Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் நல்லிணக்க வாழ்வுக்கு உரையாடல் அடித்தளம்
Thursday, 25 Aug 2022 12:16 pm
Namvazhvu

Namvazhvu

நிக்கராகுவா நாட்டில், ஆயர்கள், அருள்பணியாளர்கள், ஊடகம், அரசு-சாரா அமைப்புகள் போன்ற அனைத்தும் அரசின் அடக்குமுறைக்கு தொடர்ந்து உள்ளாகி வருவது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்ஞாயிறன்று மிகுந்த வேதனையோடு தெரிவித்தார்.

ஆகஸ்ட் 21,  ஞாயிறு நண்பகலில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கியபின்னர், நிக்கராகுவா தலத்திருஅவை எதிர்கொள்ளும் பதட்டநிலைகள் குறித்து எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டிற்காகச் செபிக்குமாறு அழைப்புவிடுத்துள்ளார்.

நிக்கராகுவா தலத்திருஅவை, அதன் நிறுவனங்கள் மற்றும், மக்கள் மீது அரசு தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்துவரும்வேளை, அந்நாட்டு நிலவரம் குறித்து தான் தொடர்ந்து கவலையோடு கவனித்து வருவதாகவும், திறந்தமனம்கொண்ட மற்றும், உண்மையான உரையாடல் வழியாக, அனைவரும் நல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து வாழ அந்நாட்டில் வழியமைக்கப்படும் என்று தான் நம்புவதாகவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகள் அந்நாட்டினரின் இதயங்களில் தூண்டப்படுவதற்கு, அந்நாட்டு மக்கள் அதிகமாக அன்புகூர்கின்ற தூய்மைமிகு அமல அன்னையின் பரிந்துரையை  இறைஞ்சுவோம் என்றும் திருப்பயணிகளிடம் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

அந்நாட்டில் தலத்திருஅவையும், அதனைச் சார்ந்தவர்களும் அந்நாட்டு அரசின் எதிர்தரப்புக்கு ஆதரவளிக்கிறார்கள் என்ற சந்தேகத்தில், அவர்களுக்கு எதிரான இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிக்கராகுவாவின் டானியேல் ஒர்த்தேகா அரசின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராகப் பொதுப்படையாகப் பேசிவந்த அந்நாட்டு மட்டாகால்பா மறைமாவட்ட ஆயர் ரொலாந்தோ அல்வாரெஸ் அவர்களை, தேசிய காவல்துறை இம்மாதம் நான்காம் தேதியிலிருந்து மறைமாவட்ட இல்லத்தில் வீட்டுக் காவலில் வைத்துள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 19, வெள்ளி இரவில் தேசிய காவல்துறை மறைமாவட்ட இல்லத்தைச் சூறையாடி, ஆயரோடு இருந்த எட்டுப் பேரை இராணுவ முகாமில் வைத்துள்ளது என செய்திகள் கூறுகின்றன.