய நீதிமன்றங்கள் இவ்வாறு வலுவிழந்து போதல் தரும் நீண்டகால செய்தி என்ன?
உண்மையை வெளிக்கொணர வேண்டி, சளைக்காமல் உழைத்த இருவர் இன்று சிறைக்கம்பிகளுக்குள் வாழ வேண்டியிருப்பது இந்த நாட்டு ஜனநாயகத்துக்கு பெருத்த அவமானமில்லையா?
அரசியலமைப்புச் சட்டம் தரும் மதிப்பீடுகள் சுதந்திர நாட்டின் வலுவான அடையாளம் என்றால், இந்த அடையாளத்தை மறைத்து எதைக் கொண்டு நிறைவு செய்யப் போகிறோம்?
அண்மை நீதிமன்றத் தீர்ப்புகள் பல மக்களிடம் நம்பகத் தன்மையை இழந்து வருதல் கண்கூடு. ஜனநாயகம் காக்க நிறுவப்பட்ட நிறுவனங்கள் வெறும் கட்டிடங்கள் அல்ல; கட்டிடம் எனும் வெளித்தோற்றத்தின் உள்ளடக்கம், நோக்கு அல்லது இலக்கு எனும் கொள்கையாகும்.
இக்கொள்கைகள்தாம் நிறுவனங்களின் உள்ளரண்; இவ்வுள்ளரண் உடைக்கப்படுமாயின் ஓங்கி உயர்ந்த வெளி அமைப்பிற்கு என்ன பயன்?
இந்து ஆங்கில நாளிதழில் (16.08.22) இதைப் போன்று இன்னொரு அதிர்ச்சி தரும் செய்தியொன்று.
இச்செய்தியும் 2002 இல், குஜராத்தில் அரங்கேற்றப்பட்ட படுகொலை தொடர்பானது தான். இங்கே பாதிக்கப்பட்ட பெண் பில்கிஸ் பானோ. 2002 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 3 ஆம் நாள் பில்கிஸ் பானோ கூறுவதைக் கேளுங்கள்: “அவர்கள் 25 பேருக்கு மேல் இருந்தார்கள். அவர்களின் கைகளில் கத்தி, கம்பு அரிவாள். எங்கள் கூட்டத்தில் 4 பேர்தான் ஆண்கள். இவர்கள் பெண்கள் பக்கம் வந்தார்கள். எங்கள் ஆடைகளை கிழித்து, எறிந்து எங்களை நிர்வாணப்படுத்தினர். ஒவ்வொரு பெண்ணாக மானபங்கப்படுத்தினார்கள். பிறகு, அடித்து கொன்றார்கள். என் கையிலிருந்த குழந்தை சலேகாவை பறித்து, தரையில் அடித்து கொன்றார்கள். என்னை மூன்று பேர் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தார்கள்.
பில்கிஸ் பானோ விட்டு விடவில்லை. தொடர்ந்து நீதிமன்றங்களை நாடினாள். உறுதியின் மறுபெயராம் பில்கிஸ் தொடர்ந்து போராடினாள். இவள் நம்பிக்கையின் அடையாளம் மட்டுமல்ல; தைரியத்தின் அடையாளமும் கூட.
ஆறு ஆண்டுகள் போராடி தாக்குப் பிடித்து, உறுதியாக நின்று பில்கிஸ் பானோ வெற்றி பெற்றாள்.
கொலைக் குற்றம், பாலியல் பலாத்காரம் ஆகிய இரு குற்றங்களுக்காக 11 பேருக்கும் ஆயுள் தண்டனையும், 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஒரே சமயத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சோமாபாய் கோரி என்ற போலீசுக்கு 3 வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. (ஆதாரம்: பில்கிஸ் பானோ உறுதியின் மறுபெயர். - மக்கள் கண்காணிப்பகம் வெளியீடு, மதுரை) ஆனால், இன்று நடந்தது என்ன?
இந்து நாளிதழின் ஒரு ஓரத்தில் தரப்பட்டிருக்கும் செய்தியைப் பாருங்கள்.
“பில்கிஸ் பானோ வழக்கில் சிறைபட்டவர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். இவர்களை விடுதலை செய்தது எது? விடுதலை செய்தவர்கள் யார்? சிறை வைக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்ய குஜராத் அரசு ஒரு குழுவை நியமித்ததாம். அக்குழு இவர்களை விடுதலை செய்ய பரிந்துரைத்ததாம். அப்பரிந்துரையின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் அளித்த பரிந்துரையில், இக்குற்றவாளிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் குற்றவாளிகள் என, சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இவர்களின் குற்றம் என்ன? கூட்டுப்பாலியல் பலாத்காரம்; பில்கிஸ் பானோவின் குடும்பத்தினர் ஏழு பேர் கொலை செய்யப்பட்டமை!! மாநில அரசு வெகுவேகமாக பரிந்துரையை ஏற்று, குற்றவாளிகளை விடுதலை செய்கிறது.
2008 இல் பில்கிஸ் பானோ வென்றாள். 2022 இந்திய சுதந்திர நாளன்று பில்கிஸ் தோற்றுப் போனாள். கிடைத்த நீதியும் பறிபோயிற்று.
நீதிமன்றங்கள் தந்த தீர்ப்புகள் பல நம்பிக்கை தந்த நேரமும் உண்டு. நீதிமன்றங்கள் சுதந்திரமாகச் செயல்படாமல்போன காலங்கள் இருக்கலாம். ஆனால், நீதிமன்றங்களின் செயற்பாடுகள் இருக்கின்ற அரசியலுக்கு ஏற்ப, வளைந்து கொடுக்குமாயின் நீதிமன்றங்கள் என்ற நிறுவனங்களின் ஏற்புடைமைதான் என்ன?
நிறுவனங்களின் நோக்கம் மதிக்கப்பட வேண்டும். நிறுவனங்களின் நோக்கம் உன்னதமானது தான். வாழ்வின் உயர்ந்த மதிப்பீடுகளின் உள்ளடக்கம் ஜனநாயகமே. இந்த ஜனநாயகம் உருபெற வேண்டுமாயின் அதற்கு உயிர் கொடுக்க நிறுவனங்களின் தேவையை உணர்ந்தவர்கள் நம் தலைவர்கள் நிறுவனங்களை கட்டமைத்தார்கள்.
இன்றைய நிறுவனச் சீரழிவை ஜனநாயக அரசே முன்னின்று சீரழித்து வருவதைப் பார்க்கிறோம்.
அரசியலுக்கும் அறமுண்டு, அறவழியற்ற அரசியலை எத்தனை நாள் மக்கள் கண்டும் காணாதிருப்பர்?
காலஞ்சென்ற பிரபல அரசியல் அறிஞர் ரஜினி கோத்தாரி அவர்கள், இந்திய அரசியல் பற்றி எடுத்துக்கூறும் கருத்தொன்று இங்கு சிந்திக்க வேண்டுவது:
இந்திய ஜனநாயகம் சகோதரத்துவம், சமத்துவம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் கட்டப்படவில்லை. இம்முழக்கங்களைக் கட்டிக் காக்க வேண்டிய போராட்டத்தையும் முன்வைக்கவில்லை.
இந்தியச் சமூக அமைப்பில் எந்த மாற்றங்களையும் செய்யாமல் அல்லது அதற்கான கோரிக்கை கூட முன்வைக்காமல், ஜனநாயகத்தை முன்நிறுத்தினோம். ஜனநாயகம் அடித்தட்டு மக்களின் கோரிக்கையாக எழவில்லை. ஜனநாயகம் எனும் நாற்று, ஜனநாயத்துக்கான எந்த முகாந்திரமும் இல்லாத ஒரு கலாச்சாரத்தில் நடப்பட்டது என்பார்.
இவர் கூறும் கருத்தை ஆய்வு செய்யும் போது, இவ்வுண்மை புலப்படும். ஜனநாயகப் பண்பற்ற சமூகத்தில் நடப்பட்ட ஜனநாயக நிறுவனங்கள் உள்ளீடற்ற நிறுவனங்களாக, ஜனநாயகப் பண்புகளைக் காக்கும் திறனற்ற நிறுவனங்களாகவே உள்ளன.
நிறுவனச் சீரழிவுகள், உரிய நோக்கத்தை நிறைவேற்றும் திறனிழந்த சூழலில், குடிமக்களின் நம்பிக்கை சிதைந்த நிலையில் அரசை, அரசின் நிறுவனங்களை குடிமைச் சமூக அமைப்புகளை கயவர்களும், மதவாதிகளும், கிரிமினல்களும் கை பற்றி விடுகின்றனர். தெரிவு செய்யப்படும் கட்சியின் பலம் களவாடப்படுவதும், கோடி கோடியாய் பிரதிநிதிகள் பேரம் பேசப்படுவதும், நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகளாகிவிட்டன.
மதுரையில் அண்மையில் அமைச்சர் மீது வீசப்பட்ட செருப்பு வெறும் செய்தியாக மட்டுமே பார்க்கப்படும் அவலம்.
பீகாரில் நிதிஷ்குமாரின் அரசியல் விளையாட்டு பா.ஜ.கவுக்குப் பாடமாகலாம். ஆனால், அவரின் முந்தைய அரசியல் மதவாதத்தை நியாயப்படுத்தும் அரசியலுக்கு வித்திட்டதை எப்படி மறக்க முடியும்.
வெறும் கும்பலைத் திரட்டி, பலத்தைக் காட்டும் எடப்பாடிகள் எப்படி உருவாகின்றனர். வெறும் கும்பலரசியலுக்கு வழியமைத்த அரசியல் நாடகத்துக்கு எப்போது எங்கு முடிவு கட்டப் போகிறோம்?
இன்னும் நிறையவே சிந்திப்போமா? மோடி கொண்டாடும் சுதந்திர தின அரசியலும் இதன் ஒரு பகுதியே.