திருப்பலி முன்னுரை
இன்று நாம் பொதுக் காலத்தின் 22 ஆவது ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்கின்றோம். யூத தலைவர்கள், பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் மக்கள் ஒன்றாக கூடும் பொது நிகழ்வுகளில் தாங்கள் உயர்த்தப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும், முதன்மையான இடம் அளிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். யூத சட்ட திட்டங்களையும், அதற்கேற்றவாறு இவர்கள் வடிவமைத்திருந்தார்கள். இவ்வாறு, அனைவருக்கும் முன்பாக உயர்த்தப்படுபவர்கள், மதிக்கப்படுபவர்கள், முதன்மையான இடங்கள் அளிக்கப்படுபவர்களுக்கு மட்டுமே, விண்ணக அரசிலும் முதன்மையான இடம் அளிக்கப்படும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து வந்தார்கள். ஆண்டவர் இயேசு இந்த எண்ணத்தை உடைக்கிறார். தம்மைத்தாமே உயர்த்திக் கொள்பவர் அல்ல; மாறாக, எவர் ஒருவர் தம்மைத்தாமே தாழ்த்திக் கொள்கிறாரோ அவராலே ஆண்டவர் மாட்சியடைகிறார் என்ற, புதிய கருத்தை இவர்களுக்கு போதிக்கிறார். ஒருவர் தம்மைத்தாமே உயர்த்திக் கொள்ளுகிறபோது, அவர் கடவுளின் பிரசன்னத்திலிருந்து பிரிந்து போகிறார். ஆனால், ஒருவர் தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்ளுகிறபோது, கடவுளோடு நெருங்கிய உறவில் இணைகிறார். இதை நாம் விவிலியத்தில் கண்கூடாய் காண்கிறோம். தன்னை உயர்த்திக்கொண்ட பரிசேயர் ஆண்டவரின் வெறுப்புக்கு ஆளாகிறார். ஆனால், தம்மை தாழ்த்திக்கொண்ட ஆயக்காரர் ஆண்டவரின் அன்புக்கு ஆளாகிறார். தம்மைத் தாமே உயர்த்திக் கொள்ள நினைத்த ஆதாம், ஆண்டவரின் பிரசன்னத்திலிருந்து வெளியே துரத்தப்படுகிறார். எனவே, தாழ்ச்சி எனும் புண்ணியத்தால் புனிதர்களாக மாறிட வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை
எதை செய்தாலும் அதை பணிவோடு செய்ய வேண்டும். ஏனெனில், இறுமாப்பு என்னும் கொடிய நோய்க்கு இவ்வுலகில் மருந்தில்லை. எவர் ஒருவர் தன்னை பிறர் முன்பு தாழ்த்திக்கொள்கிறாரோ, அவரால் இறைவன் மாட்சியடைகிறார் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக்கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
சீனாய் மலையடியிலே இஸ்ரயேல் மக்கள் வேற்று தெய்வங்களை வணங்கி, இறைவனின் வெறுப்பிற்கு ஆளானார்கள். ஆனால், இந்த சீயோன் மலையிலே ஆண்டவரைக்கண்டு, அவரின் ஆசீர்வாதத்தை பெற போகிறார்கள் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.
மன்றாட்டுகள்
1. எங்கள் விண்ணகத் தந்தையே! உமது திரு அவையை வழிநடத்தும் உம் திருப்பணியாளர்கள், உமது திருமகன் இயேசுவைப் போல, தாழ்ச்சி என்னும் புண்ணியத்தை ஆடையாக அணிந்து, உமது இறையரசை இவ்வுலகில் விதைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் பரம்பொருளே! உலக நாடுகளை ஆளும் தலைவர்கள், யார் பெரியவர் என்ற எண்ணத்தினால் எழும் போர் குழப்பங்களை தவிர்த்து, அனைவரும் சமம் என்ற எண்ணத்தோடு ஆட்சி புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் வானக தந்தையே! என்னால் மட்டுமே இப்பங்கு இயங்குகிறது என்ற எண்ணத்தை தவிர்த்து, எங்கள் பங்கு தந்தையர்கள், எம் பங்கின் வளர்ச்சிக்காக எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் நாங்கள் ஒத்துழைப்பு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. எல்லாம் வல்லவரே! எங்கள் இல்லங்களிலும், பங்கிலும் இருக்கும் எம் குழந்தைகள், சிறு வயது முதலே பெரியவர்களுக்கு கீழ்ப்படிபவர்களாகவும், தாழ்ச்சி எனும் புண்ணியத்தை கடைபிடிப்பவர்களாகவும் வாழ்ந்திட வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. வரங்களை பொழிபவரே! நாங்கள் பிறருக்காக செய்யும் உதவிகளில், எவ்வித கைம்மாறு எதிர்பாராமல் செய்திடவும், உண்மையாகவே தேவையில் இருப்போருக்கு எங்கள் கரங்களை நீட்டி உதவி புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.